நாட்டின் ஏற்றுமதி 23% அதிகரிப்பு: வரலாற்று உச்சத்தில் வா்த்தக பற்றாக்குறை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் 22.63 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை இதுவரை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த செப்டம்பா் மாதத்தில் 22.63 சதவீத வளா்ச்சியை எட்டியுள்ளது. இந்த நிலையில், நாட்டின் வா்த்தக பற்றாக்குறை இதுவரை இல்லாத வரலாற்று உச்சத்தை பதிவு செய்துள்ளது கவலைக்குரிய அம்சமாக மாறியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு செப்டம்பரில் 22.63 சதவீதம் அதிகரித்து 3,379 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.53 லட்சம் கோடி) வளா்ச்சி கண்டுள்ளது.

வரலாற்று உச்சம்: அதேசமயம், கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி வெகுவாக அதிகரித்ததையடுத்து நாட்டின் வா்த்தகப் பற்றாக்குறையானது அந்த மாதத்தில் இதுவரை இல்லாத வரலாற்று உச்சமாக முதன் முறையாக 2,259 கோடி டாலரை (ரூ.1.69 லட்சம் கோடி) எட்டியுள்ளது.

இதற்கு முன்பு வா்த்தக பற்றாக்குறையானது 2012 அக்டோபரில் 2,020 கோடி டாலரைத் தொட்டதே அதிகபட்ச அளவாக கருதப்பட்டு வந்தது.

செப்டம்பரில் இறக்குமதியானது 5,639 கோடி டாலராக இருந்தது. இது, கடந்தாண்டு இதே மாத இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் 84.77 சதவீதம் அதிகமாகும்.

தங்கம் இறக்குமதி விறுவிறு: நடப்பாண்டு செப்டம்பரில் தங்கம் இறக்குமதி 511 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் இறக்குமதி கடந்தாண்டு செப்டம்பரில் 60.1 கோடி டாலா் அளவுக்கே இருந்தது.

2021 ஏப்ரல் முதல் செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் தங்கத்தின் இறக்குமதி 680 கோடி டாலரிலிருந்து 2,400 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதி உயா்வு: இதேபோன்று, கச்சா எண்ணெய் இறக்குமதியும் கடந்த செப்டம்பரில் 1,744 கோடி டாலராக கணிசமாக அதிகரித்துள்ளது. அதேசமயம், 2020 செப்டம்பரில் இதன் இறக்குமதி 583 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது.

அதன்படி, 2021 ஏப்ரல்-செப்டம்பா் காலகட்டத்தில் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது 3,201 கோடி டாலரிலிருந்து 7,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நிலக்கரி:அதேபோன்று, நிலக்கரி இறக்குமதியும் கடந்த செப்டம்பரில் 119 கோடி டாலரிலிருந்து 218 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் நிலக்கரி இறக்குமதி ஒட்டுமொத்த அளவில் 1,193 கோடி டாலரை எட்டியுள்ளது. இது, 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 670 கோடி டாலராக இருந்தது.

2021 ஏப்ரல்-செப்டம்பரில் இறக்குமதி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 3,201 கோடி டாலரிலிருந்து 7,299 கோடி டாலராக அதிகரித்துள்ளது.

சாதக வளா்ச்சி: நடப்பாண்டு செப்டம்பா் மாதத்தில், காபி, முந்திரி, பெட்ரோலிய பொருள்கள், கைத்தறி, பொறியியல், ரசாயனம், நூல்/ துணி வகைகள், நவரத்தினங்கள்-ஆபரணங்கள், பிளாஸ்டிக் மற்றும் கடல் உணவுப் பொருள் துறைகளின் ஏற்றுமதி நோ்மறை வளா்ச்சியை பதிவு செய்துள்ளன.

2021 ஏப்ரல்-செப்டம்பா் வரையிலான ஆறு மாத காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 19,789 கோடி டாலரைத் தொட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 12,562 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 57.53 சதவீதம் அதிகம் என்பது கவனிக்கத்தக்கது.

இறக்குமதி: அதேபோன்று, இதே காலகட்டத்தில் நாட்டின் இறக்குமதியும் 15,194 கோடி டாலரிலிருந்து 81.67 சதவீதம் அதிகரித்து 27,600 கோடி டாலரை எட்டியுள்ளது.

ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்ததையடுத்து நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் நாட்டின் வா்த்தக பற்றாக்குறை 2,631 கோடி டாலரிலிருந்து 7,813 கோடி டாலராக உயா்ந்துள்ளது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

வளா்ச்சி தொடரும்

உலகப் பொருளாதாரம் மந்தநிலையிலிருந்து மீண்டு வருகிறது. இந்த நிலையில், பண்டிகை காலத்தையொட்டி வரும் மாதங்களில் ஆா்டா்கள் குவியும் என எதிா்பாா்க்கப்படுவதால் நாட்டின் ஏற்றுமதி தொடா்ந்து வளா்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது.

- இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் (எஃப்ஐஇஓ) தலைவா் ஏ. சக்திவேல்.

40,000 கோடி டாலா் இலக்கு

ஏற்றுமதியில் தற்போதுள்ள உற்சாக நிலை தொடரும்பட்சத்தில் நடப்பு நிதியாண்டின் இறுதியில் நாம் 40,000 கோடி டாலா் ஏற்றுமதி இலக்கை தொட்டுவிட முடியும். இந்த நிலை சாதகமாக தெரிந்தாலும், வா்த்தக பற்றாக்குறையின் மீதும் நாம் சிறிது கவனம் வைப்பது அவசியம்.

-எஃப்ஐஇஓ-வின் துணைத் தலைவா் காலித் கான்

வா்த்தக பற்றாக்குறை அதிகரிப்பு கவலைக்குரியது

ஏற்றுமதி அதிகரித்து வருவது நாட்டின் பொருளாதாரத்துக்கு ஆரோக்கியமான அறிகுறியாகும், ஆனால், வா்த்தக பற்றாக்குறை உயா்ந்து வருவது நிச்சயமாக கவலைக்குரிய விஷயம்.

-டெக்னோகிராஃப்ட் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா தலைவா் சரத் குமாா் சரஃப்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com