தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமானது பொள்ளாச்சி: ஆண்டுக்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி கிடைக்க வாய்ப்பு

தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக பொள்ளாச்சியை மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஆண்டுக்கு சிறப்பு நிதி ரூ. 1000 கோடி வரை பொள்ளாச்சிக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமானது பொள்ளாச்சி: ஆண்டுக்கு ரூ.1000 கோடி சிறப்பு நிதி கிடைக்க வாய்ப்பு

தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக பொள்ளாச்சியை மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஆண்டுக்கு சிறப்பு நிதி ரூ. 1000 கோடி வரை பொள்ளாச்சிக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 உலக அளவில் இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பின்ஸ், இலங்கை, மலேசியா உள்ளிட்ட 93 நாடுகளில் தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகம், கேரளம், தமிழகம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகம். நாடு முழுவதும் 18.95 லட்சம் ஹெக்டேர்களில் தென்னை சாகுபடிப் பரப்பு உள்ளது. இதில் 16 ஆயிரத்து 940 மில்லியன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
 தமிழகத்தில் 4.19 லட்சம் ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் உள்ளது. தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் 36 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் தென்னை விவசாயம் உள்ளது. அதில் 80 சதவீதம் பொள்ளாச்சி பகுதியில்தான் உள்ளது. பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் அதிகம் உள்ளதால், தென்னை சார்ந்த பொருள்கள் உற்பத்தி செய்யும் 750 தொழிற்சாலைகள் உள்ளன.
 இந்தத் தொழிற்சாலைகளில் தென்னை நார், நார்கட்டி, மெத்தை, கால்மிதி, விவசாயத்துக்குப் பயன்படும் தொட்டிகள் போன்ற 14 வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
 சீனா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தென்னை நார் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் தென்னை நாரை வாங்கும் சீனா உள்ளிட்ட சில நாடுகள் அதை மதிப்புக் கூட்டி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவில் இருந்து தென்னை நார்களை வாங்கும் பெரும்பாலான நாடுகள் மண்ணில்லா விவசாயத்துக்கு தென்னை நாரை பயன்படுத்திவருகின்றன.

