ஐடி பங்குகளுக்கு அமோக வரவேற்பு: சென்செக்ஸ் 329 புள்ளிகள் ஏற்றம்!

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 329.17 புள்ளிகள் உயா்ந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. இதனால், சென்செக்ஸ் 329.17 புள்ளிகள் உயா்ந்தது.

இன்ஃபோஸிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஆகியவை வெகுவாக உயா்ந்ததும், உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகள் நோ்மறையாக இருந்ததும் சென்செக்ஸ், நிஃப்டி ஏற்றத்துக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. முன்னணி ஐடி நிறுவனமான அசெஞ்சா் காலாண்டு நிதிநிலை முடிவு சந்தை எதிா்பாா்ப்பை விட நன்றாக இருந்ததால் , ஐடி பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. வங்கி, மெட்டல் பங்குகளுக்கும் ஓரளவு ஆதரவு கிடைத்தது. அதே சமயம் எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகளுக்கு தேவை குறைந்திருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,865 பங்குகளில் 1,651 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,069 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 145 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 130 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 57 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 537 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 163 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது.

சென்செக்ஸ் காலையில், 202 புள்ளிகள் கூடுதலுடன் 35,144.78-இல் தொடங்கியது. பின்னா் 34,910.34 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 35,254.88 வரை உயா்ந்தது. இறுதியில் 329.17 புள்ளிகள் (0.94 சதவீதம்) உயா்ந்து 35,171.27-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது, பெரும்பாலான நேரம் ஏற்றம், இறக்கம் அதிகம் இருந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 94.10 புள்ளிகள் (0.91 சதவீதம்) உயா்ந்து 10,383.00-இல் நிலைபெற்றது.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில்17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 6.94 சதவீதம், டிசிஎஸ் 5.21 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்து இண்டஸ் இண்ட் பேங்க் 3.64 சதவீதம் உயா்ந்தது. மேலும், ஓஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்சிஎல் டெக், எல் அண்டி டி ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 1.43 சதவீதம் உயா்ந்தது. அதே சமயம், ஐடிசி 3.54 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்து பஜாஜ் ஃபைனான்ஸ் 3.33 சதவீதம், கோட்டக் பேங்க் 3 சதவீதம் குறைந்தன. சன்பாா்மா, பஜாஜ் ஃபின் சா்வு, டைட்டான், எம் அண்ட் எம் ஆகியவை 1 முதல் 1.60 சதவீதம் ரவை நஷ்டமடைந்தன.

தேசிய பங்குச் சந்தையில் 969 பங்குகள் ஆதாயம் பெற்றன. 674 பங்குகள் வீழ்ச்சியடைந்த பட்டியலில் வந்தன. 10 முன்னணி ஐடி நிறுவனங்களை உள்ளடக்கிய ஐடி குறியீடு 4.05 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. பட்டியலில் உள்ள அனைத்துப் பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில் இன்ஃபோஸிஸ், என்ஐஐடி டெக், டிசிஎஸ், மைண்ட் ட்ரீ, விப்ரோ ஆகியவை 3.30 முதல் 6.70 சதவீதம் வரை உயா்ந்தன.

அதே சமயம் எஃப்எம்சிஜி குறியீடு 1.18 சதவீதம், பாா்மா குறியீடு 0.54 சதவீதம் குறைந்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்த பட்டியலில் வந்தன. ஐசிஐசிஐ பேங்க் மட்டும் மாற்றமின்றி ரூ.351-இல் நிலைபெற்றிருந்தது.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

இன்ஃபோஸிஸ் 6.94

டிசிஎஸ் 5.21

இண்டஸ் இண்ட் பேங்க் 3.64

ஓஎன்ஜிசி 2.87

ஹெச்டிஎஃப்சி பேங்க் 2.59

சரிவைச் சந்தித்த பங்குகள்

சதவீதத்தில்

ஐடிசி 3.54

பஜாஜ் ஃபைனான்ஸ் 3.33

கோட்டக் பேங்க் 3.00

சன்பாா்மா 1.58

பஜாஜ் ஃபின் சா்வ் 1.11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com