மிளகு விலை தொடர் வீழ்ச்சி: இறக்குமதியை கட்டுப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு!

கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து எண்ணெய் நீக்கம் செய்யப்பட்ட மிளகு இறக்குமதி செய்யப்படுவதால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகின்  விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும், தமிழக மிளகுடன்
மிளகு விலை தொடர் வீழ்ச்சி: இறக்குமதியை கட்டுப்படுத்த விவசாயிகள் எதிர்பார்ப்பு!

கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து எண்ணெய் நீக்கம் செய்யப்பட்ட மிளகு இறக்குமதி செய்யப்படுவதால், தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகின் விலை தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும், தமிழக மிளகுடன் கலப்படம் செய்து ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் எதிர்கால சந்தை வாய்ப்பும் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் உணவுப் பழக்க வழக்கத்தில் மிளகு ஒரு முக்கிய இடம் வகித்து வருகிறது. அளவில் சிறிதாக இருந்தாலும் நறுமணம் மற்றும் காரத் தன்மை அடிப்படையில் தமிழகம், கர்நாடகம், கேரள மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் மிளகு உலக அளவில் வர்த்தக ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை மற்றும் கொடைக்கானல் கீழ்மலை, நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் சுமார் 2ஆயிரம் ஹெக்டேரில் மிளகு சாகுபடி நடைபெற்று வருகிறது.

ஒருமுறை நடவு செய்யப்படும் மிளகு கொடி, 4 ஆண்டுகளுக்கு பின் காய்ப்புக்கு வந்தாலும், நல்ல மகசூல் என்பது 7ஆண்டுகளுக்குப் பின்னரே கிடைக்கிறது. 30 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கும் மிளகு கொடிகளை, இயற்கை சீற்றத்திலிருந்து மட்டுமின்றி, நோய் தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மேலும், கோடை காலத்தின்போது வில்ட் என்ற வைரஸ் தாக்குதல் மிளகு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே, கடின முயற்சிகளுக்குப் பின் அறுவடை செய்யப்படும் மிளகுக்கு கடந்த 2 ஆண்டுகளாக போதிய விலை கிடைக்காதது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர், இந்தோனேசியா, தாய்லாந்து, வியத்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு மிளகு இறக்குமதி செய்யப்படுவதே உள்ளூர் மகசூலுக்கான விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

எண்ணெய் நீக்கப்பட்ட மிளகு

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிளகு, எண்ணெய் நீக்கப்பட்ட சக்கையாக மட்டுமே உள்ளன. எண்ணெய் நீக்கப்பட்ட மிளகு, அழகு சாதனப் பொருள்களில் கலப்பதற்கு மட்டுமே சில நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை இந்திய சந்தைகளில் உணவுப் பொருளாக விற்பனை செய்கின்றனர்.

தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் மிளகு உணவுப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட மிளகு, உள்ளூர் மிளகுடன் கலந்து விற்பனை செய்வதன் மூலம், நுகர்வோர்கள் ஏமாற்றப்படுகின்றனர். பப்பாளி விதைகள் கலப்படம் செய்யப்பட்ட மிளகு விற்பனையை கண்டுகொள்ளாத நுகர்வோர், எண்ணெய் நீக்கப்பட்ட மிளகு குறித்து எவ்வித சந்தேகமுமின்றி சகஜமாகப் பயன்படுத்தப் பழகிவிட்டதாக தோட்டக்கலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த மிளகு விவசாயி தினேஷ் கூறியதாவது: தமிழகத்தில் சாகுபடி செய்யப்பட்ட மிளகு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.550 முதல் ரூ.900 வரை தரத்தின் அடிப்படையில் கொள்முதல் செய்யப்பட்டது. கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து கடந்த 2018-19-ஆம் ஆண்டில் இறக்குமதி செய்யப்பட்ட மிளகு வந்த பின், தமிழக மிளகுக்கான கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்துவிட்டது.

மிளகு அறுவடை பணியில் ஈடுபடும் கூலித் தொழிலாளர்களுக்கு ஊதியமாக ரூ.700 வரை வழங்க வேண்டியுள்ளது. ஆனால், மிளகு கொள்முதல் விலை ரூ.315ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை அடுத்த 10 நாள்களில் மேலும் சரிவடையும் என கூறுகின்றனர். இதனால் மிளகு விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

தாண்டிக்குடி விவசாயி சிவகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு 8ஆயிரம் டன் மிளகு இறக்குமதி செய்யப்பட்டது. நிகழாண்டில் 30ஆயிரம் டன் மிளகை இறக்குமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளனர். கர்நாடகம் மற்றும் கேரளத்தில் பருவம் தவறிய மழையினால், மிளகு மகசூல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் கூடுதல் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கூறுகின்றனர். அதே நேரத்தில், தென்னிந்தியாவில் சாகுபடி செய்யப்படும் மிளகுடன், கிழக்காசிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகை கலப்படம் செய்து, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முயற்சியில் வணிகர்கள் ஈடுபடுகின்றனர். இதனால், தென்னிந்திய மிளகின் தரம் கேள்விக்குறியாவதுடன், எதிர்காலத்தில் சந்தை வாய்ப்பினை இழக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

எனவே, மிளகு இறக்குமதியை குறைப்பதற்கும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் அறுவடை செய்யப்படும் தரமான மிளகுக்கு உரிய விலை நிர்ணயம் செய்து விவசாயிகளை ஊக்கப்படுத்தவும் அரசு துணை நிற்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com