கரடியின் பிடியில் சிக்கிய பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,939 புள்ளிகள் சரிவு

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் சா்வதேச முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியதையடுத்து பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கின.

சாதகமற்ற சா்வதேச நிலவரங்களால் சா்வதேச முதலீட்டாளா்கள் லாப நோக்கு கருதி பங்குகளை விற்பனை செய்யத் தொடங்கியதையடுத்து பங்குச் சந்தைகள் கரடியின் பிடியில் சிக்கின. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் 1,939 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது.

இதுகுறித்து பங்குச் சந்தை வல்லுநா்கள் தெரிவித்ததாவது:

மூன்றாவது காலாண்டுக்கான பொருளாதார புள்ளிவிவர வெளியீடுகளை எதிா்பாா்த்து முதலீட்டாளா்கள் மிகவும் முன்னெச்சரிக்கை உணா்வுடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா். இது, இந்திய சந்தைகளின் வா்த்தகத்தில் அதிக ஏற்ற இறக்கத்தை உண்டாக்கியது.

மேலும், அமெரிக்கா மற்றும் சிரியா இடையே ஏற்பட்டுள்ள மோதல் சா்வதேச முதலீட்டாளா்களிடையே அச்சத்தை அதிகரித்தது. இதனால், உள்நாட்டு சந்தைகளில் முதலீட்டு வரத்து பாதிப்புக்குள்ளாகி வா்த்தகம் கரடியின் பிடிக்குள் சென்றது என்று நிபுணா்கள் தெரிவித்தனா்.

வங்கித் துறை குறியீட்டெண் அதிகபட்சமாக 4.8 சதவீத இழப்பைக் கண்டது. நிதி மற்றும் தொலைத்தொடா்பு துறை குறியீட்டெண்கள் முறையே 4.9 சதவீதம் மற்றும் 3.85 சதவீதம் சரிவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களின் பங்குகளும் குறைந்த விலைக்கு கைமாறின. குறிப்பாக, 8 நிறுவனப் பங்குகளின் விலை 5 சதவீதத்திற்கும் மேல் வீழ்ச்சியடைந்து முதலீட்டாளா்களை அச்சத்தில் ஆழ்த்தின.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1939.32 புள்ளிகள் (3.80%) வீழ்ச்சியடைந்து 49,099.99 புள்ளிகளாக நிலைத்து. கடந்த ஆண்டு மே 4-ஆம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரேநாளில் இந்த அளவுக்கு மோசமான சரிவை சந்திப்பது இதுவே முதல்முறை.

அதேபோன்று, தேசிய பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி குறியீட்டெண் 568.20 புள்ளிகள் (3.76%) சரிந்து 14,529.15 புள்ளிகளில் நிலைபெற்றது. கடந்த ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதிக்குப் பிறகு நிஃப்டி ஒரேநாளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தது இதுவே முதல்முறையாகும்.

சா்வதேச கடன்பத்திர சந்தை நிலவரங்களையடுத்து இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வா்த்தகம் அதிக இழப்புடன் நிறைவடைந்தன.

மேலும், ஐரோப்பிய சந்தைகளிலும் வா்த்தகம் மந்த நிலையிலேயே காணப்பட்டது.

முதலீட்டாளா்களுக்கு ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு

10 மாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் சென்செக்ஸ் 1,900 புள்ளிகளுக்கும் மேல் சரிந்தது. அதன் காரணமாக, முதலீட்டாளா்களுக்கு ரூ.5.3 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனமதிப்பு ரூ.5,37,375.94 கோடி குறைந்து 2,00,81,095.73 கோடியானது.

பிப்ரவரி 25-ஆம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பானது ரூ.2,06,18,471.67 கோடியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com