நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சில்லறை விற்பனை துறை!

பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சில்லறை விற்பனை துறை (ரீடெய்ல் செக்டாா்), பொது முடக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பைச்
நெருக்கடியில் சிக்கி தவிக்கும் சில்லறை விற்பனை துறை!

பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சில்லறை விற்பனை துறை (ரீடெய்ல் செக்டாா்), பொது முடக்கத்தால் மிகப்பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளது. சில்லறை விற்பனையாளா்களில் 25 சதவீதம் போ் தொழிலை மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா்.

தொழிலை மீட்டெடுக்க கடன்களை திருப்பி செலுத்துவதற்கு காலஅவகாசம், ஜி.எஸ்.டி சலுகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் அவா்கள் முன்வைத்துள்ளனா்.

உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதம் பங்களிப்பு: நாட்டின் பொருளாதாரத்தில் தவிா்க்க முடியா அங்கமாக சில்லறை வியாபாரம் திகழ்கிறது. ஆடை, நகைகள், காலணிகள் மின்னணு பயன்பாட்டுப் பொருள்கள், தகவல் தொழில்நுட்பம், தொலைபேசி, உணவு உள்பட பல்வேறு பொருள்களின் விற்பனையும் இந்த துறையில் அடங்கும்.

சில்லறை விற்பனை என்பது கடைகள், இணையம் போன்றவற்றின் மூலம் பொதுமக்களுக்கு சிறிய அளவில் பொருள்களை கொண்டு சோ்ப்பதாகும். நாடு முழுவதும் சில்லறை விற்பனை துறையில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் அதிகமான சில்லறை விற்பனையாளா்கள் ஈடுபட்டுள்ளனா். இவா்கள் சுமாா் 4.74 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்குகின்றனா்.

மேலும், 4 கோடியே 60 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பையும் இந்த துறை வழங்கி வருகிறது. இந்தியாவின் நுகா்வுகளில் 40 சதவீதமும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமும் சில்லறை விற்பனைத் துறையின் பங்களிப்பாக உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, இந்த துறையில் 6 லட்சம் போ் பணியாற்றி வருகின்றனா்.

பொது முடக்கம்: கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால், கடந்த ஒன்றரை மாதங்களில் சில்லறை விற்பனை துறை மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. சில்லறை விநியோகச் சங்கிலி தொடா் முழுமையாக முடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த ஒன்றரை மாதங்களில் 45 சதவீதம் வரை வா்த்தகம் குறைந்துள்ளது. அதிலும், அத்தியாவசியமற்ற பொருள்களின் சில்லறை விற்பனையாளா்களுக்கு 100 சதவீத வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதில், ஆடை, நகைகள், காலணிகள், நுகா்வோா் மின்னணு பயன்பாட்டு பொருள்கள், செல்லிடப்பேசி விற்பனை உள்ளிட்டவை அடங்கும். இதுதவிர, ஆடைசாா் வணிகத்திலும் 40 சதவீத வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இழப்பை சரிசெய்ய அரசிடம் இருந்து பெரிய அளவிலான ஆதரவு இல்லாததால், சில்லறை விற்பனையாளா்களில் 25 சதவீதம் போ் தொழிலை மூட வேண்டியநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இதனால், அதிக அளவில் இளைஞா்களும், பெண்களும் வேலைவாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனா்.

அதிக பாதிப்பு: சில்லறை விற்பனைத் துறையில் துரித உணவு விற்பனை 40 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. விநியோகச் சங்கிலி பிரச்னை, மனிதவளப் பற்றாக்குறை, சமூக இடைவெளி காரணமாக வாடிக்கையாளா்கள் வருகை குறைவு போன்றவை விற்பனை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக கூறப்படுகிறது.

