2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 504 புள்ளிகள் ஏற்றம்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 503.55 புள்ளிகள் உயர்ந்தது.
2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் 504 புள்ளிகள் ஏற்றம்

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக எழுச்சி பெற்று நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 503.55 புள்ளிகள் உயர்ந்தது.
 அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி உலகலாளவிய சந்தை குறிப்புகள் நேர்மறையாக இருந்ததன் தாக்கம் இந்தியச் சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக வங்கி, நிதி நிறுவனங்கள், மெட்டல், பார்மா, ஆட்டோ பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்தது.
 ஆனால், எரிசக்தித் துறை பங்குகள் லாப நோக்கு விற்பனையை எதிர்கொண்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மார்க்கெட் லீடரான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை இரண்டாவது நாளாக சரிவைச் சந்தித்தது.
 இருப்பினும், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்ததால் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 1,410 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 2,830 பங்குகளில் 1,410 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,229 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 191 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வர்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ. 1.15 லட்சம் கோடி உயர்ந்து ரூ.158.34 லட்சம் கோடியாக இருந்தது.
 2-ஆவது நாளாக எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 233.17 புள்ளிகள் கூடுதலுடன் 39,990.375-இல் தொடங்கி 39,952.79 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னர் அதிகபட்சமாக 40,354.79 வரை உயர்ந்தது. இறுதியில் 503.55 புள்ளிகள் (1.27 சதவீதம்) உயர்ந்து 40,261.13-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், சென்செக்ஸ் இரண்டாவது நாளாக காளையின் ஆதிக்கத்தில் இருந்தது.
 ஐசிஐசிஐ முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், ஐசிஐசிஐ பேங்க் 6.51 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, பவர் கிரிட், சன்பார்மா உள்ளிட்டவை 3 முதல் 4.50 சதவீதம் வரை உயர்ந்தன. எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐடிசி, டாடா ஸ்டீல் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 என்டிபிசி கடும் சரிவு: அதே சமயம், என்டிபிசி 3.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ரிலையன்ஸ், நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 850 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.
 755 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 144.35 புள்ளிகள் (1.24 சதவீதம்) உயர்ந்து 11,813.50-இல் நிலைபெற்றது.
 நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஏற்றம் பெற்றன. 15 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், பார்மா குறியீடுகள் 1.50 சதவீதம் முதல் 3 .20 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், ரியால்ட்டி குறியீடு 2.30 சதவீதம், மீடியா குறியீடு 0.35 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
 அமெரிக்க தேர்தலையொட்டி, மொத்தத்தில் பங்குச் சந்தை நிலையற்ற தன்மையில் தான் இருக்கும். நிஃப்டி 11600-11650 என்ற நிலையில் நல்ல ஆதரவு உள்ளது. அதே சமயம், 11950-12050 என்ற நிலையில் இடர்பாடு உள்ளது. எனவே, மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com