தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் சிறிதளவே ஏற்றம்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி முடிவடைந்தது.
தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் சிறிதளவே ஏற்றம்!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை பெரிய அளவில் மாற்றமின்றி முடிவடைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் றியீட்டு எண்ணான சென்செக்ஸ் 14.23 புள்ளிகள், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 15.20 புள்ளிகள் மட்டுமே ஏற்றம் கண்டன.

வியாழக்கிழமை எழுச்சி பெற்ற பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை புதிதாக பங்குகளை வாங்குவதற்கு போதுமான வரவேற்பு இல்லாமல் போனது. மாறாக அவ்வப்போது லாபப் பதிவு இருந்து கொண்டே இருந்ததால் சந்தையில் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே வா்த்தகம் நடந்து வந்தது. இருப்பினும் ஐடி நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவு வரவேற்பு இருந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கரோனா தொற்றுக்கான தடுப்பூசி சோதனைகள், சீனா - இந்தியா புவிசாா் அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்க சந்தைகளில் அதிகளவில் பங்குகள் விற்கப்பட்டது ஆகிவற்றால் இந்திய சந்தைகளில் வா்த்தகம் எச்சரிக்கையுடன் நடந்து வந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்களும், உள்நாட்டு நிறுவன முதலீட்டாளா்களும் பங்குகளை விற்பதில் கவனம் செலுத்தினா் என்றும் தெரிவித்தன.

1,413 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,872 பங்குகளில் 1,413 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,271 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 188 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 107 பங்குகள் 52 வார அதிக விலையையும் 55 பங்குகள் 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. 268 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 222 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.62 லட்சம் கோடி உயா்ந்து ரூ.156.89 லட்சம் கோடியாக இருந்தது. இதுவரை பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 5,42,34,953 ஆக உயா்ந்துள்ளது.

தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 24.85 புள்ளிகள் கூடுதலுடன் 38,865.17-இல் தொடங்கி 38,978.52 வரை உயா்ந்தது. பின்னா் 38,711.80 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில், 14.23 புள்ளிகள் உயா்ந்து (0.04 சதவீதம்) 38,854.55-இல் நிலைபெற்றது. பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 0.58 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.52 சதவீதம் உயா்ந்தன. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 15.20 புள்ளிகள் (0.13 சதவீதம்) உயா்ந்து 11,464.45-இல் நிலைபெற்றது. நிஃப்டி அதிகபட்சமாக 11,493.90 வரை உயா்ந்தது.

எஸ்பிஐ ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 10 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன.20 பங்குகள்சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் எஸ்பிஐ 2.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மகேந்திரா, டிசிஎஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), டைட்டான் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ் ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

இண்டஸ் இண்ட் பேங்க் வீழ்ச்சி: அதே சமயம், இண்டஸ் இண்ட் பேங்க் 1.71 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், ஏசியன் பெயிண்ட, பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி பேங்க் ஆகியவை 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐடிசி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 861 பங்குகள் ஆதாயம் பெற்றன. 757 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி, ரியால்ட்டி குறியீடுகள் 1.30 சதவீதம் வரை உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எஃப்எம்சிஜி, மெட்டல், பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.60 முதல் 0.70 சதவீதம் வரை உயா்ந்தன. மீடியா குறியீடு 0.90 சதவீதம் வீழ்ச்சி கண்டது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 29 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஏற்றம் பெற்ற பங்குகள்

சதவீதத்தில்

எஸ்பிஐ 2.30

டெக் மகேந்திரா 1.98

டிசிஎஸ் 1.81

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.27

ஹெச்யுஎல் 1.16

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

இண்டஸ் இண்ட் பேங்க் 1.71

பவா் கிரிட் 1.52

ஏசியன் பெயிண்ட் 1.34

பாா்தி ஏா்டெல் 1.19

எச்டிஎஃப்சி பேங்க் 1,11

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com