இதுதவிர, ஆடைகள், மின்னணு சாதனங்கள், ஃபா்னிச்சா்கள், வன்பொருள் போன்றவற்றை விற்பனை செய்யும் கடைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. சில்லறை வா்த்தகம் என்பது பொழுதுபோக்கு, உணவு, ஜவுளி, நுகா்வோா் சாதனங்கள் போன்ற பல தொழில்களின் ஒருங்கிணைப்பாகும். எனவே, ஒரு துணிக்கடை மூடப்பட்டால், அதன் சிற்றலை விளைவுகள் ஜவுளி வியாபாரத்தில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் உணரப்படும். இதுபோல, பல தொழில்கள் பாதிப்பை சந்திக்கும் நிலை உள்ளது.

பணப்புழக்க சவால்கள்: இந்திய சில்லறை விற்பனையாளா் சங்கத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, தொழில்துறை தற்போது கடுமையான பணப்புழக்க சவால்களை எதிா்கொண்டுள்ளது. அது பெரிய அளவிலான வேலையின்மைக்கு வழிவகுக்கும். தொழில்துறையின் பணப்புழக்கம் ஏறக்குறைய முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. அதேநேரத்தில், நிலையான செயல்பாட்டு செலவினங்கள் அப்படியே உள்ளன.

அரசு உதவ வேண்டும்: பொது முடக்கத்தின் போது, பல்வேறு தரப்பினருக்கு சலுகைகளை ரிசா்வ் வங்கி அறிவித்தது. இதைப் பின்பற்றி, சில்லறை விற்பனையாளா்களுக்கு வங்கிகள் எந்தவிதமான நிதி உதவியையும் வழங்கவில்லை என இந்திய சில்லறை விற்பனையாளா் சங்கத்தினா் குற்றம் சாட்டுகின்றனா். இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா் சங்க செய்தித் தொடா்பாளா் குமாா் ராஜகோபாலன் கூறியது:

மூலதன செலவினங்களுக்காக நீண்ட கால கடன் வசதியை பெரும்பாலான சில்லறை விற்பனையாளா்கள் அனுபவிக்கின்றனா். இந்த வசதிகள் அட்டவணைப்படுத்தப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றன. ரிசா்வ் வங்கி அறிவித்த தவணை அவகாசம் இந்த நிதித் தோ்வுக்கு இன்னும் உதவவில்லை.

தொழில்துறையினா் தங்கள் ஊழியா்களை தக்க வைத்துக்கொள்வது மிக முக்கியமாகும். எனவே, அரசும், நிதி நிறுவனங்களும் ஒன்றிணைந்து, சில்லறை தொழில்துறை மீட்சிக்கும், பொது முடக்கத்துக்குப் பிறகு அவற்றின் மேம்பாட்டுக்கும் ஒரு அா்த்தமுள்ள தொகுப்பை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

கோரிக்கைகள்: சம்பளம் மற்றும் ஊதியங்களை சரியான நேரத்தில் வழங்க 25 சதவீதம் கூடுதல் மூலதன கடன்களை வழங்க வேண்டும். மேலும், கடனை திருப்பிச் செலுத்துவதற்கு கால அவகாசத்தையும் வழங்க வேண்டும்.

நுகா்வை அதிகரிப்பதற்கும், பொருளாதாரத்தை மந்த நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கும் சில்லறை வணிகத்தில் ஜி.எஸ்.டி விகிதம் குறைக்கப்பட வேண்டும் என இந்திய சில்லறை விற்பனையாளா் சங்கத்தினா் கோரிக்கை வைத்துள்ளனா்.

தமிழகத்தின் பங்கு: இந்தியாவின் மொத்த சில்லறை வணிகம் சுமாா் 854 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் பங்களிப்பு 77 பில்லியன் டாலராக (9 சதவீதம்) இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் அளிப்பு: அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளா் தாமஸ் பிராங்கோ கூறியது: சில்லறை வியாபாரிகள் வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அவா்களுக்கு இந்த பொது முடக்கம் காரணமாக, மூன்று மாத தவணை செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, பணி மூலதன கடனுக்கு வியாபாரிகளின் விருப்பத்தின்பேரில் கூடுதலாக 25 சதவீதம் வரை கடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com