இந்திய பருத்திக் கழகம் ஜவுளித் துறைக்கு நண்பனா, எதிரியா?

இந்திய பருத்தி விவசாயிகளுக்கும், ஜவுளித் துறைக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ), தனது லாப நோக்கச் செயல்பாடுகளால் ஜவுளித் துறையின் எதிரியாக மாறிவிடக் கூடாது என்ற
இந்திய பருத்திக் கழகம் ஜவுளித் துறைக்கு நண்பனா, எதிரியா?

இந்திய பருத்தி விவசாயிகளுக்கும், ஜவுளித் துறைக்கும் இணைப்புப் பாலமாக இருக்கும் இந்திய பருத்திக் கழகம் (சிசிஐ), தனது லாப நோக்கச் செயல்பாடுகளால் ஜவுளித் துறையின் எதிரியாக மாறிவிடக் கூடாது என்ற அச்சம் நூற்பாலைத் துறையினருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்திய ஜவுளித் துறை பருத்தியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பருத்தி விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் இந்தத் தொழில் துறையின் அடுத்தடுத்த நிலைகளில் உள்ள பஞ்சாலைகள், நூற்பாலைகள், கைத்தறி, விசைத்தறி, சாயப் பட்டறைகள், பிராசஸிங், கார்மென்ட்ஸ், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த தொழில் துறையையுமே பாதிக்கிறது.

நாடு முழுவதும் சுமார் 1,300 சிறு, குறு பஞ்சாலைகள் உள்ளிட்ட மொத்தம் 3,100 பஞ்சாலைகள் உள்ளன.  நாட்டிலுள்ள நூற்பாலைகளில் சுமார் 47 சதவீதம் தமிழகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு அடித்தளமாக இந்த ஆலைகள் உள்ளன. எனவே இந்தத் துறையில் ஏற்படும் எந்த ஒரு சரிவும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் காரணியாகிறது.

பஞ்சு வர்த்தகம் உலகமயமாக்கப்பட்ட பிறகு, அடிக்கடி ஏறி இறங்கும் பஞ்சின் விலைக்கு ஏற்ப மேற்கண்ட ஆலைகள் அவ்வப்போது நெருக்கடி நிலையைச் சந்திக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் இருந்து கடந்த 2007 இல் பருத்தி நீக்கப்பட்டதில் இருந்தே, பன்னாட்டு பஞ்சு வியாபாரிகளின் ஆதிக்கம் இந்திய பருத்திச் சந்தையில் தலைதூக்கிவிட்டது. அதற்கு முன்னர் பருத்தியை யாரும் பதுக்கி வைக்கவோ, இருப்பில் வைத்து விற்பனை செய்யவோ முடியாத நிலை இருந்தது.

ஆனால் சட்டத்தில் விலக்கு பெற்றதுமே பருத்தி, பஞ்சாலைகள், நூற்பாலைகளுக்கு நேரடியாகச் செல்லாமல் வியாபாரிகள், இடைத்தரகர்களின் கைகளுக்குச் சென்றுவிட்டது.  இதுபோன்ற நிலைமை உருவாகாமல் தடுப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பான சிசிஐயும், வியாபாரிகளைப் போலவே வர்த்தக நோக்கில் செயல்படுவதுதான் ஜவுளித் துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாலைகளுக்கு பருத்தியை விலை உயர்வு இல்லாமல் சீராக விநியோகம் செய்ய 1970 இல் இந்திய பருத்தி கழகம் தொடங்கப்பட்டது. மத்திய ஜவுளித் துறையின் கீழ் செயல்படும் இந்த அமைப்பு, 1985 முதல் பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை வழங்கும் பணியையும் செய்து வருகிறது. அதாவது அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை விவசாயிகளுக்கு வழங்கி, நாடெங்கும் உள்ள கொள்முதல் நிலையங்கள் மூலம் பருத்தியைப் பெற்றுக்கொண்டு அதை இருப்பில் வைத்து, நாடு முழுவதிலும் உள்ள பஞ்சாலைகளுக்குத் தேவையான நேரத்தில் வழங்கி, நாட்டின் ஆடைத் தேவையை பூர்த்தி செய்வதற்கும், ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும் உதவ வேண்டியது சிசிஐ அமைப்பின் பணி.

