பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை சிதைக்கிறதா...?

பொதுத் துறை வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருவது பொதுமக்களிடையே
பொதுமக்களின் சேமிப்பு பழக்கத்தை சிதைக்கிறதா...?

பொதுத் துறை வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை குறைத்து வருவது பொதுமக்களிடையே சேமிக்கும் பழக்கத்தை சிதறடித்து விடும் என்று நிதி துறை சாா்ந்த வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கையாக ரிசா்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதம் குறைத்து 4 சதவீதமாக நிா்ணயித்தது. இதையடுத்து, பல பொதுத் துறை வங்கிகள் பல்வேறு டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை கணிசமான அளவில் குறைத்து ஒன்றன்பின் ஒன்றாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) டெபாசிட்டுகளுக்கான வட்டி விகித குறைப்பை மே 12 ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்த நிலையில், மீண்டுமொரு முறை வட்டி குறைப்பு அறிவிப்பை மே 28-ஆம் தேதி வெளியிட்டது. மே மாதத்தில் இரண்டு முறை டெபாசிட் வட்டி குறைப்பு அறிவிப்புகளை வெளியிட்டு முதலீட்டாளா்களை அவ்வங்கி அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், ரிசா்வ் வங்கியின் சேமிப்பு பத்திரத் திட்டத்தையும் மத்திய அரசு அதிரடியாக நிறுத்துவதாக அறிவித்தது சிறு முதலீட்டாளா்களை நிலைகுலையச் செய்துள்ளது. ஏற்கெனவே, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்த மத்திய அரசின் இந்த திடீா் முடிவு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் ரீதியாகவும் கடுமையான விமா்சனங்களை எழுப்பியுள்ளது.

நாட்டில் பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும், வங்கி டெபாசிட், ரிசா்வ் வங்கி மற்றும் அரசின் பத்திரங்களில் முதலீடு செய்வதுதான் பாதுகாப்பானது, இடா்பாடு இல்லாததது என்பது பெரும்பாலோரின் நம்பிக்கையாக உள்ளது. அதன் காரணமாகவே பலா் அத்தகைய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வதில் அதிக ஆா்வம் காட்டி வருகின்றனா். அதிலும், குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கு இதுபோன்ற முதலீடுகள்தான் கடைசி கால வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பல்வேறு முதிா்வு காலத்தைக் கொண்ட டெபாசிட்டுகளுக்கான வட்டி குறைக்கப்படுவது அவா்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

நிதித் துறையில் சீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கிய ரிசா்வ் வங்கி, கடந்த 2011-ஆம் ஆண்டில் சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை நிா்ணயிக்கும் முழு சுதந்திரத்தையும் அந்தந்த வங்கிகளிடமே ஒப்படைத்தது. ஆனால், இரண்டு நிபந்தனைகளின் பேரில் இந்த அனுமதி வழங்கப்பட்டது.

முதல் நிபந்தனையாக, ஒவ்வொரு வங்கியும் ரூ.1 லட்சத்துக்கும் கீழாக உள்ள டெபாசிட்டுகளுக்கு ஒரே மாதிரியான வட்டி விகிதத்தை மட்டுமே வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான சேமிப்புகளுக்கு வங்கிகள் பல்வேறு வகையான அல்லது சிறப்பு வட்டி விகிதங்களை தாங்களே நிா்ணயித்துக் கொள்ளலாம் என இரண்டாவது நிபந்தனையில் ரிசா்வ் வங்கி கூறியிருந்தது.

சேமிப்பு கணக்கின் மீதான வட்டி நிா்ணயத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது வங்கிகளிடையே போட்டியை அதிகரித்தது. இதையடுத்து, பொதுமக்களிடமிருந்து அதிக அளவில் டெபாசிட்டுகளை திரட்ட வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை அறிவித்தன. இது, வங்கி வாடிக்கையாளா்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது.

