"நீர்க் குமிழி' எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்களே ஜாக்கிரதை...!

உண்மையான பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு இடையே ஒரு துண்டிப்பு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் கூறியுள்ளது. இதன் பொருள் குறித்துதான் தற்போது பங்குச் சந்தை சந்தைகளில் ஒரே விவாதம்
"நீர்க் குமிழி' எந்த நேரத்திலும் வெடிக்கும் அபாயம்: பங்குச் சந்தை முதலீட்டாளர்களே ஜாக்கிரதை...!



பங்குச் சந்தை கடந்த மார்ச்சில் கண்ட வீழ்ச்சிக்குப் பிறகு  தொடர்ந்து ஏற்றம் பெற்று வருகிறது.  சென்செக்ஸ், நிஃப்டி இதுவரை 50 சதவீதம் வரை ஏற்றம் பெற்றுள்ளன. ஆனால்,  கள நிகழ்வுகளுக்கும், சந்தையின் எழுச்சிப் பேரணிக்கும் முரண்பாடு  உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், உண்மையான பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளுக்கு இடையே ஒரு துண்டிப்பு இருப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் கூறியுள்ளது. இதன் பொருள் குறித்துதான் தற்போது பங்குச் சந்தை சந்தைகளில் ஒரே விவாதம் நடந்து வருகிறது.  

ஆர்பிஐ எச்சரிக்கை...!: மேலும், மத்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ)  நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையும் இயல்பு நிலையில் பெரும் மாற்றம் வரும் என எச்சரித்துள்ளது. அதாவது சிறு மற்றும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம். கரோனாவில் வேலையிழந்தவர்களும், பெரிய தொழிலதிபர்கள் கூட வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தோல்வியடையக்கூடும். இவை அனைத்தும் மத்திய ரிசர்வ் வங்கியின் மறைமுக எச்சரிக்கையாகும்.  இது இந்திய வங்கி முறை இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய பிரச்னையாக இருக்கலாம் என்கிறது சந்தை வட்டாரம்.

சந்தை செயலிழக்கும்: உலகெங்கிலும் கரோனா தொற்று பரவல் நிற்பதற்கு தயாராக இல்லை. மாறாக  இன்னும் அதிக வேகத்தில் பரவி வருகிறது.  உலகப் பொருளாதாரம் கூட, முன் எப்போதும் இல்லாத அளவில் பெரிய மனச் சோர்வில் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், கரோனா காரணமாக இப்போது  குறைந்த  வட்டி விகிதங்களில் வழங்கப்பட்டு வரும் கடன்களை நிறுத்தப் போவதாக உலகில் சில மத்திய வங்கிகள் ஏற்கெனவே அறிவித்து விட்டன. இது இப்போது உள்ள பணப் புழக்கத்தையும் உறிஞ்சிவிடும். பங்குச் சந்தைகளும் நிதிச் சந்தைகளும் மிகவும் மோசமாக செயலிழக்கும். 

இதனால், முதலீட்டாளர்கள் தாங்கள் வாங்கிய பங்குகளை விற்று வெளியேறக்கூட முடியாமல் போகலாம். மொத்தத்தில் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும் அபாயம் உள்ளது..!

அச்சுறுத்தும் வாராக் கடன்:  இந்தியாவில் பொருளாதாரம்  கடந்த மூன்று ஆண்டுகளாக கடும் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, பங்குச் சந்தையில் முதலீடுகளுக்கு விதிக்கப்படும் நீண்ட கால மூலதன வரி (எல்டிசிஜி)  போன்றவற்றின் கடும் தாக்கத்தால் பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொள்கிறது. மேலும், இந்த நிதியாண்டு முடிவடைவதற்குள் வங்கிகளின் வாராக் கடன்  விகிதம் 12.5 சதவீதமாக அதிகரிக்கும். மொத்த உள்நாட்டு உற்பத்தி மேலும் சுருங்கக்கூடும். இது இந்திய பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான அறிகுறியாகும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஓசையில்லாத வெளியேற்றம்: தற்போது பங்குச் சந்தைகளில் நிகழ்ந்துள்ள ஏற்றம் குறித்த தரவுகளைக் கவனித்தால், மியூச்சுவல் பண்டுகள், அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், நட்சத்திர முதலீட்டாளர்கள் என பெரும்பாலானோர் நடுத்தர மற்றும் சிறிய நிறுவனப் பங்குகளில் இருந்து ஓசைப்படாமல் வெளியேறுகிறார்கள் என்பது புலனாகிறது. அதாவது அவர்கள் இது ஒரு உண்மையான காளையின் பாய்ச்சல் அல்ல என்பதை அறிந்துள்ளதாகவே தெரிகிறது. ஆனால், சந்தையில் கரடி விரைவில் தாக்கும் அபாயம் உள்ளதாகவும், அதில் அதிக விலையில் பங்குகளை வாங்கிய பல முதலீட்டாளர்கள் சிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

