"கரடி' திடீர் தாக்குதல்:  323  புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான புதன்கிழமை பிற்பகலில் "கரடி'யின் திடீர் தாக்குதலால் பங்குச் சந்தையில் திடீர் சரிவு ஏற்பட்டது.
"கரடி' திடீர் தாக்குதல்:  323  புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்


புது தில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான புதன்கிழமை பிற்பகலில் "கரடி'யின் திடீர் தாக்குதலால் பங்குச் சந்தையில் திடீர் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 323 புள்ளிகளை இழந்து 58,340.99-இல் நிலைபெற்றது.

நான்கு நாள் தொடர் சரிவுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை ஏற்றம் பெற்ற பங்குச் சந்தை, புதன்கிழமை காலையிலும் உற்சாகத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மேலே சென்ற சந்தையில் பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, சந்தை சரிவைச் சந்தித்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் அதிக திறன் கொண்ட மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான இன்போஸிஸ் மற்றும் மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததால் சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது. சந்தையில் பெரும்பாலான நேரம் வர்த்தகம் நேர்மறையாக இருந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், முன்பேர வர்த்தகத்தில் நவம்பர் கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை (நவம்பர் 25) கடைசி நாளாக உள்ளது. இதுவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

1,334 பங்குகள் சரிவு: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,430 பங்குகளில் 1,334 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,956 பங்குகள் ஆதாயம் பெற்றன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 209 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 25 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 496 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 151 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி குறைந்து வர்த்தக இறுதியில் 263.62 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,75,89,496-ஆக உயர்ந்தது. 

"கரடி' திடீர் தாக்குதல்: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 174.99 புள்ளிகள் கூடுதலுடன் 58,839.32-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,968.12 வரை உயர்ந்தது. பின்னர், பிற்பகலில் 58,143.44 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 323.34 புள்ளிகள் (0.55 சதவீதம்) குறைந்து 58,340.99-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது கரடி திடீரென தாக்கியதில் ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 824.68 புள்ளிகளை இழந்திருந்தது. 

சென்செக்ஸில் 22 பங்குகள்வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. இதில் கோட்டக் பேங்க் 1.41 சதவீதம், என்டிபிசி 1.42 சதவீதம், ஐசிஐசிஐ பேங்க் 1.11 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பவர் கிரிட், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

மாருதி, இன்ஃபோஸிஸ் கடும் சரிவு: அதே சமயம், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸூகி 2.62 சதவீதம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.01 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஐடிசி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி, டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல், நெஸ்லே இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 1 முதல் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. 

நிஃப்டி 88 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,020 பங்குகள் ஆதாயம் பெற்றன. 758 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,550.05-இல் தொடங்கி 17,600.60 வரை உயர்ந்தது. பின்னர், அதிகபட்சமாக 17,354.00 வரை கீழே சென்ற நிஃப்டி இறுதியில் 88.30 புள்ளிகளை (0.50 சதவீதம்) இழந்து 17,415.05-இல் நிலைபெற்றது. 

ஐடி, ஆட்டோ குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் துறை வாரியாகைப் பார்த்தால், நிஃப்டி ஐடி குறியீடு 1.52 சதவீதம், ஆட்டோ குறியீடு 1.28 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எஃப்எம்சிஜி, பார்மா, ஹெல்த்கேர், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகளும் கணிசமான அளவு வீழ்ச்சி அடைந்தன. அதே சமயம், நிஃப்டி மீடியா குறியீடு 2 சதவீதம் உயர்ந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 0.30 முதல் 0.50 சதவீதம்ம் வரை ஏற்றம் பெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com