ஆனால் இந்த இரண்டு பெரிய பணிகளுக்கு இடையே, கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தனக்கு (சிசிஐ) நிதியைச் சேர்க்கும் திட்டமும், அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாதவண்ணம் இதைச் செய்தாக வேண்டிய கட்டாயமும் இந்தக் கழகத்துக்கு உள்ளது. இதனால்தானோ என்னவோ, அண்மைக் காலமாக எந்த நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதோ அந்த நெறிமுறையில் இருந்து விலகி, தன்னையும் ஒரு வியாபாரியாகக் கருதி லாபமீட்டும் நடவடிக்கைகளில் சிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது என்கிறார் தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவர் அஸ்வின் சந்திரன்.
இந்தியாவில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை பருத்தி சீசன் உள்ளது. இந்த 4 மாதக் காலத்தில் 90 சதவீதம் பஞ்சு சந்தைக்கு வந்துவிடும். பெரிய ஆலைகள் 25 சதவீத மார்ஜின் தொகையைச் செலுத்தி, 12 சதவீத வட்டிக்கு வங்கிக் கடனைப் பெற்று, தங்களுக்குத் தேவையான பஞ்சை சிசிஐயிடம் இருந்து பெற்றுக் கொள்ளும். ஆனால்,  பிற ஆலைகளுக்கு வங்கிக் கடன் கிடைப்பதில்லை என்பதால், சீசன் இல்லாத அடுத்த 8 மாதங்களுக்கான பஞ்சை கையிருப்பில் வைத்து, அவர்களுக்குத் தேவையானபோது விற்பனை செய்யும் பொறுப்பு சிசிஐக்கு உள்ளது. 

அதேநேரம், பெரும் நிதிவசதியுடன் இருக்கும் பன்னாட்டு வியாபாரிகள், சீசன் காலத்தில் அதிக அளவிலான பஞ்சை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு அதிக லாபத்துக்கு ஆலைகளுக்கு விற்பனை செய்கின்றனர்; அல்லது, அவற்றை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் உள்நாட்டில் பற்றாக்குறை ஏற்படும்போது  நாம் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இந்த நிலையில்தான், ஜவுளித் துறையின் ஓர் அங்கமாக இருந்துகொண்டே ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு உதவாமல் தனது அமைப்புக்கு லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு சிசிஐ செயல்படுவதாக விமர்சனம் எழுகிறது. பன்னாட்டு வியாபாரிகளைப் போலவே மொத்தமாக கொள்முதல் செய்யும் சிசிஐ, அதை தேவையான நேரத்தில் ஆலைகளுக்கு விற்பதில்லை. அப்படியே விற்றாலும் கூடுதல் விலைக்கே விற்கிறது. அந்த அமைப்பின் தலையாய நோக்கம்  மாறி, லாபமீட்டுவது ஒன்றே இலக்காகி இருக்கிறது. 

கடந்த சீசனில் ஒரு கேண்டி பஞ்சை (356 கிலோ) ரூ. 39 ஆயிரத்துக்கு வாங்கிய சிசிஐ, அதை தற்போது ரூ. 46 ஆயிரத்துக்கு விற்கிறது. ஆனால் வெளிச் சந்தையிலோ ரூ. 42 ஆயிரத்துக்கே பஞ்சு கிடைக்கிறது. இத்தனைக்கும் பஞ்சு விற்பனையில் சிசிஐக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்டிக் கொள்வதற்கான நிதியை மத்திய அரசு வழங்கி விடுகிறது. இதற்காகவே கடந்த நிதிநிலை அறிக்கையில் கூட ரூ. 2,017 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அதேநேரம் சிசிஐயின் வரலாற்றில் இதுவரை மிகப் பெரிய நஷ்டத்துக்கு அது பஞ்சை விற்றதில்லை. சீசனின்போதே ரூ. 46 ஆயிரத்துக்கு பஞ்சு விற்பனை செய்யும் சிசிஐ, சீசன் முடிந்தால் மேலும் அதிக விலைக்கு விற்கக் கூடும். இதனால் நூலின் விலையும் அதிகரிக்கும். கடந்த 4 ஆண்டுகளாக ஏற்றுமதியில்லாமல், கடன்களுடன் தள்ளாடி வரும் ஜவுளித் துறையை இது மேலும் சிக்கலுக்குள்ளாக்கும்.

