பேட்டரி தொழிலுக்கு இடையூறாகும் ஜிஎஸ்டி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால்,  கார்பன் அடிச்சுவடை குறைக்கும் நோக்கில் உலக நாடுகள் பயணிக்கத் தொடங்கியுள்ளன.
பேட்டரி தொழிலுக்கு இடையூறாகும் ஜிஎஸ்டி

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால்,  கார்பன் அடிச்சுவடை குறைக்கும் நோக்கில் உலக நாடுகள் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அதற்காகவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு முக்கியத்துவம் பெருகி வருகிறது.  

சூரிய ஒளி, காற்று போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. புதுப்பிக்கத்தக்க மின்னாற்றலைச் சேமித்து வைத்துக் கொள்வதற்கு பேட்டரி தேவைப்படுகிறது.
வீடுகள், தொழிற்சாலைகள்,  அலுவலகங்களில் சூரியஒளி மின் உற்பத்தி பெருகிவரும் நிலையில், சுற்றுச்சூழலைப் பாதிக்கக் கூடிய பெட்ரோல், டீசல் போன்ற புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக, மின்சாரத்தைப் பயன்படுத்தும் - குறிப்பாக சூரிய ஒளி மின்னாற்றலைப் பயன்படுத்தி இயக்கப்படும் மின்சார வாகனங்களைப் பெருக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. சூரிய ஒளி மின்னாற்றலைச் சேமித்து வைக்க மின்கலன் (பேட்டரி) தேவைப்படுவதால், வீடுகள், தொழிற்சாலைகள், மின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் பேட்டரி முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.  

உலக அளவில் பேட்டரி தொழில்நுட்பத்தின் மேம்பாட்டுக்காக ஆய்வுகளில் கடும் போட்டி நிலவிவருகிறது. இதையடுத்து, பேட்டரி உற்பத்தித் தொழில் வேகமாக வளர்ச்சி அடைந்துவருகிறது. உலக அளவில் 2024-ஆம் ஆண்டுக்குள் 160 பில்லியன் அமெரிக்க டாலராக வளரும் வாய்ப்புள்ள பேட்டரி தொழில், 2030-ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலராக உயரும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, 2024-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் பேட்டரி தொழில் 75 சதவீத வளர்ச்சியை அடையும் என்று கூறப்படுகிறது. அதாவது, இந்தியாவின் மின்சேமிப்புச்சந்தை 50 பில்லியன் டாலராக உயரும் வாய்ப்பிருக்கிறது.

இந்தியாவில் மின் வாகனங்களின் உற்பத்தி பெருகிவருவதும், தானியங்கி வாகனத் துறையின் வளர்ச்சியும், வீடு மற்றும் தொழிற்சாலைகளின் மின் தேவையும் பேட்டரி தொழில் வளர்ச்சிக்கு நம்பிக்கை தருவனவாக உள்ளன.
இன்றைய அளவில்,  இந்தியாவில் இந்தத் துறையில் ஐந்து பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளன.  எனினும், பெருவாரியான சந்தை வாய்ப்பை பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் நிறுவனங்களே கைப்பற்றி வருகின்றன.

ஆனால், பேட்டரி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பால் திணறி வருகின்றன. பேட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதே, இத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் தடங்கலாக இருந்துவருகின்றது என்று கூறப்படுகிறது.

இது பற்றி கர்நாடக சிறுதொழில் சங்கத்தின் ஜிஎஸ்டி மற்றும் சுங்க வரிக் குழுவின் முன்னாள் இணைத் தலைவரும், ஆர்.ஆர்.இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநருமான ஆர்.துரை கூறுகையில், "கால மாற்றங்களுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்கள் உருவாவது இயல்பானது. அவற்றை மக்கள் ஏற்றுக்கொள்வதும் தவிர்க்க முடியாதது. அப்படித்தான், சூரிய ஒளி மின்னாற்றல் உற்பத்தியில் நாம் அதிக கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறோம். இது வரவேற்க வேண்டிய ஒன்று. 

ஆற்றலைச் சேமித்து வைக்க மின்கலங்கள் (பேட்டரி) தேவைப்படுகிறது. மின்னாற்றலின் எதிர்காலம் பேட்டரியில் தான் உள்ளது.  எனவே, பேட்டரி தொழிலுக்கு சில சலுகைகளை வழங்கினால், அது சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மின்னாற்றல் பயன்பாட்டுக்கு வழிவகுக்கும். 

