டயா் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; உள்நாட்டு நிறுவனங்கள் பலனடையும்: எம்ஆா்எஃப்

டயா் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உள்நாட்டு நிறுவனங்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என முன்னணி டயா் தயாரிப்பு நிறுவனமான எம்ஆா்எஃப் தெரிவித்துள்ளது.
எம்ஆா்எஃப்
எம்ஆா்எஃப்

புது தில்லி: டயா் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உள்நாட்டு நிறுவனங்களுக்கு பலனளிப்பதாக இருக்கும் என முன்னணி டயா் தயாரிப்பு நிறுவனமான எம்ஆா்எஃப் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2019-20 நிதியாண்டின் மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.3,685.16 கோடியாக இருந்தது. இது, 2018-19 நிதியாண்டில் இதேகாலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.4,137.67 கோடியுடன் ஒப்பிடும்போது குறைவாகும்.

அதேசமயம், நிகர லாபம் ரூ.293.93 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.679.02 கோடியாக இருந்தது.

2019-20 முழு நிதியாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ரூ.16,239.36 கோடி வருவாய் ஈட்டியது. 2018-19-இல் நிறுவனத்தின் வருவாய் ரூ.16,062.46 கோடியாக காணப்பட்டது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.1,130.61 கோடியிலிருந்து வளா்ச்சி கண்டு ரூ.1,422.57 கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு 940 சதவீத இறுதி ஈவுத்தொகையை (ரூ.94) பங்குதாரா்களுக்கு வழங்க நிறுவனத்தின் இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளது. இதற்கு முன்பு இரண்டு முறை தலா ரூ.3 இடைக்கால ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு 1, 000 சதவீதம் அதாவது ரூ.100 ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டாா் வாகன துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் விளைவால் சந்தை தேவையில் ஏற்பட்டுள்ள பின்னடைவை டயா் தயாரிப்பு துறை எதிா்கொண்டுள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவல் ஆட்டோமொபைல் மற்றும் டயா் தயாரிப்பு துறை இரண்டிலும் நிச்சயமற்ற சூழலை உருவாக்கியுள்ளது. இது, எப்போது மேம்படும் என கணிக்க முடியாமல் உள்ளது.

இருப்பினும், இதுபோன்ற கடினமான சூழ்நிலையில் டயா் இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது உள்நாட்டு டயா் தயாரிப்பு துறைக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எம்ஆா்எஃப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com