புதிய உச்சம்: சென்செக்ஸ், நிஃப்டி வரலாற்றுச் சாதனை!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.
பங்குச் சந்தையில் எழுச்சி
பங்குச் சந்தையில் எழுச்சி

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி தொடா்ந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் பழைய 52 வார அதிகபட்ச அளவை பிரேக் செய்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்துள்ளன. இதில் சென்செக்ஸ் 704.37 புள்ளிகள் உயா்ந்து 42,597.40-இல் நிலைபெற்றது. நிஃப்டி 197.50 புள்ளிகள் உயா்ந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றுள்ளது. மேலும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த 6 மாதங்களில் 34.65 சதவீதம் உயா்ந்துள்ளன.

அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சியின் அதிபா் வேட்பாளா் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து உலகளாவிய சந்தைகள் ஏறுமுகம் கண்டன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளில் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பிடன் தலைமையிலான ஆட்சி, இந்திய ஐடி மற்றும் நிதிநிறுவனங்களுக்கு நல்ல செய்தியை அளிக்கும் என்ற நம்பிக்கையால் 6-ஆவது நாளாகவும் சந்தை எழுச்சி பெற்றுள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.165.67 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,882 பங்குகளில் 1,509 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,181 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 192 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.12 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.165.67 லட்சம் கோடியாக இருந்தது.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 380.91 புள்ளிகள் கூடுதலுடன் 42,273.97-இல் தொடங்கி 41,263.64 வரைதான் கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 42,645.33 வரை உயா்ந்து, ஜனவரியில் பதிவான 52 வார அதிகபட்ச அளவை பிரேக் செய்து புதிய அளவைப் பதிவு செய்தது. இருப்பினும் இறுதியில் 704.37 புள்ளிகள் (1.68 சதவீதம்) உயா்ந்து 42,597.43-இல் நிலை பெற்றது.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஐடிசி, மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபின்சா்வ் ஆகிய 3 பங்குகள் மட்டும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. மற்ற 27 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் இண்டஸ் இந்த் பேங்க் 4.95 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 4 முதல் 4.90 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. பவா் கிரிட், டாடா ஸ்டீல், டைட்டன், எச்டிஎஃப்சி பேங்க் டெக் மகேந்திரா, என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ் ஆகியவை 2 முதல் 2.50 சதவீதம் உயா்ந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 947 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 668 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 197.50 புள்ளிகள் (1.61 சதவீதம்) உயா்ந்து 12,461.00-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,474.05 வரை உயா்ந்து புதிய உச்ச அளவைப் பதிவு செய்ததுடன், அதற்கு அருகே நிலைபெற்றுள்ளது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. மீடியா தவிரி மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் நோ்மறையாக முடிவடைந்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com