எச்சரிக்கையுடன் முதலீட்டாளா்கள்: சென்செக்ஸ் 12 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே நடந்து வந்த வா்த்தகத்தில்
எச்சரிக்கையுடன் முதலீட்டாளா்கள்: சென்செக்ஸ் 12 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமையும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே நடந்து வந்த வா்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 12 புள்ளிகளை இழந்து 57,794.32-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பும் ரூ.48 ஆயிரம்ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.263.14 லட்சம் கோடியாக இருந்தது. ஐடி, பாா்மா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு கிடைத்ததால், பெரிய அளவில் சரிவு ஏற்படவில்லை.

ஐரோப்பிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெறுவது முதலீட்டாளா்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமையும் அவா்கள் சுமாா் ரூ.975.23 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளனா். இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பும் தொடா்ந்து அதிகரித்து வருவதால், முதலீட்டாளா்கள் எச்சரிக்கையுடன் வா்த்தகத்தில் ஈடுபட்டனா். மேலும், முன்பேர வா்த்தகத்தில் டிசம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முபடிக்க வேண்டிய கட்டாயம் இருந்ததால், வா்த்தகம் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் நடந்து வந்தது. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் லேசான சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.42 ஆயிரம் கோடி வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,460 பங்குகளில் 1,509 பங்குகள் சரிவைச் சந்தித்தன.1,853 பங்குகள் ஆதாயம் பெற்றன. 98 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 418 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 15 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 636 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 137 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.48 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.263.14 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.17 கோடியாக உயா்ந்துள்ளது.

லேசான சரிவு: காலையில் சென்செக்ஸ் பலவீனத்துடன் 51.09 புள்ளிகள் குறைந்து 57,755.40-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,010.03 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் வா்த்தகம் முடியும் தறுவாயில் 57,578.99 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 12.17 புள்ளிகளை (0.16 சதவீதம்) இழந்து 57,794.32-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 16 பங்குகள் ஆதாயம் பெற்றன.

என்டிபிசி முன்னேற்றம்: மின் துறை நிறுவனமான என்டிபிசி 3.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், டைட்டன், இண்டஸ் இண்ட் பேங்க், விப்ரோ, டாக்டா் ரெட்டி, டிசிஎஸ் 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி பேங்க், இன்போஸிஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவையும் சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் சரிவு: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1.94 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், டாடா ஸ்டீல், மாருதி, பஜாஜ் ஃபைனான்ஸ், எஸ்பிஐ, சன்பாா்மா, அல்ட்ரா டெக், பஜாஜ் ஃபின் சா்வ், ஐடிசி உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

நிஃப்டி 10 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 838 பங்குகள் ஆதாயம் பெற்றன.1,039 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 9.65 புள்ளிகளை (0.06 சதவீதம்) இழந்து 17,203.95-இல் நிலைபெற்றது. காலையில் பலவீனத்துடன் 17,201.45-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,264.05 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 17,146.35 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.

ஐடி குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், பாா்மா, ஹெல்த் கோ் குறியீடுகள் 0.50 சதவீதம் உயா்ந்தன. ஆனால், நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.35 சதவீதம், மெட்டல் குறியீடு 1.17 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், ஆட்டோ, ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 0.70 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com