அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்..!

தொழில் நடத்துவதற்கான அடிப்படையே லாபம்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே தொழிலதிபர்களையும் தொழில் முனைவோரையும் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. 
அமெரிக்க கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7 இந்திய வம்சாவளியினர்..!

தொழில் நடத்துவதற்கான அடிப்படையே லாபம்தான். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமே தொழிலதிபர்களையும் தொழில் முனைவோரையும் உந்தித் தள்ளிக் கொண்டிருக்கிறது. 
அவர்களை மேலும் ஊக்கப்படுத்துவதற்காகவே பணக்காரர்கள் பட்டியலை வெவ்வேறு தன்னார்வ நிறுவனங்களும் இதழ்களும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. அவற்றில் மிக முக்கியமானது ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் பணக்காரர்களின் பட்டியல்.
அமெரிக்காவிலுள்ள முதல் 400 பணக்காரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் அண்மையில் வெளியிட்டது. அதில் இந்திய அமெரிக்கர்கள் 7 பேர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய் செளதரி, தலைமை நிர்வாக அதிகாரி-ஜிஸ்கேலர்
இணையவழிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நிறுவனமான ஜிஸ்கேலரை கடந்த 2008-ஆம் ஆண்டு ஜெய் செளதரி தொடக்கினார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் அவர் 85-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 6.9 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.50 ஆயிரம் கோடி) உள்ளது. 
புதிய தொழில் தொடங்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ஜெய் செளதரி, கடந்த 1996-ஆம் ஆண்டு அவரது பணியை ராஜிநாமா செய்தார். ஜெய் செளதரிக்குத் துணையாக அவரின் மனைவி ஜோதியும் பணியை ராஜிநாமா செய்தார். இருவரும் இணைந்து முதலில் செக்யூர் ஐடி என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். 
ரொமேஷ் வத்வானி, நிறுவனர்-சிம்பொனி தொழில்நுட்பக் குழுமம்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 238-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ரொமேஷ் வத்வானி. அவர் 3.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ. 25 ஆயிரம் கோடி) அதிபதியாக உள்ளார். சிம்பொனி தொழில்நுட்பக் குழுமம் மூலமாக ரொமேஷ் வத்வானிக்கு ஆண்டுக்கு சுமார் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையமாக வைத்து ரொமேஷ் வத்வானி தொடங்கிய 9 நிறுவனங்கள், சிம்பொனிஏஐ என்ற பெயரில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஒன்றாக இணைக்கப்பட்டன. அவர் தொடங்கிய ஆஸ்பெக்ட் டெவலப்மெண்ட் என்ற நிறுவனத்தை ஐ2 டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த 1999-ஆம் ஆண்டு 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது.
மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பயின்ற ரொமேஷ் வத்வானி, தனது சகோதரர் சுனிலுடன் இணைந்து மும்பை பல்கலைக்கழகத்தில் வத்வானி செயற்கை நுண்ணறிவு மையத்தை கடந்த 2018-ஆம் ஆண்டில் தொடக்கினார். அந்த மையத்தில் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீரஜ் ஷா, தலைமை நிர்வாக அதிகாரி-வேஃபேர்
வீட்டு உபயோகப் பொருள்களை நேரடியாக வீடுகளுக்கே எடுத்துச் சென்று வழங்கும் இணையவழி வர்த்தக நிறுவனமான வேஃபேரை கடந்த 2002-ஆம் ஆண்டில் நீரஜ் ஷா தொடக்கினார். தற்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் அவர் 299-ஆவது இடத்தில் உள்ளார்.
நீரஜ் ஷா 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.20,600 கோடி) அளவுக்கு சொத்து வைத்துள்ளார். வேஃபேர் வலைதளம் மூலமாக 1.8 கோடிக்கும் அதிகமான பொருள்களை வாங்க முடியும். கடந்த 2019-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்துக்கு 9.1 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயாக கிடைத்தது. இது கடந்த 2018-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகமாகும்.
வினோத் கோஸ்லா, இணை அதிகாரி-கோஸ்லா 
வென்சர்ஸ்
