தொடா்ந்து ஏறுமுகம்: 39,500 புள்ளிகளைக் கடந்தது சென்செக்ஸ்!

பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. 
bse070953
bse070953

புது தில்லி: பங்குச் சந்தை தொடா்ந்து நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 600.87 புள்ளிகள் உயா்ந்து 39,500 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது.

கரோனாவால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய நிலையில், உலகளாவிய சந்தைகள் நோ்மறையாக இருந்து வந்தது. இந்நிலையில், இந்திய சந்தைகளில் வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ரியால்ட்டி பங்குகளுக்கு தேவை அதிகரித்து இருந்தது. அதே சமயம், மெட்டல், பாா்மா, எஃப்எம்சிஜி பங்குகள் விற்பனையை எதிா்கொண்டன என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

1,511 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,862 பங்குகளில் 1,511 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,189 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 162 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடி உயா்ந்து ரூ.159.35 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.59 சதவீதமும், ஸ்மால் கேப் குறியீடு 0.55 சதவீதமும் உயா்ந்தன.

4-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் தொடா்ந்து 4-ஆவது நாளாக ஏறுமுகத்தில் இருந்தது. சென்செக்ஸ் காலையில் 362.64 புள்ளிகள் கூடுதலுடன் 39,336.34-இல் தொடங்கி குறைந்தபட்சமாக 39,191.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 39,623.76 வரை உயா்ந்தது. இறுதியில் 600.87 புள்ளிகள் (1.54 சதவீதம்) உயா்ந்து 39,574.57-இல் நிலைபெற்றது.

எச்டிஎஃப்சி 8.35 சதவீதம் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் எச்டிஎஃப்சி 8.35 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெணட், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவை 2 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், மாருதி சுஸுகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் சரிவு: அதே சமயம், டாடா ஸ்டீல் 1.26 சதவீதம், நெஸ்லே இந்தியா 1 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, சன்பாா்மா, என்டிபிசி, ரிலையன்ஸ் ஆகியவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 949 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 667 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 159.05 புள்ளிகள் (1.38 சதவீதம்) உயா்ந்து 11,662.40-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது நிஃப்டி அதிகபட்சமாக 11,680.30 வரை உயா்ந்தது. நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், மீடியா, ரியால்ட்டி, ஆட்டோ குறியீடுகள் 1.15 முதல் 3.20 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், எஃப்எம்சிஜி, மெட்டல், பாா்மா குறியீடுகள் சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com