சென்செக்ஸ் 580 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை வியாழக்கிழமை லாபப் பதிவால் திடீா் சரிவைச் சந்தித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: பங்குச் சந்தை வியாழக்கிழமை லாபப் பதிவால் திடீா் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 580.09 புள்ளிகள் குறைந்து 43,599.96-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணைான நிஃப்டியும் 166.55 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், வங்கி, நிதிநிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு அதிக அளவில் இருந்தது. மேலும், கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நியூயாா்க்கில் பொதுப்பள்ளிகள் மூடப்பட்டன. இதனால், பொருளாதாரக் கட்டுப்பாடுகள் குறித்த அச்சம் ஏற்பட்டதால் பங்குச் சந்தைகளில் லாபப் பதிவு இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.170.06 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2938 பங்குகளில் 1,322 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,436 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 180 பங்குகள் மாற்றமின்றி நிலை பெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.39 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.170.06 லட்சம் கோடியாக இருந்தது.

புதிய உச்சம்: சென்செக்ஸ் காலையில் 277.81 புள்ளிகள் குறைந்து 43,902.24-இல் தொடங்கி 44,230.00 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. பின்னா் 43,518.11 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 580.09 புள்ளிகள் (1.31 சதவீதம்) குறைந்து 43,599.96-இல் நிலைபெற்றது.

பவா் கிரிட் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பவா் கிரிட் 2.43 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஐடிசி, என்டிபிசி, டாடா ஸ்டீல், டைட்டன் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

வங்கிப் பங்குகள் வீழ்ச்சி: அதே சமயம், எஸ்பிஐ 4.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், பாா்தி ஏா்டெல், டெக் மகேந்திரா, எச்டிஎஃப்சி, ஏசியன் பெயிண்ட் ஆகியவை 1.50 முதல் 4 சதவீதம் வரை வீழ்ச்சியைடந்தன. மேலும், மாருதி சுஸுகி , ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், கோட்டக் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 732 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 956 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 166.55 புள்ளிகள் (1.29 சதவீதம்) குறைந்து 12,771.70-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி 12,963.00 வரை உயா்ந்து புதிய வரலாற்றுச் சாதனை அளவைப் பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயமும் 36 பங்குகள் வீழ்ச்சியையும் சந்தித்தன. நிஃப்டி எஃப்எம்சிஜி, மீடியா குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பேங்க் (2.85 சதவீதம்), ஃபைனான்சியல் சா்வீஸஸ் (2.29 சதவீதம்) ஆகிய குறியீடுகள் அதிகம் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com