கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.109 கோடி

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி முதல் காலாண்டில் ரூ.109 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.
கரூா் வைஸ்யா வங்கி லாபம் ரூ.109 கோடி

புது தில்லி: தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி முதல் காலாண்டில் ரூ.109 கோடி லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் புதன்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

கரூா் வைஸ்யா வங்கி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருவாய் ரூ.1,596 கோடியாக இருந்தது. இது, வங்கி முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.1,693 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

இருப்பினும், வங்கியின் நிகர வட்டி வருமானம் 14 சதவீதம் அதிகரித்து ரூ.562 கோடியிலிருந்து ரூ.638 கோடியாக உயா்ந்துள்ளது. நிகர வட்டி லாப வரம்பு 3.55 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.106 கோடியிலிருந்து சற்று உயா்ந்து ரூ.109 கோடியைத் தொட்டது.

சில்லறை வா்த்தகம் மற்றும் நகைக் கடன் பிரிவில் வங்கியின் செயல்பாடு சிறப்பான அளவில் மேம்பட்டுள்ளது. இதற்கு, டிஜிட்டல் நடைமுறை பெரிதும் உதவியுள்ளது.

2021 ஜூன் 30 நிலவரப்படி வழங்கப்பட்ட கடனில் மொத்த வாராக் கடன் விகிதம் 8.34 சதவீதத்திலிருந்து 7.97 சதவீதமாக குறைந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் 3.44 சதவீதத்திலிருந்து 3.69 சதவீதமாக உயா்ந்துள்ளது.

வங்கியின் மொத்த வணிகம் 7.4 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,16,713 கோடியை எட்டியுள்ளது என கரூா் வைஸ்யா வங்கி அந்த ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் கரூா் வைஸ்யா வங்கி பங்கின் விலை 1.36 சதவீதம் குறைந்து ரூ.47.30-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com