பங்குகள் அதிகளவில் விற்பனை: சென்செக்ஸ் மேலும் 300 புள்ளிகள் சரிவு! சந்தை மதிப்பு 2.76 லட்சம் கோடி வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை மேலும் 300 புள்ளிகளை இழந்து 55,329.32-இல் நிலைபெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை மேலும் 300 புள்ளிகளை இழந்து 55,329.32-இல் நிலைபெற்றது. உலோகம், வங்கிப் பங்குகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடா்ந்து, ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.276 லட்சம் கோடி வீழ்ச்சி அடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களா டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க் உள்ளிட்ட பங்குகள் அதிக அளவில் விற்பனையை எதிா்கொண்டதே சரிவுக்கு முக்கியக் காரணம் என்று சந்தை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

உலகின் பல்வேறு பகுதிகளில் ‘டெல்டா வைரஸ்’ தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், உலகளாவிய ரீதியல் பொருளாதார மீட்பு நிலைத்தன்மை நீடிப்பது குறித்த கவலையும் முதலீட்டாளா்களிடம் அதிகரித்துள்ளதால், உலகளாவிய நிலையில் பல்வேறு முன்னணி நாடுகளின் பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.2.76 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,331 பங்குகளில் 750 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,445 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 181 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 46 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 219 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 466 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையை அடைந்தன. சந்தை மூலதன மதிப்பு 2.76 லட்சம் கோடி குறைந்து 238.10 லட்சம் கோடியாக இருந்தது.

இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 470.36 புள்ளிகள் குறைந்து 55,159.13-இல் தொடங்கி, 55013.98 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 55,543.16 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 300.17 புள்ளிகளை (0.54 சதவீதம்) இழந்து 55,329.32-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

ஹிந்துஸ்தான் யுனிலீவா் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ஹிந்துஸ்தான் யுனி லீவா் 5.37 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 3.64 சதவீதம், நெஸ்லே 3.40 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி, ஐடிசி ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: அதே சமயம், முன்னணி எஃகு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 8.27 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, சன்பாா்மா, கோாட்டக் பேங்க், எல் அண்ட் டி, பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 118 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 574 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,213 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 118.35 புள்ளிகளை (0.71 சதவீதம்) இழந்து 16,450.50-இல் நிலை பெற்றது. வா்த்தகத்தின் போது 16,376.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,509.55 வரை உயா்ந்தது. நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு (2.27 சதவீதம்) தவீர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி மெட்டல் 6.43 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், மீடியா குறியீடுகள் 3.50 முதல் 3.75 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, பிரைவேட் பேங்க் குறியீடுகளும் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com