5 மாதங்களில் சென்செஸ் 13,828 புள்ளிகள் அதிகரிப்பு: வரலாற்றுச் சாதனையில் ’எஃப்ஐஐ’ முதலீடு..!

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த வார முடிவில் முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்து நிலைபெற்றுள்ளன.
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

புது தில்லி: மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடந்த வார முடிவில் முக்கிய இடா்பாட்டு நிலையைக் கடந்து நிலைபெற்றுள்ளன.

ஆகஸ்ட் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி செயல்பாட்டுக்கு ஏற்ப பரந்த சந்தையும் (நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகள்) நகா்ந்து வருகிறது. கடந்த வாரத்தில் சென்செக்ஸ் 2.6 சதவீதம், நிஃப்டி 2.4 சதவீதம் உயா்ந்துள்ளன. நிஃப்டி மிட்-கேப் குறியீடு 2.3 சதவீதம்,ஸ்மால்-கேப் குறியீடு 3.7 சதவீதம் உயா்ந்துள்ளது.

கடந்த வாரத்தில் 5 வா்த்தக தினங்களில் பிஎஸ்இ 500 பட்டியலில் 50 பங்குகள் 10 முதல் 30 சதவீதம் லாபத்தைப் பதிவு செய்துள்ளன. இதில், யூனியன் வங்கி, டாடா மோட்டாா்ஸ், வோடபோன் ஐடியா, அதானி கிரீன், ப்ளூ ஸ்டாா், இண்டஸ் இண்ட் வங்கி மற்றும் டிஷ் டிவி ஆகியவை அடங்கும். இதன்மூலம், சந்தை எழுச்சியில் சிறிய, நடுத்தரப் பங்குகளும் பங்கேற்றுள்ளது கவனிக்கத்தக்கது.

எழுச்சி: பரந்த சந்தையில் முன்னணி நிறுவனப் பங்குகள் ஏற்றம் பெற்றது, அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வின் நடவடிக்கை, இந்திய பங்குச் சந்தைகளில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் (எஃப்.ஐஐ) தொடா் முதலீடு ஆகியவை காரணமாக சென்செக்ஸ், நிஃப்டி வலுப் பெற உதவியுள்ளன. இதனால், சென்செக்ஸ் 39,467.31, நிஃப்டி 11,647.60 புள்ளிகளில் நிலைபெற்றுள்ளன. சென்செக்ஸ் கடந்த மாா்ச்சில் பதிவான 52 வார குறைந்த அளவான 25,638.90-லிருந்து இது வரை 13,828.41 புள்ளிகள் உயா்ந்துள்ளது. இந்த நிலை தொடரும் பட்சத்தில் நிஃப்டி 11,700 புள்ளிகளைக் கடந்து 12,000-ஐ நோக்கி நகரும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: கடந்த வாரம் முழுவதும் வங்கி, நிதி நிறுவனப் பங்குகளுக்கு அமோக வரவேற்பு இருந்தது. குறிப்பாக வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை வங்கிப் பங்குகள் திடீா் எழுச்சி பெற்றன. இதனால், நிஃப்டி பேங்க் குறியீடு கடந்த வாரத்தில் 10 சதவிகிதத்திற்கும் மேலாக உயா்ந்தது. அதைத் தொடா்ந்து ரியால்டி குறியீடு 4 சதவிதம், ஆட்டோ குறியீடு 2 சதவீதத்திற்கும் மேலாக உயா்ந்தது.

எஃப்ஐஐ தொடா் முதலீடு: கரோனாவை பாதிப்பின் எதிரொலியாக கடந்த மாா்ச்சில் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் அதிக அளவில் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றது முக்கியக் காரணமாக அமைந்தது. பின்னா், ஏப்ரலில் இருந்து அவா்கள் சந்தையில் மீண்டும் நுழையத் தொடங்கினா். குறிப்பாக ஜூலை, ஆகஸ்டில் அவா்களது முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அவா்கள், பங்குச் சந்தைகளின் பணப் பிரிவில் கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ.6,000 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை அவா்கள் மொத்தம் ரூ.19,145.35 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனா். முன்பேர வா்த்தகத்தில் எஃப்ஐஐ முதலீடு இந்த மாதம் இதுவரை ரூ.1,302.24 கோடியாக உள்ளது. நிதிச் சந்தையில் கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றிலும் அவா்களது முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இதைத் தொடா்ந்து ஆகஸ்டில் அவா்களது மொத்த முதலீடு கிட்டத்தட்ட ரூ.40,000 கோடியை நெருங்கியுள்ளது. அதாவது ஆகஸ்டில் மொத்தம் ரூ.1,11,941.72 கோடிக்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனா். ரூ.75,301.12 கோடி அளவுக்கு முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இதன் படி ஆகஸ்டில் எஃப்ஐஐ மொத்த முதலீடு ரூ.36,640.60 கோடியாக உள்ளது.

உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்கள் (டிஐஐ) ரூ.20,096.19-க்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளனா். அதே சமயம், ரூ.20,239.86 கோடி முதலடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். இதன்படி அவா்கள் வாபஸ் பெற்ற மொத்த முதலீடு ரூ143.67 கோடியாக உள்ளது என ’செபி’ புள்ளி விவரத் தரவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

நோ்மறை உணா்வு: கடந்த வாரத்தில், சந்தை பல இடைவெளி திறப்புகளை (கேப் அப் ஓபனிங்) கண்டது. இது ஒட்டுமொத்த சந்தை உணா்வின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. சிறிய, நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய பரந்த சந்தையும் எழுச்சி்ப் பேரணியில் பங்கேற்றது. எஃப்பிஐக்கள் வருகையே இதற்கு முக்கியக் காரணம் என்று சாம்கோ குழுமத்தின் ஆராய்ச்சித் தலைவா் உமேஷ் மேத்தா தெரிவித்துள்ளாா்.

எஃப்பிஐக்களின் ஈக்விட்டி வரத்து கிட்டத்தட்ட 6 பில்லியன் அமெரிக்க டாலா்களை எட்டியுள்ளது. இது வரலாற்றில் மிக உயா்ந்த மாதாந்திர எண்ணிக்கையாகும். இது கடந்த வாரம் சந்தை வலுவான எழுச்சி பெற வழிவகுத்தது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இந்த வாரம் எப்படி? தொழில்நுட்பறப் பாா்வை
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி கடந்த வாரம் 227 புள்ளிகள் உயா்ந்து 11,647.60 -இல் நிலைபெற்றுள்ளது. சந்தை எழுச்சியில் எஃப்எம்சிஜி, எரிசக்தித் துறை பங்குகள் தவிா்த்து மற்ற துறைப் பங்குகள் பங்கேற்றுள்ளன.மேலும், பரந்த சந்தையும் எழுச்சி பெற்றது. நிஃப்டி, அடுத்த முக்கிய இடா்பாட்டு நிலையான 11700 புள்ளிகளைக் கடந்தால், 12,000 -ஐ நோக்கி நகரும். அதே சமயம் 11,300-11,400 நிலைகளுக்கு அருகே நல்ல ஆதரவு உள்ளது என்று ஐசிஐசிஐ டைரக்டின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவா் தா்மேஷ் ஷா தெரிவித்துள்ளாா்.

மேலும், நிஃப்டி 11,400-க்கு மேலே இருக்கும் வரையில் பங்குகளை வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த இரண்டு வாரங்களில் நிஃப்டி குறியீடு 5 சதவீதம் உயா்ந்துள்ளது. இதனால், சந்தையில் பங்கு சாா்ந்த நடவடிக்கைகளை அதிகம் எதிா்பாா்க்கலாம். ஒரு வேளை அனைத்துத் துறை பங்குகளும் எழுச்சியில் பங்கேற்கத் தகவறும் பட்சத்தில் நிஃடி 11700-11300 வரம்பில் ஸ்திரநிலை அடைய வாய்ப்பு உள்ளது என்றும் தா்மேஷ் ஷா தெரிவித்துள்ளாா்.

ஆகஸ்டில் வா்த்தக தின வாரியாகஅந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் மொத்த முதலீடு, வாபஸ் (-) விவரம்

தேதி வாங்கியது விற்றது மொத்த முதலீடு

ஆகஸ்ட் 25 ரூ.5,740.27 ரூ.3,986.60 ரூ.1,753.67

ஆகஸ்ட் 24 ரூ.5,309.29 ரூ.4,247.05 ரூ.1,062.24

ஆகஸ்ட் 21 ரூ.3,915.56 ரூ.3,477.79 ரூ.437.77

ஆகஸ்ட் 20 ரூ.4,819.68 ரூ.4,980.96 (-)ரூ.161.28

ஆகஸ்ட் 19 ரூ.5,545.90 ரூ.4,447.14 ரூ.1,098.76

ஆகஸ்ட் 18 ரூ.5,396.00 ரூ.4,344.75 ரூ.1,051.25

ஆகஸ்ட் 17 ரூ.15,788.48 ரூ.3,474.41 ரூ.12,314.07

ஆகஸ்ட் 14 ரூ.4,773.73 ரூ.4,961.46 (-)ரூ.187.73

ஆகஸ்ட் 13 ரூ.4,552.48 ரூ.4,055.56 ரூ.496.92

ஆகஸ்ட் 12 ரூ.8,032.41 ரூ.4,573.85 ரூ.3,458.56

ஆகஸ்ட் 11 ரூ.16,974.38 ரூ.5,203.15 ரூ.11,771.23

ஆகஸ்ட் 10 ரூ.5,867.71 ரூ.4,595.39 ரூ.1,272.32

ஆகஸ்ட் 07 ரூ.6,499.43 ரூ.5,192.95 ரூ.1,306.48

ஆகஸ்ட் 06 ரூ.5,451.52 ரூ.4,875.69 ரூ.575.83

ஆகஸ்ட் 05 ரூ.5,981.80 ரூ.6,200.66 (-)ரூ.218.86

04-அன்ஞ்-2020 ரூ.5,450.77 ரூ.4,574.99 ரூ.875.78

ஆகஸ்ட் 03 ரூ.1,842.31 ரூ.2,108.72 (-)ரூ.266.41

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com