உலகச் சந்தைகளில் மீட்சி: சென்செக்ஸ் 887 புள்ளிகள் உயர்வு

இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது.
உலகச் சந்தைகளில் மீட்சி: சென்செக்ஸ் 887 புள்ளிகள் உயர்வு

இரண்டு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை உற்சாகம் பெற்றது. அனைத்துத் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு இருந்ததால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 887 புள்ளிகள் உயர்ந்து 57,633-இல் நிலைபெற்றது.
"ஒமைக்ரான்' வைரஸ் தாக்கத்தால் கடந்த இரண்டு நாள்களாக உலகளாவிய அளவில் சந்தைகள் அதிகம் விற்பனையை எதிர்கொண்டன. இந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் விரைவாகப் பரவினாலும், டெல்டாவை விட இதன் வீரியம் மிக குறைவு என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அடுத்து, உலகளாவிய சந்தைகள் நிம்மதியடைந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது.
மேலும், புதன்கிழமை அன்று வங்கி வட்டி விகித அறிவிப்பு வெளியாக உள்ளது. பெரும்பாலும் வட்டி விகிதங்களை ஆர்பிஐ சீராக வைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, நிதித் துறை பங்குகளை வாங்குவதற்கு அதிகப் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில், நிஃப்டி பேங்க் குறியீடு 1,000 புள்ளிகள் வரை உயர்ந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்தது சந்தை வலுப்பெற உதவியாக இருந்தது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
2,331 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,394 நிறுவனப் பங்குகளில் 946 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 2,331 பங்குகள் ஆதாயம் பெற்றன. 117 பங்குகளின் விலை மாற்றமின்றி நிலைபெற்றன. 211 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 31 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 457 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 172 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக இறுதியில் ரூ.260.18 லட்சம் கோடியாக இருந்தது.
"காளை' ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் 378.84 புள்ளிகள் கூடுதலுடன் 57,125.98-இல் தொடங்கி 56,992.27 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 57,905.63 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 886.51 புள்ளிகள் (1.56 சதவீதம்) கூடுதலுடன் 57,633.65-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் "காளை'யின் ஆதிக்கம் வலுவாக இருந்தது.
சென்செக்ஸில் 29 நிறுவனப் பங்குகள் ஆதாயம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தர நிறுவனப் பங்குகளில், ஏஷியன் பெயிண்ட்ஸ் மட்டுமே 0.22 சதவீதம் குறைந்திருந்தது. மற்ற 29 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில், டாடா ஸ்டீல் 3.63 சதவீதம், ஆக்ஸிஸ் பேங்க் 3.60 சதவீம், ஐசிஐசிஐ பேங்க் 3.46 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், கோட்டக் பேங்க், எஸ்பிஐ, டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸýகி, பவர் கிரிட், எச்டிஎஃப்சி, சன்பார்மா, டெக் மஹிந்திரா உள்ளிட்டவை 1.50 முதல் 2.75 சதவீதம் வரை உயர்ந்தன. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயம் பெற்றன.
நிஃப்டி 264 புள்ளிகள் முன்னேற்றம்: தேசியப் பங்குச் சந்தையில் 1,405 பங்குகள் ஆதாயம் பெற்றன. 420 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17,044.10-இல் தொடங்கி 16,987.75 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 17,251.65 வரை உயர்ந்த நிஃப்டி, இறுதியில் 264.45 புள்ளிகள் (1.56 சதவீதம்) அதிகரித்து 17,176.70-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 45 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே வீழ்ச்சியை சந்தித்தன.
அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துக் குறியீடுகளும் ஏற்றம் பெற்றன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.13 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க் உள்ளிட்டவை 2 முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன.

ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.3.45 லட்சம் கோடி ஆதாயம்
ஆதாய நோக்கிலான பங்கு விற்பனை அதிகரித்ததால் முந்தைய இரு நாள்களாக மந்த நிலையில் இருந்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை கடும் சரிவிலிருந்து மீண்டது. அதன் காரணமாக, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மூலதனம் மதிப்பு ரூ.3,45,719.55 கோடி ஏற்றம் கண்டு ரூ.2,60,18,494.21 கோடியை எட்டியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com