ஏற்றத்துக்குக் காரணம் என்ன?: பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள எழுச்சிப் பேரணிக்கு மார்க்கெட் லீடரான முகேஷ் அம்பானியின்  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  வெகுவாக ஏற்றம் பெற்றதே காரணமாக உள்ளது. லார்ஜ் கேப்ஸ், மிட்கேப்ஸ், ஸ்மால் கேப்ஸ் ஆகியவை இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்கவில்லை என்றே தரவுகள் தெரிவிக்கும் உண்மையாகும். இந்திய பங்குச் சந்தையில் 50 முதல் 60 சதவீதத்திற்கும் அதிகமான எழுச்சிப் பேரணி  ரிலையன்ஸால் தூண்டப்பட்டுள்ளது. இச்சூழ்நிலையில், ரிலையன்ஸ் பங்குகள் திருத்தங்களைக் காணத் தொடங்கும் போது இந்திய சந்தைகளை ஆதரிக்க எந்த துறையும் இருக்காது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

போலி பரிந்துரைகள்: இந்தப் பங்குகளை வாங்கலாம், அந்தப் பங்குகளை வாங்கலாம் என ஆயிரக்கணக்கான போலிப் பரிந்துரைகள் "யூ டியூப்', "எஸ்எம்எஸ்' மூலமாக காட்டுத் தீ போல சுற்றி வருகிறது. இந்தப் பரிந்துரைகளை நம்பி முதலீட்டாளர்களில் பலர் பங்குகளை வாங்கியுள்ளதாகவும் சந்தை வட்டாரத்தில் பேசப்படுகிறது. கரோனா பொது முடக்க காலத்தில் மட்டும் இதுவரை 12 லட்சம் டீமேட் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் காலத்தில் வீட்டில் முடங்கிக் கிடக்கும் பலர், பங்குச் சந்தைகளில் முதலீடுகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐஎம்எஃப் எச்சரிக்கை: கரோனா பொது முடக் காலத்தில் உலகளாவிய நிலையில் பங்குச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் எழுச்சி குறித்து சர்வதேச நாணய நிதியம்  (ஐஎம்எஃப்) கூட எச்சரித்துள்ளது. இந்த எழுச்சிப் பேரணி ஒரு பெரிய நீர்க் குமிழி போன்றது. இது மோசமான வழியில் வெடிக்கும் அபாயம் உள்ளது என்கிறது ஐஎம்ஃஎப். 

ஆட்டோ மொபைல் மற்றும் ஆட்டோ துணைத் தொழில்கள் கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் இந்தியாவில் மோசமான நிலையில் உள்ளது. இவை மீண்டு வருவதற்கான அறிகுறிகளே தெரியவில்லை. இதற்கிடையே, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தப் புதிய பனிப்போர் மிகவும் ஆபத்தானது. இதன் தாக்கம் உலக வளர்ச்சி இயந்திரத்தின் இயக்கத்தை மெதுவாகத்தான் வைத்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். 

முடிவடையும் பணப் புழக்கம்: உலகின் வளர்ந்த மற்றும் முக்கியப் பொருளாதாரங்களைக் கொண்டுள்ள  ஐரோப்பிய பிராந்தியம், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், சவூதி அரேபியா, சீனா, துபாய், ரஷியா, தென் கொரியா, தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பிரேசில், மெக்ஸிகோ போன்ற நாடுகள்கூட பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. இந்நிலையில், கரோனாவால் உலகச் சந்தைகளில் பணப்புழக்கம் விரைவாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதால்,  பங்குச் சந்தை கடந்த 20 ஆண்டுகளில் கண்டிராத  மிகப்பெரிய வீழ்ச்சியைக் காணும் நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை நிபுணர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். 

கரோனா போன்ற நிச்சயமற்ற, மோசமான காலங்களில் பங்குகளை ஆத்திரப்பட்டு வாங்குவதை தவிர்க்க வேண்டும். உலகப் பொருளாதாரம் இன்னும் முடக்க காலத்தில்தான் உள்ளது என்பதை உணர வேண்டும். சரிவிலிருந்து மீள்வதற்கு நீண்ட காலம் பிடிக்கும். முதலீட்டாளர்களே ஜாக்கிரதை...! 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com