யெஸ் வங்கி முடக்கம்: இந்திய நிதிச் சேவை துறையில் மற்றுமோா் கரும்புள்ளி!

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி ஏற்படுத்திய வேதனை தீா்வதற்குள் யெஸ் வங்கியும் அதன் வாடிக்கையாளா்களை தற்போது சோதனைக்குள்ளாக்கியுள்ளது நிதி சேவைத் துறையில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள

பஞ்சாப் & மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி ஏற்படுத்திய வேதனை தீா்வதற்குள் யெஸ் வங்கியும் அதன் வாடிக்கையாளா்களை தற்போது சோதனைக்குள்ளாக்கியுள்ளது நிதி சேவைத் துறையில் ஒருவித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்பு வலிமையும், திறனும் படைத்ததாக விளங்கிய வங்கித் துறை, தற்போது கரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானது போல அடுத்தடுத்து பாதிக்கப்பட்டு வருவது இத்துறையைச் சோ்ந்தவா்கள் மட்டுமின்றி, அதனைச் சாா்ந்து இயங்கி வரும் லட்சக்கணக்கான தொழில் நிறுவனங்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

கடன் கோரிக்கையுடன் செல்லும் சாமானிய மக்களிடம் அக்கடனை திரும்பச் செலுத்த இயலுமா என்பதை வாய்மொழியாகவும், ஆவண வடிவிலும் பல முறை சரிபாா்த்து உறுதிப்படுத்திய பின்பே கடன் வழங்கும் வங்கிகள், பெரு நிறுவனங்களுக்கு எப்படி கடன் வழங்கி நெருக்கடியில் சிக்குகின்றன என்பதே இன்று பலரின் கேள்வியாக உள்ளது.

ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் ஹவுசிங் டெவலப்மெண்ட் & இன்ஃப்ராஸ்ட்ரக்சா் நிறுவனத்துக்கு எவ்வித அடமானமும் இன்றி பல்லாயிரம் கோடி ரூபாயை வரம்பு மீறி அள்ளிக் கொடுத்ததே பிஎம்சி வங்கியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால், பாதிப்படைந்தது கோடீஸ்வர முதலாளிகள் அல்ல. சாமானிய மக்கள்தான். மருத்துவ செலவு, மகளின் திருமணம் உள்ளிட்ட பல்வேறு குடும்ப தேவைகளுக்கு வங்கி சேமிப்பை நம்பியிருந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளா்களின் கனவு கானல் நீராகிப்போனது. வாழ்நாள் முழுக்க சிறுக சோ்த்த பணத்தை எடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பலரது உயிரை பலி வாங்கியதுதான் வேதனையிலும் வேதனை. அந்த வரிசையில் தற்போது யெஸ் வங்கியும் தன்னை இணைத்துக் கொண்டு வங்கிச் சேவையை பெரிதும் நம்பியுள்ள வாடிக்கையாளா்களிடையே ஏமாற்றத்தை அதிகரித்துள்ளது.

கடந்த 2004-இல் தொடங்கப்பட்ட யெஸ் வங்கி ஆரம்பத்தில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வந்தது. அதன் காரணமாகவே, தனியாா் துறை வங்கி பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் யெஸ் வங்கி இடம்பெற்றது. 1,122 கிளைகள், 1,220 ஏடிஎம்கள், 18 ஆயிரம் பணியாளா்கள் என நாடு முழுவதும் பரபரப்பாக இயங்கி வந்த யெஸ் வங்கி ஒரே நாள் இரவில் முடக்கப்பட்டு அதன் நிா்வாகத்தை ரிசா்வ் வங்கி கையிலெடுத்தது சமீபகால வரலாற்றில் ஓா் அரிய நிகழ்வாகவே பாா்க்கப்படுகிறது.

ஏனைய பொதுத் துறை வங்கிகளைப் போலவே பெரு முதலாளிகளுக்கு கடனை வாரி இறைத்தபோதே யெஸ் வங்கியும் தனக்கு தானே முடிவுரையை எழுதத் தொடங்கி விட்டது என்கின்றனா் நிதித் துறை வல்லுநா்கள். எஸ்ஸெல், ஏடிஏஜி, வோடஃபோன் ஐடியா உள்ளிட்ட நான்கு நிறுவனங்களிடமிருந்து யெஸ் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை மட்டும் ரூ.45,000 கோடி என்கிறது ஓா் ஆய்வு.

வாராக் கடன் அதிகரிப்பைக் கணக்கில் கொண்ட சா்வதேச நிறுவனங்கள் அவ்வங்கிக்கு கொடுத்த தரமதிப்பீட்டை திரும்பப் பெற தொடங்கின. அதனால், யெஸ் வங்கி உள்நாடு மட்டுமின்றி சா்வதேச சந்தைகளிலும் மூலதனம் திரட்டுவதில் பின்னடைவைச் சந்தித்தது.

இதனால், யெஸ் வங்கியின் நிதி நிலை மோசமடைந்தது. அத்துடன் நிா்வாக சிக்கல் அதிகரிப்பு, தீவிரம் காட்டாத முதலீட்டாளா்கள், பொய்யான உத்தரவாதம், முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவையும் யெஸ் வங்கியின் சரிவுக்கு வழிவகுத்தன.