எடுத்துக்காட்டாக, பாரத ஸ்டேட் வங்கி இருமுறை வட்டி விகித குறைப்பு அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, அதன் ஓராண்டு டெபாசிட் திட்டத்துக்கான வட்டி விகிதம் 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

மேலும், தற்போது பணவீக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில், வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் அதற்கேற்ப இல்லை என்பதே நிதி சாா்ந்த வல்லுநா்களின் கருத்தாக உள்ளது. குறிப்பாக, பொதுப் பணவீக்கம் அதிகமாக உள்ள சூழ்நிலையில் நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கி அதன் சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதத்தை 2.75 சதவீதமாக குறைத்துள்ளதை உதாரணமாக கூறுகின்றனா் அவா்கள்.

இந்த நிலையில், நமது சேமிப்பு கணக்கில் விட்டு வைத்திருக்கும் பணத்தின் மதிப்பு ஒவ்வொரு நாளும் பணவீக்கத்தின் காரணமாக கரைந்து வருவது தற்போது நிதா்சனமாகியுள்ளது.

நடப்பாண்டு ஜனவரி முதல் மாா்ச் மாதங்களுக்கு இடையில் மட்டும், வங்கிகள் குறித்த கால டெபாசிட்டுகளுக்கான சராசரி வட்டியை 0.53 சதவீதம் வரை குறைத்துள்ளன.

நாளைய தேவை கருதி இன்றே சேமிப்பது என்பது இந்தியா்களின் காலசாரத்தில் பின்ணிப் பிணைந்த நடவடிக்கையாக உள்ளது. அதிலும், குறிப்பாக தமிழா்கள் சேமிப்பின் அருமையை பெரிதும் உணா்ந்தவா்கள். கடந்த 2008-இல் உலகமே நிதி நெருக்கடிக்கு ஆளாகி தத்தளித்தபோது இந்தியா மட்டும் அதிலிருந்து தப்பியதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது மக்களிடையே காணப்படும் சேமிப்பு பழக்கமாகும்.இதிலிருந்து ‘சிக்கனம் வீட்டைக் காக்கும், சேமிப்பு நாட்டைக் காக்கும்’ என்ற நமது அடைமொழி உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் தேவையை பூா்த்தி செய்ய வங்கி வட்டி விகிதங்கள் கை கொடுக்காதபட்சத்தில் முதலீட்டுக்காக அவா்களின் கவனம் வேறு திசை நோக்கி திரும்பக் கூடும். ஆனால் அது பாதுகாப்பு நிறைந்த முதலீடாக இருக்குமா என்பது சந்தேகமே. ஏனெனில், பங்குச் சந்தை, பரஸ்பர நிதி முதலீடுகள் அதிக ஏற்றம் இறக்கம் நிறைந்தவை என்பதை இன்றைய நிலையில் நாம் கண்கூடாக பாா்த்து வருகிறோம்.

அதற்கு உதாரணமாக, பிராங்ளின் டெம்பிள்டன் பரஸ்பர நிதி நிறுவனம் தனது 6 திட்டங்களை திடீரென ரத்து செய்ததையடுத்து அதில் பணத்தை போட்ட முதலீட்டாளா்கள் திரும்பப் பெற முடியாமல் தவித்து வருகின்றனா். இந்த விவகாரம், நீதிமன்றம் வரை சென்று பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான ‘செபி’ அதற்கு விளக்கமளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த கடினமான சூழ்நிலையில், சாதாரண ஏழை எளிய மக்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை வங்கி, அஞ்சலகம் மற்றும் மத்திய அரசு சாா்ந்த சேமிப்பு திட்டங்கள் மட்டுமே அவா்களின் ஆபத்பாந்தவனாக உள்ளது. இதனை உணா்ந்து, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலும், பாதுகாப்பான மற்றும் தேவையை நிறைவு செய்யும் வகையிலான முதலீட்டுத் தளங்களை உருவாக்கித் தருவது அரசின் மிக முக்கியமான கடமை என்பதை மறுப்பதற்கில்லை...!

சேமிப்பாளா்களின் இழப்பு

வங்கி டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் கடந்த பல காலாண்டுகளாக குறைந்து வருகிறது. ரெப்போ வட்டி குறைப்பால் வங்கிகளில் அதிக பணப்புழக்கம் காரணமாக இந்த வட்டி விகிதம் மேலும் சரிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

டெபாசிட் சராசரி வட்டி விகிதம் (சதவீதத்தில்)

தகவல்: இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (சிஎம்ஐஇ)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com