5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு நனவாகுமா?

கடந்த  2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிரதமர் மோடி,  அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்
5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவு நனவாகுமா?

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிரதமர் மோடி, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 350 லட்சம் கோடி) மதிப்பிலான பொருளாதாரமாக மாற்றியமைக்கும் தனது கனவை நாட்டுமக்கள் முன்பு பகிர்ந்து கொண்டார்.

பிரதமர் மோடியின் அறிவிப்பு வெளியானதும், இது குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் லக்னெளவில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் குறித்த சந்தேகங்களுக்கு பதிலளித்து பேசுகையில், "5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் சாத்தியமா? என்று சிலர் கேட்கிறார்கள். அப்படி கேட்பவர்கள், இந்தியர்களின் திறன்மீது நம்பிக்கையில்லாதவர்கள். 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவது சாதாரணமல்ல என்று வாதிடுகிறாகள். துணிச்சல், புதிய சாத்தியக்கூறுகள், வளர்ச்சிக்காக தியாகம் செய்யும் தகிக்கும் தீக்கனல், இந்தியத் தாய்க்கு உழைக்கும் பாங்கு, புதிய இந்தியாவுக்கான கனவு ஆகியவை இருப்பது அவசியமாகிறது. நான் கூறிய அனைத்தையும் கடைப்பிடித்தால், 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரக் கனவு மெய்ப்படும்' என்றார் அவர்.

" இன்றைக்கு வளர்ந்த நாடுகளாக இருப்பவை, ஒரு காலத்தில் வளரும் நாடுகளாக இருந்தவைதான். இந்த நாடுகளில் குறுகிய காலத்தில் தனி நபர் வருமானம் வேகமாக வளர்ச்சி அடைந்த வரலாறு உண்டு. இந்த காலக்கட்டத்தில் இந்த நாடுகள் வளரும் நாடுகள் தகுதியில் இருந்து வளர்ந்த நாடாக உயர்ந்தன. எந்தவொரு நாட்டிலும் தனிநபர் வருமானம் உயர்ந்தால், அது வாங்கும் சக்தியை உயர்த்தும். கொள்முதல் திறன் உயர்ந்தால், அது தேவையை அதிகரிக்கும்.

தேவை அதிகரித்துவிட்டால், உற்பத்தி பெருகும், சேவை விரிவடையும். இது மறுபடியும் தனிநபர் வருமானத்தை உயர்த்தி, குடும்ப சேமிப்பை உயர்த்தும்." என்று தனது 5 டிரில்லியன் டாலர் கனவை நனவாக்குவதற்கான வழிமுறைகளையும் பிரதமர் மோடி விளக்கினார்.

பிரதமர் மோடியின் கனவு திட்டத்தைச் செயல்படுத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உருவெடுத்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்தியாவின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) 2.8 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குள், இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உருவெடுக்க வேண்டுமானால், இந்தியாவின் ஜிடிபி 9 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

இந்திராகாந்தி மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் பொருளாதார பேராசிரியர் ஆர்.நாகராஜ் கூறுகையில்," இந்தியப் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்துவது கடினமானதாகத் தோன்றுகிறது. என்னைப் பொருத்தவரை, கடந்த பத்தாண்டு கால புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும்போது 5 டிரில்லியன் டாலர் கனவு நடைமுறை சாத்தியமானது இல்லை. கடந்த ஜூலை மாதத்தில், எனது மதிப்பீட்டின்படி, 2020-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டுவரை இந்தியாவின் பொருளாதாரம் 9 சதவீதமாக இருந்தால் மட்டுமே, 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் சாத்தியமாகும். இந்தியாவின் வளர்ச்சி விகிதம் சரிந்துவரும் நிலையில், 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைவது கற்பனைக்கு எட்டாததாகும்." என்றார் அவர்.