கணினி வன்பொருள்களைத் தயாரிக்கும் சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான வினோத் கோஸ்லா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் 353-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 2.4 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.17,600 கோடி)உள்ளது.
கிளெய்னர் பெர்கின்ஸ் காஃபீல்ட் அண்ட் பையர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 18 ஆண்டுகள் பணியாற்றிய வினோத் கோஸ்லா, தனது சொந்த நிறுவனத்தைத் தொடக்கினார். 
ராம் ஸ்ரீராம், இணை அதிகாரி -ஷெர்பாலோ வென்சர்ஸ்
ஃபோர்ப்ஸ் பட்டியலில் 359-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் ராம் ஸ்ரீராம். அவர் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.16,900 கோடி) சொத்து வைத்துள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்ற ராம் ஸ்ரீராம், கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்நிறுவனத்தின் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டபோதிலும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் நிர்வாகிகளில் ஒருவராகத் தொடர்ந்து வந்தார்.
அதையடுத்து பேபர்லெஸ் போஸ்ட், மனிதவள மேம்பாட்டு சேவைகளை இணையவழியில் வழங்கும் கஸ்டோ நிறுவனம், இணையவழி விளம்பர நிறுவனமான இன்மொபி ஆகியவற்றை ராம் ஸ்ரீராம் தொடக்கினார்.
ராகேஷ் கங்வால், நிறுவனர்-இண்டர்குலோப் ஏவியேஷன்
2.3 பில்லியன் அமெரிக்க டாலருக்கு (சுமார் ரூ.16,900 கோடி)சொந்தக்காரரான ராகேஷ் கங்வால், ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பணக்காரர்கள் பட்டியலில் 359-ஆவது இடத்தில் உள்ளார். இண்டிகோ விமான நிறுவனத்தின் இணை நிறுவனராக ராகேஷ் கங்வால் விளங்கினார். 
அதையடுத்து, இண்டர்குலோப் ஏவியேஷன் என்ற நிறுவனத்தை கடந்த 2006-ஆம் ஆண்டில் அவர் தொடக்கினார்.
 அனீல் புஸ்ரி, தலைமை நிர்வாக அதிகாரி-வொர்க்டே
மென்பொருள் நிறுவனமான வொர்க்டேவை பீப்பிள்சாஃப்ட் நிறுவனர் தாவே டஃபீல்டுடன் இணைந்து அனீல் புஸ்ரி தொடக்கினார். ஃபோர்ப்ஸ் பட்டியலில் தற்போது அவர் 359-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவருக்கு 2.3 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.16,900 கோடி) சொத்து உள்ளது.
பீப்பிள்சாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய அனீல் புஸ்ரி அந்நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவிக்கு உயர்ந்தார். அதையடுத்து தனது சொந்த நிறுவனத்தை அவர் நிறுவினார். 
ஃபோர்ப்ஸ் மிடாஸ் பட்டியலில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை அனீல் புஸ்ரி இடம்பெற்றுள்ளார். 

முதலிடத்தில் அமேஸான் நிறுவனர்

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க பணக்காரர்கள் பட்டியலில் அமேஸான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 179 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.13 லட்சம் கோடி)உள்ளது. 
அவருக்கு அடுத்த இடத்தில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் உள்ளார். அவருக்கு 111 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8,16 லட்சம் கோடி)அளவுக்கு சொத்து உள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸýக்கர்பெர்க், 85 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.6.25 லட்சம் கோடி)சொத்துடன் ஃபோர்ப்ஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பெர்க்ஸ்ஷைர் ஹாத்வே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான வாரன் பஃபெட் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 73.5 பில்லியன் அமெரிக்க டாலராக (சுமார் ரூ.5.40 லட்சம் கோடி)உள்ளது.
ஆரகிள் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி லேரி எல்லிசன் 72 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.5.29 லட்சம் கோடி) சொத்துடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் சீர்குலைந்த போதிலும் பல கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு அதிகரிக்கவே செய்ததாக ஃபோர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com