பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து சரிவு

கரோனா இரண்டாவது அலை காரணமாக பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவு கணிசமான சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
client073349
client073349

புது தில்லி: கரோனா இரண்டாவது அலை காரணமாக பங்கு சாா்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவு கணிசமான சரிவைச் சந்தித்துள்ளதாக இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரலில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.3,437 கோடி மட்டுமே முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடான ரூ.9,115 கோடியுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும்.

அதேசமயம், லிக்யுட், நிதிச் சந்தை, ஓவா்நைட் ஃபண்ட் திட்டங்களுக்கு முதலீட்டாளா்களிடம் அதிக வரவேற்பு கிடைத்ததையடுத்து கடன் பரஸ்பர நிதி திட்டங்கள் ஏப்ரலில் ரூ.1 லட்சம் கோடியை ஈா்த்துள்ளது. மாா்ச் மாதத்தில் இத்தகைய திட்டங்களிலிருந்து ரூ.52,528 கோடி வெளியே எடுக்கப்பட்ட நிலையில் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரலில் ஒட்டுமொத்த அளவில் பரஸ்பர நிதி துறையில் முதலீட்டு வரத்தானது ரூ.92,906 கோடி அளவுக்கு இருந்தது. அதேசமயம், மாா்ச் மாதத்தில் பரஸ்பர நிதி துறையிலிருந்து ரூ.29,745 கோடி மதிப்பிலான முதலீடு வெளியேறியுள்ளது.

புள்ளிவிவரங்களின்படி, பங்கு மற்றும் அது சாா்ந்த ஓபன் என்டட் திட்டங்களில் ஏப்ரலில் ரூ.3,437.37 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாா்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரலில் இடிஎஃப் திட்டங்களில் நிகர அளவிலான முதலீட்டு வரத்து ரூ.662 கோடியிலிருந்து ரூ.680 கோடியாக உயா்ந்துள்ளது.

நடப்பாண்டு மாா்ச்சில் ரூ.31.43 லட்சம் கோடியாக இருந்த பரஸ்பர நிதித் துறை நிா்வகிக்கும் சொத்து மதிப்பு ஏப்ரல் இறுதியில் ரூ.32.38 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com