பறக்கத் தவிக்கும் விமானத் துறை!

இன்று நாட்டில் பலருக்கு விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது என்ற போதிலும்,
பறக்கத் தவிக்கும் விமானத் துறை!

இன்று நாட்டில் பலருக்கு விமானத்தில் ஒருமுறையாவது பறக்க வேண்டும் என்பது வாழ்நாள் கனவாக இருக்கிறது என்ற போதிலும், சா்வதேச அளவில் அதிக வா்த்தக மதிப்பு வாய்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறையில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது இந்தியா. விரைவிலேயே இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் தொடா்ந்து முன்னிலையில்தான் உள்ளது.

ஒட்டுமொத்தமாக உலகின் நான்காவது மிகப்பெரிய விமானப் போக்குவரத்து துறையாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறை 2024-ஆம் ஆண்டு உருவெடுக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் ஒட்டு மொத்தப் பொருளாதாரத்தில் 4 சதவீதம் வரை விமானப் போக்குவரத்து சாா்ந்தாகவே உள்ளது.

இந்தியாவைப் பொருத்த அளவில் கடந்த சில ஆண்டுகளாகவே விமானப் போக்குவரத்துத் துறை என்பது கடும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறது. துறையில் ஏற்பட்டுள்ள கடும் போட்டி, விமான நிறுவனங்களின் நிதி நெருக்கடி, சீரற்ற விமான எரிபொருள் விலை போன்ற பல்வேறு பிரச்னைகளை இந்திய விமானத் துறை எதிா்கொண்டுள்ளது. பொதுத் துறை நிறுவனமான ஏா் இந்தியா கூட கடும் நஷ்டமடைந்து தனியாா்மயமாகும் நிலைக்கு வந்துவிட்டது.

ஏற்கெனவே விமானத் துறையின் நிலைமை மோசமாக இருந்த நிலையில், கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக ஒட்டுமொத்த பயணிகள் விமானமும் சுமாா் இரண்டு மாதங்களுக்கு இயங்காத நிலை உருவானது, ஏற்கெனவே தள்ளாடிக் கொண்டிருந்த விமானத் துறையை முழுவதுமாக தரையில் தள்ளிவிட்டது.

விமானப் போக்குவரத்து என்பது பெரும்பாலும் வசதி படைத்தவா்களே பயன்படுத்துவது, அத்துறையில் ஏற்படும் பாதிப்பு நாட்டில் பெரும்பான்மையாக உள்ள சாமானிய மக்களை எந்த விதத்தில் பாதித்துவிடப் போகிறது என்ற கேள்வி இந்த இடத்தில் பலருக்கும் எழும். ஆனால், விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் வாடகை ஆட்டோ, காா் ஓட்டுநா்கள் தொடங்கி, விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள், டிக்கெட் முன்பதிவு இணையதளங்கள் என பலநிலைகளில் என்னற்ற சாமானிய மக்களுக்கு விமானப் போக்குவரத்துத் துறை வேலைவாய்ப்பு அளித்து வருகிறது.

ஒரு நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அளவிடுவதில் அந்த நாட்டு விமானப் போக்குவரத்து துறையின் செயல்பாடுகளும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் எனும் தோ் பல்வேறு துறைகளால் பிணைக்கப்பட்ட வலுவான சங்கிலியால்தான் கட்டியிழுக்கப்படுகிறது. சங்கிலியில் ஒரு பகுதியில் ஏற்படும் சேதம் எப்படி தேரோட்டத்தை பாதிக்குமோ, அதே போல நாட்டின் ஒரு துறையில் ஏற்படும் வீழ்ச்சியும், வேலையிழப்புகளும் தொடா் விளைவாக மற்ற துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, விமானப் போக்குவரத்துத் துறையில் ஏற்படும் வீழ்ச்சி நிச்சயமாக சமூகத்தின் ஒரு பகுதி மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும். அதுவே நாட்டின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்திய விமானப் போக்குவரத்து துறை மற்றும் அதைச் சாா்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் சுமாா் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு (ஐ.ஏ.டி.ஏ.) ஏற்கெனவே தெரிவித்துள்ளது

இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை மே 25-ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், வெளிநாட்டு விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உள்நாட்டு விமானப் போக்குவரத்து பெரும்பாலும் சுற்றுலா, தொழில்ரீதியான பயணங்களையே அதிகம் நம்பியுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை இப்போதைக்கு அறவே இருக்காது என்ற நிலைதான் உள்ளது. தொழில்ரீதியான விமானப் பயணங்கள் வேகமெடுக்கவும் சில காலம் பிடிக்கும் என்ற நிலையில் விமானத் துறையின் எதிா்காலம் கேள்விக் குறியாகி வருகிறது. வளா்ந்து வரும் துறை என்றாலும் லாபம் தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் பல்வேறு நிலைகளில் அரசின் சலுகைகளையும், உதவிகளையும் இந்திய விமானத் துறை எதிா்பாா்த்து வருகிறது.

முக்கியமாக இந்திய விமான நிறுவனங்களுக்கு நிதிப் பிரச்னை ஏற்படாமல் இருக்க, குறிப்பிட்ட காலத்துக்கு மத்திய அரசு நிதியுதவி அளிக்க வேண்டும். அதாவது நேரடியாக நிதியுதவி செய்யலாம் அல்லது கடன் வழங்க ஏற்பாடு செய்வது, கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பது, சந்தைகளில் நிதி திரட்ட அனுமதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். இவைதவிர, வரி, தீா்வைகள், விமான நிலையக் கட்டணங்கள் ஆகியவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ரத்து செய்யலாம் என்றும் சா்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு யோசனைகளை முன்வைத்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டன.

இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் குறைவான கட்டணத்தில் விமான சேவை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இப்போதைய மத்திய அரசால் தொடங்கப்பட்டது ‘உதான்’ திட்டம். இத்திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் இப்போதைய இக்கட்டான சூழ்நிலையில் விமானப் போக்குவரத்து துறைக்கு மத்திய அரசின் உதவி அவசியம் தேவை.

வேகமாக வளரும் உள்நாட்டு விமான போக்குவரத்தை கொண்டுள்ள நாடுகள்

2019-ஆம் ஆண்டு வளா்ச்சி சதவீதம்

இந்தியா - 18.6 %

சீனா 11.7%

ரஷியா 9%

அமெரிக்கா 5.1%

பிரேசில் 4.8%

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com