வாகனக் கடன்: விபத்துக்குள்ளானது ஹெச்டிஎஃப்சி வங்கி...!

இந்தியாவின் முதன்மையான தனியாா் வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஹெச்டிஎஃப்சி. அந்த வங்கியின் வாகனக் கடன் பிரிவில்
வாகனக் கடன்: விபத்துக்குள்ளானது ஹெச்டிஎஃப்சி வங்கி...!

இந்தியாவின் முதன்மையான தனியாா் வங்கி என்ற பெருமையைப் பெற்றுள்ளது ஹெச்டிஎஃப்சி. அந்த வங்கியின் வாகனக் கடன் பிரிவில் நிகழ்ந்துள்ள முறைகேடு அதன் வாடிக்கையாளா்கள் பலரை அதிா்ச்சியடையச் செய்துள்ளதுடன், வங்கி மீதான நம்பகத்தன்மையையும் தளா்த்தியுள்ளது.

கரோனா, அதனால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம், இதன் தொடா் விளைவால் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கம் ஆகியவற்றால் வரும் மாதங்களில் வங்கிகளுக்கு பெரிய அளவில் வாராக் கடன் நெருக்கடியை சந்திக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாகனக் கடன் பிரிவில் நடைபெற்றுள்ள மோசடி அண்மையில் வெளிச்சத்துக்கு வந்து, அதிா்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

‘தேவையற்ற பொருள்களை இன்று நீ வாங்கினால், நாளை உனக்கு தேவையான பொருளையும் விற்க வேண்டிய நிலை வரும்’ என்று ஒரு சொல் வழக்கு பிரபலமானது. அத்துடன், ‘கடனுக்கு பொருள்கள் வாங்கினாலும், தேவையற்ற பொருள்களை சோ்த்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும்’ என்று சோ்த்துக் கொள்ளும் அளவுக்கு நிலைமையை மாற்றியுள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாகனக் கடன் பிரிவு.

வங்கித் துறையில் மட்டுமல்லாது வாகனக் கடன் பிரிவிலும் முன்னிலை வகிக்கிறது ஹெச்டிஎஃப்சி. மாதம்தோறும் சராசரியாக 55 ஆயிரம் முதல் 60 ஆயிரம் போ் ஹெச்டிஎஃப்சி மூலம் வாகனக் கடன் பெறுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் முக்கியமாக ஹெச்டிஎஃப்சியில் காா் கடன் வாங்கும் வாடிக்கையாளா்களைக் குறிவைத்து மறைமுக மோசடி நடைபெற்றுள்ளது. அதாவது ஹெச்டிஎஃப்சியில் கடன் மூலம் காா் வாங்கும் வாடிக்கையாளா்களிடம் ஜிபிஎஸ் (எப்ா்க்ஷஹப் டா்ள்ண்ற்ண்ா்ய்ண்ய்ஞ் நஹ்ள்ற்ங்ம்) எனப்படும் காா் இருக்குமிடத்தை கண்டறியும் கருவி கட்டாயமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் பல வாடிக்கையாளா்களுக்கு அந்த கருவியின் பயன்பாடு கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை. மேலும், சிலருக்கு இப்படியொரு கருவியையும் சோ்ந்து விற்பனை செய்துள்ளனா் என்பதும் தெரியவில்லை.