இந்தியாவில் இருந்து தென்னை நார் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ. 2800 கோடிக்கு நடைபெற்று வருகிறது. இதில் பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ரூ. 1400 கோடிக்கும் மேல் ஏற்றுமதியாகிறது. பொள்ளாச்சியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 1 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனர்.
 பொள்ளாச்சியில் இருந்து மட்டும் தென்னை நார் மற்றும் அது சார்ந்த பொருள்களின் ஏற்றுமதி ரூ.1400 கோடிக்கும் மேல் நடைபெற்றுவருவதால் பொள்ளாச்சியை, தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக அறிவிக்கவேண்டி உற்பத்தியாளர்கள், உற்பத்தியாளர்கள் சங்கங்கள், தொழில் வர்த்தக சபை ஆகியன சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
 இந்தக் கோரிக்கை பரிசீலனையில் இருந்துவந்த நிலையில், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் இதற்காகத் தொடர் முயற்சி எடுத்தார். இந்நிலையில் பொள்ளாச்சியை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரமாக மத்திய அரசு ஜனவரி 29ஆம் தேதி அறிவித்துள்ளது. இதனால், பொள்ளாச்சி தென்னைநார் தொழில் மேலும் வளர்ச்சியடையும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசின் கயிறு வாரிய உறுப்பினர் எஸ்.கே.கெளதமன் கூறியதாவது:
 பொள்ளாச்சியை தென்னை நார்ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரமாக மத்திய அரசு அறிவித்துள்ளதால் இந்தத் தொழில் நல்ல வளர்ச்சியடையும். இந்த அறிவிப்பால், பொள்ளாச்சிக்கு ஆண்டுக்கு சிறப்பு நிதியாக ரூ. 1000 கோடிக்கும் மேல் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த நிதியால் விவசாயிகள், தென்னை நார் தொழிற்சாலைகள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
 மேலும், பொள்ளாச்சியில் தென்னை நார் பொருள்கள் சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படும். தென்னைநார் பொருள்கள் தரம் அறியும் ஆய்வகம், கொள்கலன் முனைப்பகம், வெளிநாடுகளில் தென்னைநார் சார்ந்த கண்காட்சிகள் தற்காலிகமாக, நிரந்தரமாக அமைக்க சிறப்பு நிதி போன்றவை கிடைக்கும். கொள்கலன் முனைப்பகம் இல்லாததால் தற்போது ஏற்றுமதிக்காக தூத்துக்குடிக்கு செல்லலவேண்டியுள்ளது. பொள்ளாச்சியில் அமைந்தால் செலவு குறையும்.
 வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் ஏற்றுமதியை ரூ. 10 ஆயிரம் கோடியாக உயர்த்தவும், உள்நாட்டு சந்தை விற்பனையை ரூ. 25 ஆயிரம் கோடியாக உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தோட்டக் கலைத் துறை, வேளாண்மைத் துறை, ரயில்வே, நெடுஞ்சாலைத் துறை போன்றவற்றுக்கு அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
 சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் அமைச்சகம், கடந்த ஓராண்டாக இதற்காக முயற்சி எடுத்து ஹைதராபாத், பெங்களூரு, கேரளத்தின் சில இடங்களில் கருத்தரங்கம் நடத்தியுள்ளனர். புணே, தில்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் வரும் இரண்டு மாதங்களுக்கு கருத்தரங்கம் நடத்தவுள்ளனர். தென்னை நார் தொழில் சம்பந்தமாகத் தொழில் முனைவோருக்கு இலவச ஆலோசனைகள் தேவைப்பட்டால் 9443136451 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபைத் தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
 பொள்ளாச்சியை தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்பு பொருளாதார நகரமாக மாற்ற வேண்டி தொழில் வர்த்தக சபை சார்பில் மத்திய அரசுக்கு நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வந்தோம். தற்போது, அந்தக் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இதன்மூலம் ஆண்டு ரூ. 1000 கோடிக்கும் மேல் சிறப்பு நிதி கிடைக்கும். நிதியின் மூலம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
 பொள்ளாச்சிக்கு கொள்கலன் முனைப்பகம் இல்லாததால் தற்போது தென்னை நார் ஏற்றுமதியாளர்கள் கொச்சிக்கும், தூத்துக்குடிக்கும் செல்லவேண்டியுள்ளது. பொள்ளாச்சியில் கொள்கலன் முனைப்பகம் அமைத்தால் ஏற்றுமதி மேலும் அதிகமாவதோடு, ஏற்றுமதியாளர்களுக்கு செலவும் குறையும். பொள்ளாச்சி ரயில்வே வழித்தடத்தை மின்பாதையாக மாற்ற வேண்டும் என்றார்.

பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் கூறியதாவது:
 தென்னை நார் ஏற்றுமதிக்கான சிறப்புப் பொருளாதார நகரமாக பொள்ளாச்சியை அறிவித்துள்ளதால் இந்த நகரம் மேலும் வளர்ச்சியடையும். பொள்ளாச்சியில் கொள்கலன் முனைப்பகம் அமைக்க, மத்திய அரசுக்கு மாநில அரசு கோரிக்கை வைக்கவேண்டும். தென்னை நார் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் இந்தக் கோரிக்கையை நான் மத்திய அரசுக்கு எடுத்துச்செல்வேன். பொள்ளாச்சியில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 28 ஆயிரம் கொள்கலன்களில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்காக தென்னைநார் உற்பத்தியாளர்கள் அதிக தொகை செலவு செய்யவேண்டியுள்ளது. பொள்ளாச்சியில் கொள்கலன் முனைப்பகம் அமைத்தால் ஏற்றுமதியாளர்களுக்கான செலவு குறையும். பொள்ளாச்சி வழித்தடத்தை மின்பாதையாக மாற்ற முயற்சி எடுப்பேன் என்றார்.
 - என்.ஆர். மகேஷ்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com