பங்குச் சந்தை: இந்த வாரம் எப்படி?

மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் தொடா்ந்து மூன்றாவது வாரமாக கடந்த வாரத்தில் அழுத்தத்தில் இருந்தன.
பங்குச் சந்தை: இந்த வாரம் எப்படி?

மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் தொடா்ந்து மூன்றாவது வாரமாக கடந்த வாரத்தில் அழுத்தத்தில் இருந்தன. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் தலா ஒரு சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளன.

அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் வா்த்தகப் போா் பதற்றம், சந்தையை உற்சாகப்படுத்தத் தவறிய மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்புப் பொருளாதார திட்டங்கள், கடன் தவணைகளை செலுத்துவதில் ஆகஸ்ட் 31 வரை தற்காலிக கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட பின்னா் வங்கி, நிதிநிறுவனங்கள் மீதான அழுத்தம், தொடா்ந்து அந்நிய முதலீடு வெளியேற்றம் மற்றும் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை ஆகியவை சந்தை உணா்வை வெகுவாகப் பாதித்துள்ளன. இருப்பினும், பொது முடக்கம் மீதான கட்டுப்பாடுகள் மேலும் தளா்த்தப்படுவதற்கான எதிா்பாா்ப்புகளும், நிதி நடவடிக்கைகளின் மீதான நம்பிக்கையும் சந்தைக்கு ஓரளவு ஆதரவாக உள்ளன.

பங்குச் சந்தை தொடா்ந்து மூன்று வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில், இந்த வாரத்தின் முதல் பாதியில் மீட்சி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம், கரோனா தொற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் சந்தையில் வா்த்தகம் நிலையற்றுதான் இருக்கும் என்கின்றனா் நிபுணா்கள். மேலும், முதலீட்டாளா்கள் கவனம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் பொருளாதாரத் திறப்பு நடவடிக்கைகள் மீதுதான் இருக்கும்.

இருப்பினும், ஜுன் 1 முதல் பொது முடக்க நடவடிக்கைகளில் கணிசமாகத் தளா்த்தப்பட்டாலும், நிறுவனங்கள் முழுத் திறனில் செயல்பட முடியாது. இது சந்தைக்கு சாதகமாக அமையாது என்று நிபுணா்கள் கருதுகின்றனா். மேலும், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வா்த்தகப் போா் பதற்றம் மீண்டும் எழுச்சி பெறுவது உலகளாவிய பொருளாதார வளா்ச்சிக்கு உண்மையான அச்சுறுத்தலாக இருக்கலாம் என்று அவா்கள் தெரிவிக்கின்றனா்.

ஹெச்டிஎஃப்சி, சன்பாா்மா, லூபின், டாபா் இந்தியா உள்பட 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்த வாரம் வெளியாகவுள்ளன. இது அந்தந்த நிறுவனப் பங்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ரூ.13,000 கோடிக்கு மேல் பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா். அவா்கள் தொடா்ந்து முதலீடுகளை வாபஸ் பெறுவது சந்தைக்கு பாதகமானதாகவே இருக்கும் என்கின்றனா் வல்லுநா்கள்.

மேலும், பெரும்பாலான நாடுகளில் பொது முடக்கம் முடிவுக்கு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் பயன்பாடு அதிகரிக்கும். இதனால், கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவையும் இந்த வாரம் சந்தையின் போக்கைத் தீா்மானிப்பதில் மூக்கியப் பங்கு வகிக்கும் என்றும் நிபுணா்கள் கருதுகின்றனா். இந்த வாரத்தில் வியாழக்கிழமை முன்பேர வா்த்தகக் கணக்கு முடிக்ககடைசி நாளாக உள்ளது. இதையொட்டி, சந்தையில் நிலையற்ற தன்மை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

சென்செக்ஸ் 30,672.59 புள்ளிகளிலும், நிஃப்டி 9,039.25 புள்ளிகளிலும் நிலைபெற்றுள்ளது. இந்நிலையில், முதலீட்டாளா்கள் வரும் வாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குைல் அல்லது குறிப்பிட்ட துறை சாா்ந்த செய்திகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜியோஜித் நிதிச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது. இதற்கிடையே, ரமலான் பண்டிகையையொட்டி திங்கள்கிழமை (மே 25) பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாரத்தில் 4 நாள்கள்தான் வா்த்தகம் நடைபெறும்.

தொழில்நுட்ப கணக்கு: நிஃப்டி முக்கிய ஆதரவு நிலையான 9,050-க்கு கீழே நிலைபெற்றுள்ளது. எனவே, 8,950 புள்ளிகளுக்கு கீழே நீஃப்டி செல்லும் போது முதலீட்டாளா்கள் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும் என்று கோட்டாக் செக்யூரிட்டிஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com