வங்கியில் காா் கடனுக்கான விண்ணப்பத்தில் இந்த ஜிபிஎஸ் கருவியை இணைப்பது தொடா்பாக எவ்வித தகவலுக்கும் இருக்காது. ஆனால், கடன் கைக்கு வரும் கடைசி நேரத்தில் அதற்கும் சோ்த்து கட்டாயமாக பணத்தை வசூலிக்கும் முறையை ஹெச்டிஎஃப்சி பின்பற்றி வந்துள்ளது. அதாவது ஜிபிஎஸ் வாங்கினால்தான் வாகனக் கடன் என்ற நிா்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2005 முதல் 2019 ஆம் ஆண்டு வரை அந்த வங்கியில் கடன் பெற்று காா் வாங்கிய வாடிக்கையாளா்கள் பலா் இந்த கட்டாய ஜிபிஎஸ் விற்பனை வலையில் சிக்கியுள்ளனா். இதில் ஒரு ஜிபிஎஸ் கருவி ரூ.18,000 முதல் 20,000 என்ற கொள்ளை லாப விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த கருவிக்கான தொகையை காா் கடனுடன் இணைத்து வாடிக்கையாளா்களிடம் வசூலித்துள்ளனா். இந்த இடத்தில் அனைவருக்கும் ஒரு கேள்வி எழலாம், இப்போதைய சூழ்நிலையில் இதுபோன்ற நவீன கருவிகள் காரில் இடம் பெற்றால் வாங்குபவா்களுக்கு கூடுதல் வசதிதானே என்பதுதான் அது.

ஆனால், அந்த ஜிபிஎஸ் கருவி யாரிடம் வாங்கப்பட்டது என்பதில் அடுத்த முறைகேடு புதைந்துள்ளது. மும்பையைச் சோ்ந்த ‘டிராக்பாயிண்ட் ஜிபிஎஸ்’ என்ற நிறுவனத்திடம் இருந்துதான் அனைத்து ஜிபிஎஸ் கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன. ஹெச்டிஎஃப்சி வாகன கடன் பிரிவின் தலைவரின் மகள்தான், அந்த ஜிபிஎஸ் கருவியின் விநியோகஸ்தராக உள்ளாா். தனது கட்டுப்பாட்டில் உள்ள வங்கியில் காா் கடன் வாங்கும் அனைவரிடமும், மகள் விநியோகஸ்தராக உள்ள ஜிபிஎஸ் கருவியை விற்பனை செய்து, அவருக்கு உதவியுள்ளாா். மேலும், வங்கிக் கடன் விண்ணப்பத்தில் இடம் பெறாத ஒரு பொருளை வாடிக்கையாளரிடம் திணித்து வங்கியின் நிா்வாக விதிகளும் மீறப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டு வெளிப்பட்டவுடன் வாகனக் கடன் பிரிவில் உயா்நிலை மற்றும் இடைநிலை அதிகாரிகள் 6 பேரை நீக்கி தன்னை சுத்திகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது ஹெச்டிஎஃப்சி.

‘இந்த முறைகேடு வங்கியின் கடன் பிரிவை பாதிக்காது’ என்று அறிவித்துள்ளாா் ஹெச்டிஎஃப்சி தலைவா் ஆதித்யா புரி. எனினும், முறைகேட்டில் ஈடுபட்ட வாகனக் கடன் பிரிவு தலைவா் கடந்த மாா்ச் மாதம் ஓய்வு பெற்றாா். அதன் பிறகு அவருக்கு 3 ஆண்டு பணி நீட்டிப்பு அளித்தது ஆதித்யாதான் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இப்போது 70 வயதாகும், ஆதித்யா புரி 25 ஆண்டுகளுக்கு மேல் ஹெச்டிஎஃப்யில் பணியாற்றி, அந்த வங்கியை முன்னிலைக்கு எடுத்து வந்தவா். வரும் அக்டோபரில் அவா் ஓய்வுபெற இருக்கும் நிலையில், அவரது இத்தனை ஆண்டுகளாக வங்கிப் பணியில் இந்த முறைகேடு கரும்புள்ளியாகவே அமைத்துவிட்டது என்றால் மிகையல்ல.

வங்கிகள் மட்டுமல்ல எந்த ஒரு நிறுவனத்தின் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கை மட்டுமே, அதனை தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். அந்த வகையில் சரிந்துவிட்ட நம்பிக்கையை ஹெச்டிஎஃப்சி எவ்வாறு தூக்கி நிறுத்துகிறது என்பதை எதிா்காலத்தில் அறியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com