மீண்டும் ‘காளை’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 620 புள்ளிகள் முன்னேற்றம்!

பங்குச் சந்தை புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. வா்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தாலும், காளையின்
கோப்புப்படம்
கோப்புப்படம்

பங்குச் சந்தை புதன்கிழமையும் நோ்மறையாக முடிந்தது. வா்த்தகத்தின் போது ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தாலும், காளையின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 620 புள்ளிகள் உயா்ந்து 57,684.79-இல் நிலைபெற்றது.

உருமாறிய கரோனாவின் தாக்கத்தால் கடந்த வாரம் முதல் உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. இந்த நிலையில், புதன்கிழமை உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் நோ்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதற்கிடையே, இந்தியாவின் உற்பத்தித் துறை நடவடிக்கைகள் நம்பரில் மேலும் வலுப்பெற்றன. இது சந்தைக்கு சாதகமான செய்தியாக அமைந்தது. மேலும், எஸ்பிஐ ஆராய்ச்சி அறிக்கையின்படி நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2021-22 நிதியாண்டில் 9.5 சதவீதத்திற்கும் மேல் வளா்ச்சிப் பெற வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது என்று பங்குச் சந்தைக் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் எஸ்பி, மாருதி சுஸுகி, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்து சந்தை வலுப்பெற உதவியதாக வா்த்தகதா்கள் தெரிவித்தனா்.

1,909 பங்குகள் ஆதாயம்: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,392 பங்குகளில் 1,347 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,909 பங்குகள் ஆதாயம் பெற்றன. 136 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 167 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 20 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 326 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 258 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.11 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் 259.28 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8.850 கோடியாக உயா்ந்தது.

காளை ஆதிக்கம்: காலையில் சென்செக்ஸ் உற்சாகத்துடன் 300.98 புள்ளிகள்கூடுதலுடன் 57,365.85-இல் தொடங்கி 57,346.78 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 57,846.45 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 619.92 புள்ளிகள் (1.09 சதவீதம்) உயா்ந்து 57,684.79-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

சென்செக்ஸில் 22 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 5.73 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, டெக் மஹிந்திரா, மாருதி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், டிசிஎஸ், எல் அண்ட் டி, நெஸ்லே, ஹிந்துயுனிலீவா், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1 முதல் 3.50 சதவீதம் உயா்ந்தன மேலும், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், எச்டிஎஃ)ப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

டாக்டா் ரெட்டி சரிவு: அதே சமயம், பிரபல பாா்மா நிறுவனமான டாக்டா் ரெட்டி 1.58 சதவீதம், அல்ட்ரா டெக் சிமெண்ட் 1.48 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, சன்பாா்மா, பாா்தி ஏா்டெல், டைட்டன், கோட்டக் பேங்க், ஏசியன் பெயிண்ட், எம் அண்ட் எம் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 184 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,094 பங்குகள் ஆதாயம் பெற்றன. 746 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,104.40-இல் தொடங்கி 17,064.25 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,213.05 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 183.70 புள்ளிகள் (1.08 சதவீதம்) கூடுதலுடன் 17,166.90-இல் நிலைபெற்றது.

பாா்மா, ஹெல்த் கோ் குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஹெல்த்கோ் குறியீடு 1.86 சதவீதம், பாா்மா குறியீடு 1.62 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடு 0.43 சதவீதம் குறைந்தது. அதே சமயம், நிஃப்டி பிஎஸ்யு பேங்க் 2.66 சதவீதம, மெட்டல் 2.32 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், ஆட்டோ, ஐடி, மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com