கடந்த 11 ஆண்டு கால அளவில் மிகவும் குறைவாக, நிகழ் நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5 சதவீதமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த ஆண்டு 6.8 சதவீதமாக இருந்தது. அரசுவெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சியே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. 2019 -20-ஆம் ஆண்டில் உற்பத்தித்துறையின் வளர்ச்சி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகவும், சேவைத் துறை 7.5 சதவீதத்தில் இருந்து 6.9 சதவீதமாகவும் சரிவைச் சந்தித்துள்ளன. உலக அளவிலான போர் பதற்றம், அதிகரித்துவரும் கச்சா எண்ணெய் விலை, வரி வசூல் மந்தமானது, அரசு செலவினம் அதிகரிப்பு போன்றவை இந்தியாவின் பொருளாதாரத்தின் வேகத்தைப் பின்னுக்குத் தள்ளியுள்ளதாக பொருளாதார அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரத்தின் மந்தநிலைக்கு கட்டமைப்பின் குறைபாடே அன்றி, சுழல்முறை சம்பந்தப்பட்டது அல்ல என்றும் கூறுகிறார்கள். தானியங்கி வாகனம், வீட்டு வசதி, நுகர்பொருள்கள் போன்ற துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், இந்தியாவின் பொருளாதாரம் மீண்டும் உயிர்ப்போடு செயல்படத் தொடங்கும் என்கிறார்கள்.

பரிந்துரைகள்

பிரதமர் மோடியும், மத்திய அரசும் எடுத்துவரும் சீர்திருத்தங்கள், இந்தியாவின் பொருளாதாரத்தை சீராக்கும் திசைக்கு இட்டுச்செல்லும் என்கிறார் கர்நாடகத் தொழில் வர்த்தக சபை கூட்டமைப்புத் தலைவர் சி.ஆர்.ஜனார்தனா. கடந்த ஜன.2-ஆம் தேதி பெங்களூருக்கு வந்திருந்தபோது பிரதமர் மோடியைச் சந்தித்த சி.ஆர்.ஜனார்தனா, இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக சில ஆலோசனைகள் அடங்கிய பரிந்துரைகளை அளித்துள்ளனர்.
பிரதமர் மோடியுடனான சந்திப்பின்போது, இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள சிறு தொழில்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து விவாதித்துள்ளனர். தொழில் துறையினரின் ஆலோசனையின்பேரில், இந்திய பொருளாதாரத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டிருப்பதாக சி.ஆர்.ஜனார்தனா தலைமையிலான கர்நாடக தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் குழுவினரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.


பொருளாதார மந்த நிலை


இந்தியாவின் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதற்கு, உலகப் பொருளாதாரம் மந்தநிலையில் நகர்வதே முக்கிய காரணமாகும். உலகின் பெரும்பாலான நாடுகள் பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளன.

இந்தியாவின் பொருளாதாரத்தைப் புதுப்பிக்க பிரதமர் மோடி எடுத்துவரும் அண்மை கால செயல் திட்டங்கள் வரவேற்கக் கூடியவையாகும். அடுத்த 6 மாதங்களில் இந்தியப் பொருளாதாரம் சீரடைவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. உள்நாட்டு சந்தை விரிவடைந்துள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 10 சதத்தை அடையும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன.

இந்தியாவின் மிகப்பெரிய சொத்தே புத்தாக்க ஆற்றல் கொண்ட நமது இளைஞர்களே. 50 சத இந்தியர்கள் இளைஞர்களாக இருப்பது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உற்பத்தித் துறையில் பல புதிய தொழில்நுட்பங்கள் வந்துகொண்டுள்ளன. அங்கு இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. சிறுதொழில்கள் சீரடைய உதவினால், பொருளாதார வளர்ச்சி சாத்தியமாகும். கடன் இணைப்பு மூலதன மானியத்தை தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினருக்கு மட்டும் அளிக்காமல், அதை அனைத்து சமுதாயத்தினருக்கும் அளிக்கவேண்டும்.

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பதே தொழில்துறைதான். எனவே, தொழில்துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளை தீர்த்துவைக்க மத்திய அரசு முன்வந்தால், இந்திய பொருளாதாரம் சீரடையும். அப்போது பிரதமர் மோடியின் 5டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார கனவு நனவாகும் என்பதில் ஐயம் தேவையில்லை." என்று சி.ஆர்.ஜனார்தனா தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com