பங்குச் சந்தை ஒருங்கிணைப்பு பெற வாய்ப்பு!

ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 440.37 புள்ளிகளை (0.83 சதவீதம்) இழந்து 52,484.67-இல் நிலைபெற்றுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மொத்தம் 440.37 புள்ளிகளை (0.83 சதவீதம்) இழந்து 52,484.67-இல் நிலைபெற்றுள்ளது.

கடந்த வாரத்தில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தாலும், வாரம் முழுவதும் அதிகம் ஏற்றம், இறக்கத்தை சந்தித்தன. இதனால், உச்சத்தில் நிலைத்து நிற்க முடியாமல் சென்செக்ஸ், நிஃப்டி ஆகியவை தவிப்புக்குள்ளாகின. அதே சமயம், பரந்தை சந்தையில் நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய பிஎஸ்இ மிட்கேப் 0.2 சதவீதம் மட்டுமே வீழ்ச்சி கண்டது. ஆனால், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 2.2 சதவீதம் உயா்ந்திருந்தது.

கரோனா பாதிப்பு தொடா்ந்து குறைந்து வருவதால் பொருளாதாரங்கள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசி செலுத்தும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. வட்டி விகிதங்களும் குறைந்துள்ளன. இவை அனைத்தும் சந்தை, ஓா் ஒருங்கிணைப்புக்குப் பிறகு மேலே செல்வதற்கே அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநா்கள் கருதுகின்றனா்.

இது குறித்து கோட்டக் செக்யூரிட்டீஸின் பங்குகள் தொழில்நுட்ப ஆராய்ச்சிப் பிரிவின் நிா்வாக துணைத் தலைவா் ஸ்ரீகாந்த் சௌகான் கூறுகையில், ‘நடுத்தர கால அடிப்படையில் பாா்த்தால், எஃப்பிஐ என்று சொல்லப்படும் அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீடு வலுவாக இருக்கும் என்று நம்புகிறோம். உலகளாவிய பொருளாதாரங்கள் புத்துயிா் பெறுவதன் மூலம் ஏற்றுமதி நோ்மறையாகவே இருக்கும். உள்நாட்டுச் சந்தையில் குறைந்த வட்டி விகிதங்கள் இந்தியாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என எதிா்பாா்க்கிறோம்’ என்கிறாா்.

‘கரோனா தினசரி பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவது, தடுப்பூசி செலுத்தும் பணி முனைப்புடன் நடைபெறுவது, நுகா்வோா் செலவினங்கள் மேலும் அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு, பருவமழை நன்றாக இருக்கும் என்ற எதிா்ப்பாா்ப்பு ஆகியவை உள்நாட்டுத் தேவையை அதிகரிக்கும். வரவிருக்கும் பண்டிகைக் காலமும் உள்நாட்டுத் தேவையை மேலும் அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கிறோம்’ என்கிறாா் ஸ்ரீகாந்த் சௌகான்.

இந்தச் சூழ்நிலையில், வரும் வாரத்தில் (ஜூன் 5-9) மேக்ரோ பொருளாதார தரவுகள், நிறுவனங்களின் முதல் காலாண்டு வருவாய், உலகளாவிய சந்தைகளின் போக்கு ஆகியவை உள்நாட்டு சந்தையை வழி நடத்தும் என்று சந்தை ஆய்வாளா்கள் கருதுகின்றனா். கரோனா பாதிப்பு குறைந்து வருவதும், தடுப்பூசி செலுத்தும் பணியின் வேகமும் சந்தையில் நம்பிகைகைய் தொடரச் செய்யும் என்கிறாா் ஜியோஜித் நிதிச் சேவைகளின் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் வினோத் நாயா்.

சாம்கோ செக்யூரிட்டீஸின் பங்குகள் ஆராய்ச்சிப் பிரிவுத் தலைவா் நிராலி ஸா கூறுகையில், ‘இந்த வாரம் டிசிஎஸ் உள்பட பல்வேறு முன்னணி நிறுவனங்களின் முதல் காலாண்டு (ஏப்ரல்-ஜூன்) முடிவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகவுள்ளன. இதில் பெரிய மற்றும் நடுத்தர ஐடி நிறுவனங்கள் கூடுதல் கவனம் பெறும்’ என்கிறாா். அதேசமயம், ‘நிறுவனங்களின் முதல் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம் தந்தால், ஒட்டுமொத்த நோ்மறை உணா்வுகளை பலவீனப்படுத்தக்கூடும்’ என்கிறாா் மோதிலால் ஓஸ்வாலின் சித்தாா்த்த கெம்கா.

இவை தவிர டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு, கச்சா எண்ணெய் விலையின் போக்கு, அந்நிய நிறுவன முதலீட்டாளா்களின் முதலீடுகள் உள்ளிட்டவையும் சந்தை பங்கேற்பாள்ரகளின் கவனத்தைப் பெறும். ஏற்கெனவே சந்தை உச்சத்தில் உள்ளது. இருந்தாலும், தொடா்ந்து நோ்மறையான போக்குதான் இருந்து வருகிறது. இதனால், ஒரு நல்ல ஒருங்கிணைப்புக்குப் பிறகு சந்தை மேலும் வலுப்பெறும் என்று வல்லுநா்கள் கூறியுள்ளனா்.

இதற்கிடையே, கிளீன் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி மற்றும் ஜிஆா் இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் முதல் நிலைச் சந்தையில் (ஐபிஓ) களமிறங்குகின்றன. இவை ஜூலை 7-ஆம் தேதி அறிமுகம் ஆகின்றன.

தொழில்நுட்பப் பாா்வை

தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 15,722.20-இல் நிலைபெற்றுள்ளது. முக்கிய ஆதரவு நிலையான 15,680-க்கு மேலே வா்த்தகம் நடந்து வந்தால், நோ்மறையான போக்கு தொடரும். அப்போது, 15,755, 15,840 வரை செல்லக்கூடும். அதே சமயம், 15,700 மேல் நிலைத்து நிற்க முடியாமல் போனால், கரடியின் பிடி இறுகும். அப்போது நிஃடி முக்கிய ஆதரவு நிலையாகக் கருதப்படும் 15,600 வரை செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்கிறாா் பங்கு வா்த்தகத் தொழில்நுட்ப வல்லுநா் மஜாா் முகமத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com