2 - ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்வு!

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை  எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது.
2 - ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 593 புள்ளிகள் உயர்வு!

புது தில்லி:  இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை  எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 592.97 புள்ளிகள் உயர்ந்தது.  பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது வர்த்தக நாளாக எழுச்சி பெற்றுள்ளது.

வங்கி, நிதிநிறுவனங்கள், ஆட்டோ பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. காளையின் ஆதிக்கம் தொடர்ந்து இருந்ததால், அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம் பெற்றன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். 

1,926 பங்குகள் ஏற்றம்
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,848 பங்குகளில் 1,926 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.  758 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.155.11 லட்சம் கோடியாக இருந்தது.

2 - ஆவது நாளாக எழுச்சி 
சென்செக்ஸ் காலையில் 367.59 புள்ளிகள் கூடுதலுடன் 37,756.25 - இல் தொடங்கியது. குறைந்தபட்சமாக 37,544.05 வரை கீழே சென்றது. பின்னர்,   அதிகபட்சமாக 38,035.87 வரை உயர்ந்தது.  இறுதியில் 592.97 புள்ளிகள்  (1.59  சதவீதம்) உயர்ந்து 37,981.63 - இல் நிலைபெற்றது.  பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 2.68 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 2.54 சதவீதம் ஏற்றம் பெற்றன. 

இன்டஸ்இண்ட் பேங்க் முன்னேற்றம்
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் ஆதாயம் பெற்றன. 3 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் இன்டஸ்இண்ட் பேங்க் 7.85 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. 

இதற்கு அடுத்ததாக பஜாஜ் பைனான்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், பவர் கிரிட்,  ஓஎன்ஜிசி,  சன்பார்மா,  ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 4 முதல் 6.30 சதவீதம் வரை உயர்ந்தன.  மாருதி சுஸýகி,  எஸ்பிஐ, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள்,  கோட்டக் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன. அதே சமயம்,  ஹிந்துஸ்தான் யுனி லீவர், இன்ஃபோஸிஸ், நெஸ்லே இந்தியா ஆகியவை சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...
தேசிய பங்குச் சந்தையில் 1,293 பங்குகள்  ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.  346  பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி  177.30  புள்ளிகள் (1.60  சதவீதம்) உயர்ந்து 11,227.55 - இல் நிலைபெற்றது. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.  

இதில் நிஃப்டி மீடியா குறியீடு 4.77 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ,  மெட்டல், ரியால்ட்டி  குறியீடுகள் 2.50 முதல் 3.25 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com