ஆனால், கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது ஜவுளித் துறைக்கு ஸ்மிருதி இரானி பொறுப்பேற்றது முதல் இதுவரையிலான காலகட்டத்தில், பெரும்பாலான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது. சிட்டா நூல் கொள்கையில் திருத்தம், பொதுவான 5 சதவீத ஜி.எஸ்.டி., கப்பல் மூலம் பஞ்சு கொண்டுவர ஏற்பாடு, ஆன்லைன் மூலம் பஞ்சு விற்பனை, சிறிய ஆலைகளுக்கு ஏற்ப சிறிய அளவில் பஞ்சு விற்பனை, ஆலைகள் வாங்காவிட்டால் மட்டுமே வியாபாரிகளுக்கு பஞ்சு விற்பனை செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு என பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, சந்தை விலைக்கே பஞ்சை விற்பனை செய்ய வேண்டும் என்று பருத்திக் கழகத்தின் வர்த்தகக் கொள்கையில் மாற்றத்தைக் கொண்டுவந்தால், ஒட்டுமொத்த ஜவுளித் துறையும் நிம்மதியுடன் செயல்பட முடியும் என்கிறார் அஸ்வின் சந்திரன்.

வெளி மார்க்கெட்டிலும் பஞ்சு விலையை உயர்த்தி வரும் இந்திய பருத்திக் கழகம், ஜவுளித் துறைக்கு தேவையில்லாத அமைப்பாகிவிட்டது. எனவே அந்த அமைப்பையே ஒட்டுமொத்தமாகக் கலைத்துவிடலாம் என்கிறார் தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) தலைவர் என்.முருகேசன். அவர் கூறியதாவது:

25,000 கதிர்கள் வரை கொண்ட பெரிய பஞ்சாலைகளுக்கே நாளொன்றுக்கு சுமார் 75 பேல்கள் பருத்தி மட்டும்  தேவைப்படுகிறது.  இந்நிலையில், பருத்திக் கழகம் ஆன்லைன் மூலம் 2,000  முதல் 25,000 வரையிலான பேல்களை மட்டுமே விற்பனை செய்கிறது. இந்த அளவு பஞ்சை பணபலம் இல்லாத சிறு, நடுத்தர ஆலைகளால் வாங்க முடியாது.  எனவே பன்னாட்டு பருத்தி வியாபாரிகள், இடைத்தரகர்கள் இதை வாங்கி கூடுதல் விலைக்கு பருத்தியை விற்பனை செய்கின்றனர். மேலும், இதுபோன்று செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி ஒட்டுமொத்த ஜவுளித் துறையையும் நிலைகுலையச் செய்கின்றனர். எனவே சிசிஐ என்ற அமைப்பே தேவையில்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்துவிட்டோம்.

விவசாயியிடம் இருந்து சிசிஐக்கும், சிசிஐயிடம் இருந்து பஞ்சாலைக்கும், பஞ்சாலையிடம் இருந்து நூற்பாலைக்கும் நேரடியாக பருத்தி, பஞ்சு கிடைக்க வேண்டும். இடைத்தரகர்கள், வியாபாரிகள் இதற்கிடையே நுழைவதால் ஏற்படும் விலை உயர்வு, ஜவுளித் துறையின் தொடர் சங்கிலியில் உள்ள ஒவ்வொரு தொழிலையும் பாதிக்கச் செய்கிறது. 

இதைத் தவிர்க்க, புதிய வழியில் அரசு முயன்று பார்க்க வேண்டும். அதாவது, ஆண்டுதோறும் அரசு பருத்தி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயம் செய்யட்டும். அதேபோல சந்தையில் அன்றைய தேதியில் விற்கும் பஞ்சு விலையையும் குறித்துக் கொள்ளட்டும். இந்த இரண்டுக்குமான வித்தியாசத்தை விவசாயிகளுக்கான மானியமாக, சமையல் எரிவாயு நுகர்வோருக்கு வழங்கப்படுவதைப் போல நேரடியாக அவர்களிடமே வழங்கி விடட்டும். இப்படி நேரடியாக வழங்கிவிட்டால் இடைத்தரகர் லாபம், விலை உயர்வு, அதனால் பஞ்சாலைகள் பாதிக்கப்படுவது, இதன் தொடர்ச்சியாக பஞ்சையும், நூலையும் நம்பியிருப்பவர்கள் பாதிக்கப்படுவது என அனைத்தும் தவிர்க்க முடியும் என்கிறார் அவர்.

ஒரே நேரத்தில், தானும் நஷ்டப்படாமல், அரசுக்கும் கூடுதல் செலவை ஏற்படுத்தாமல், விவசாயிகளின் நலனையும், ஜவுளித் துறையின் நலனையும் காக்க வேண்டிய பொறுப்பு இந்திய பருத்திக் கழகத்துக்கு உள்ளது. ஜவுளித் துறையின் நலன் பாதுகாக்கப்பட்டால் மட்டுமே இந்தியாவில் பருத்தி விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும். ஏனெனில் பருத்தி விவசாயமும், ஜவுளித் துறையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை. இதை சிசிஐ உணருமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com