மின் வாகனங்களில் பயன்படுத்துவதற்காக ஆண்டாண்டு காலமாகப் பயன்படுத்திவரும் ஈய-அமில மின்கலங்களுக்கு (Lead-acid battery) பதிலாக, லித்தியம் அயனி மின்கலங்களை ( Lithium-ion battery) இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளனர். லித்தியம் அயனி மின்கலங்கள்(பேட்டரி) செயல் திறன் மிகுந்ததாக இருந்தாலும், அவை விலை உயர்ந்தவை, மறுசுழற்சிக்கு ஒவ்வாதவை,  வெடிக்கும் ஆபத்து கொண்டதாகும்.  

லித்தியம் பேட்டரிகளை உற்பத்தி செய்ய அதிக அளவிலான முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதை பெரு நிறுவனங்களால் மட்டுமே உற்பத்தி செய்ய முடியும். ஆனால், தற்போது அதிக அளவில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய  ஈய-அமில மின்கலங்கள் உற்பத்தியில் சிறுதொழில் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவை, விலை மலிவானவை, அதிக செயல்திறன் கொண்டவை, மறுசுழற்சிக்கு உகந்ததாகும்.  

அதாவது, இவற்றின் பொருள்களில் 60 சதவீதத்தை மறுசுழற்சி செய்ய இயலும். லித்தியம் பேட்டரி அத்தியாவசியமானது என்றாலும், அதன் மூலப்பொருள் இந்தியாவில் கிடைப்பதில்லை.  இதற்கு சீனா, ஜெர்மனி போன்ற நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். 

லித்தியம் பேட்டரிகளின் தேவை அதிகரித்தாலும்,  ஈய அமில பேட்டரிகளின் தேவை குறையாது. பேட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டிவரி விதிக்கப்பட்டுள்ளதால், பேட்டரி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறுதொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளி இன்வர்டர்கள் (நேர்மாற்றி),  சூரியஒளி பேனல்கள் (மின்தகடுகள்) மீது வெறும் 5 சதவீத ஜிஎஸ்டி மட்டுமே விதிக்கப்படுகிறது. ஆனால் இவற்றுடன் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கு 28 சதவீத ஜிஎஸ்டிவரி. 

இதனால் சூரிய ஒளி மின்னாற்றலைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்த வண்ணமே உள்ளது. எனவே, சூரியஒளி இன்வர்டர்கள், பேனல்களுடன் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மீதான வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

அதேபோல, சாதாரண இன்வர்டர்கள் மற்றும் யூபிஎஸ் மீதான வரி 18 சதவீதமாக இருந்தால்,  அத்துடன் பயன்படுத்தப்படும் பேட்டரி மீதான வரி 28 சதவீதமாக உள்ளது.  யூபிஎஸ், இன்வர்டர்களுடன் பயன்படுத்தப்படும் பேட்டரிக்கும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்.  அப்போதுதான் பேட்டரி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுதொழில் நிறுவனங்கள் பிழைக்கும், தழைக்கும்.  லித்தியம் பேட்டரி உற்பத்தியில் ஈடுபடுவதற்குத் தேவையான முதலீடுகளை குறைந்த வட்டியில் வங்கிக் கடனாகக் கொடுத்தால் மட்டுமே சிறுதொழில் நிறுவனங்கள், அதன் உற்பத்தியில் ஈடுபட இயலும். 

லித்தியம் பேட்டரிகளைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறையும் என்றாலும்,  அதில் ஆபத்து அதிகம் உள்ளது.  எனவே, பொதுமக்கள் பயணிக்கும் மின்சார வாகனங்களில் லித்தியம் பேட்டரிகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது அவசியமாகும். 

பேட்டரி உற்பத்தியில் 1989-ஆம் ஆண்டு முதல் ஈடுபட்டு வருகிறேன். எனது நிறுவன பேட்டரிகளை ஆஸ்திரேலியா, ஜெர்மனி, சீனா, இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து  வருகிறேன்.  அந்த அனுபவத்தில் கூறுகிறேன், பேட்டரி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில்களைக் காக்க மத்திய அரசு உடனடியாக ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும்' என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com