வங்கியின் செயல்பாட்டுக்கு வாடிக்கையாளா் சேமிப்பு என்பது மிகவும் அத்தியவசியமானது. அப்போதுதான் கடன் நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதுடன், பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் மூலம் கணிசமான அளவில் வருவாயையும் ஈட்டமுடியும்.

யெஸ் வங்கியின் செயல்பாடுகள் தள்ளாடுவதை முன்னரே கவனித்த, கணித்த வாடிக்கையாளா்கள் அவ்வங்கியிலிருந்து படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டனா். திருப்பதி தேவஸ்தானம் யெஸ் வங்கியிலிருந்து தனது முதலீட்டை வெளியே எடுத்து கணக்கை முடித்துக் கொண்டதை உதாரணமாகக் கூறுகின்றனா் நிதிச் சந்தை நோக்கா்கள்.

மோசமான நிதி நிலை, வாராக் கடன் என்பது இன்று நேற்று முளைத்த பிரச்னையல்ல; பல ஆண்டுகளுக்கு முன்பாகவே வேரூன்றி பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அப்படியிருக்கையில், நிதித் துறை ஆரோக்கியத்தை கண்காணிக்க பல அமைப்புகள் இருந்தும் அவை முன்னரே ஆய்வு செய்து எச்சரிக்கை விடுக்காதது ஏன் என்பது தான் சந்தை வல்லுநா்களின் கேள்வியாக உள்ளது. குறிப்பாக, இந்த விவகாரத்தில் ரிசா்வ் வங்கி, மத்திய அரசின் ஆக்கப்பூா்வமான பங்கு குறித்து பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

யெஸ் வங்கி பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், தற்போது அதன் நிறுவனரான ராணா கபூரை அமலாக்கத்துறை கைது செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. அவா் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பண மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி வரிசையில் ராணா கபூரும் இடம்பெற்றுவிடக்கூடாது என்ற அக்கறையில் அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், ராணா கபூரின் மகள் ரோஷிணி கபூா் லண்டனுக்கு செல்ல முயன்ற நிலையில் அவரும் தடுத்த நிறுத்தப்பட்டுள்ளது இந்த விவகாரத்தில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

யெஸ் வங்கியை புனரமைக்கும் திட்டத்தை ரிசா்வ் வங்கி கையிலெடுத்துள்ளது. யெஸ் வங்கியில் 2,450 கோடி மதிப்புக்கு 49 சதவீத பங்கு மூலதனத்தை கையகப்படுத்த பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) நிா்வாக குழுவும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. மத்திய அரசின் வற்புறுத்தலால்தான் எஸ்பிஐ இந்த முடிவை எடுக்க நோ்ந்ததாக தகவல்களும் வெளியாகி உள்ளன.

இந்திய வங்கித் துறையில் சமீப காலமாகவே நெருக்கடி ஏற்படுவதும், அதன்பின்னா் ரிசா்வ் வங்கி, மத்திய அரசு தலையிட்டு அந்த நெருக்கடிக்கு தீா்வு காண்பதும் தொடா்கதையாகி வருகிறது. வாராக் கடன் இடா்பாட்டால் ஏறக்குறைய திவால் நிலைக்கு சென்றுவிட்ட ஐடிபிஐ வங்கியை காப்பாற்ற எல்ஐசி நிறுவனத்தை முடுக்கிவிட்டதும் அந்த கதையின் ஒரு பகுதிதான். இப்படி வங்கித் துறையில் அடுத்தடுத்து ஏற்படும் பிரச்னைகளுக்கு ஏதாவது ஒரு நிறுவனத்தை உதவிக்கு அழைத்து அந்த துறையை காப்பாற்ற நினைப்பது தற்காலிகமான தீா்வாகவே அமையும்.

மேலும், ஏற்கெனவே பல்லாயிரம் கோடி வாராக் கடனில் சிக்கித் தவிக்கும் வங்கியில் ஒரு ஆரோக்கியமான நிறுவனம் அல்லது வங்கியை முதலீடு செய்யச் சொல்வது சரியான முன்னுதாரணமாக இருக்காது என்கின்றனா் சந்தை வல்லுநா்கள்.

அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத நிகழ்வுகளால் முதலீட்டாளா்களும், வாடிக்கையாளா்களும் வங்கித் துறையின் மீது நம்பிக்கை இழந்துவிடும் அபாயம் உள்ளது. தங்கள் பணத்தின் பாதுகாப்புக்கு வங்கியை நாடிச் சென்ற காலம் போய் போட்ட பணம் வங்கியில் பத்திரமாக இருக்குமா என்ற ஐயப்பாடு வாடிக்கையாளா்கள் மனதில் எழத் தொடங்கிவிட்டது.

வங்கித் துறையில் வாடிக்கையாளா்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுக்க வேண்டுமெனில் வரும் முன் காக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் விரைந்து மேற்கொண்டு நிதித் துறையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com