10-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனை

தொடர்ந்து புதிய புதிய உச்சங்களைத் தொட்டு வரும் பங்குச் சந்தை 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நேர்மறையாக முடிந்தது.
10-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ், நிஃப்டி புதிய சாதனை

தொடர்ந்து புதிய புதிய உச்சங்களைத் தொட்டு வரும் பங்குச் சந்தை 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், மேலும் 260.98 புள்ளிகள் உயர்ந்து புதிய உச்சத்தில் நிலைபெற்றதது. இதேபோல நிஃப்டியும் 66.60 புள்ளிகள் உயர்ந்து 14,199.50 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.
 காலையில் பங்குச் சந்தை எதிர்மறையாகத் தொடங்கினாலும், அதன் பிறகு தகவல் தொழில்நுட்பம், வங்கி துறை பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, விரைவாக மீண்டு அனைத்து நஷ்டங்களையும் ஈடு செய்து புதிய உச்சத்தைத் தொட்டது. உலகளாவிய சந்தைகள் பலவீனமாக இருந்தாலும், நாட்டில் கரோனா மீட்பு விகிதம் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருவது, விரைவில் தடுப்பூசி இயக்கம் தொடங்குவது, பொருளாதாரத் தரவுகளின் தொடர்ச்சியான முன்னேற்றம் ஆகியவை சந்தை மேலும் வலுப்பெறக் காரணமாக அமைந்தன என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.192.87 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,233 பங்குகளில் 1,781 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,288 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 430 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 531 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.18 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.192.87 லட்சம் கோடியாக இருந்தது.
 10-ஆவது நாளாக ஏறுமுகம்: சென்செக்ஸ் காலையில் 139.17 புள்ளிகள் குறைவுடன் 48,037.63-இல் தொடங்கி 47,903.38 வரை கீழே சென்றது. அதன் பிறகு அதிகபட்சமாக 48,486.24 வரை உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. இறுதியில் 260.98 புள்ளிகள் கூடுதலுடன் 48,437.78-இல் நிலைபெற்றது. இதன் மூலம் சென்செக்ஸ் தொடர்ந்து 10-ஆவது நாளாக எழுச்சி பெற்றது.
 ஐடி, பேங்க் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல்தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஆக்ஸிஸ் பேங்க் 6.31 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எச்டிஎஃப்சி, இன்டஸ்இண்ட் பேங்க், டிசிஎஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்சிஎல் டெக், டைட்டன், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவர் ஆகியவை 1 முதல் 2.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.
 இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய முன்னணிப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 ஓஎன்ஜி வீழ்ச்சி: அதேசமயம், பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசி பங்குகள் 2.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, எம் அண்ட் எம், ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 957 பங்குகள் ஆதாயம் பெற்றன. 787 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. நிஃப்டி 66.60 புள்ளிகள் உயர்ந்து 14,199.50-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 14,215.60 வரை உயர்ந்து புதிய வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன.
 நிஃப்டி ஐடி குறியீடு 2.62 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1.25 முதல் 2 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. ஆட்டோ, மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com