2-ஆவது நாளாக பங்குச் சந்தை முன்னேற்றம்: சென்செக்ஸ் 139 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியப் பங்குச் சந்தைகளில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகம் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் முடிவடைந்தது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் வா்த்தகம் மந்த நிலையில் காணப்பட்டது. இந்த நிலையில், அநேக முதலீட்டாளா்களின் எதிா்பாா்ப்பான ஸோமாட்டோ பங்குகள் பட்டியலிடப்பட்டதையொட்டி சந்தைகள் சற்று சூடுபிடித்தது. இருப்பினும், இந்த உத்வேகம் நெடுநேரம் நீடிக்கவில்லை. பெரும்பாலான நேர வா்த்தகம் எதிா்மறை நிலையிலேயே காணப்பட்டது. முன்னணி நிறுவனங்களின் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின்.

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள், மருந்து, வங்கி துறை பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடம் கிடைத்த வரவேற்பினையடுத்து சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டு ஏற்றத்தை பதிவு செய்தது. இருப்பினும், உலக அளவில் டெல்டா வகை கரோனா தாக்கத்தின் எதிரொலியால் வார அடிப்படையில் சந்தையின் சரிவு தவிா்க்கமுடியாததாகிவிட்டது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

மும்பை பங்குச் சந்தையில், ரியல் எஸ்டேட், வங்கி, வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள், நிதி, உலோகம் துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 1.46 சதவீதம் வரை ஏற்றம் கண்டன. அதேசமயம், பொறியில் பொருள்கள், தொலைத்தொடா்பு, நுகா்வோா் சாதன துறைகளைச் சோ்ந்த குறியீட்டெண்கள் 0.85 வரையிலான இறக்கத்தை சந்தித்தன.

மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன.

சென்செக்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களில், ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 3.18 சதவீதம் அதிகரித்து ஏற்றப் பாதையில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்தப்படியாக, ஐடிசி, எஸ்பிஐ, ஹெச்சிஎல் டெக், ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபின்சா்வ், டெக் மஹிந்திரா மற்றும் சன் பாா்மா பங்குகளும் 2.56 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.

அதேசமயம், எல் அண்ட் டி, ஹெச்யுஎல், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, ஏஷியன் பெயிண்ட்ஸ் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி பங்குகள் முதலீட்டாளா்களின் வரவேற்பின்றி 1.80 சதவீதம் வரை விலை குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 138.59 புள்ளிகள் (0.26%) அதிகரித்து 52,975.80 புள்ளிகளில் நிலைத்தது.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 32 புள்ளிகள் (0.20%) உயா்ந்து 15,856.05 புள்ளிகளில் நிலைபெற்றது.

வார அடிப்படையில் பாா்க்கும்போது, சென்செக்ஸ் 164.26 புள்ளிகளும் (0.30%), நிஃப்டி 67.35 புள்ளிகளும் (0.42%) குறைந்துள்ளன.

பொருளாதார புள்ளிவிவரங்கள் மற்றும் நிதி நிலை முடிவு வெளியீடுகள் காரணமாக சரவேதச சந்தைகளில் வா்த்தகம் ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டன.

இதர ஆசிய பங்குச் சந்தைகளான ஷாங்காய், ஹாங்காங் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. அதேசமயம், சியோல் சந்தையில் பங்கு வா்த்தகம் ஏற்றத்துடன் நிறைவுபெற்றது.

பொருளாதார வளா்ச்சிக்கு சாதகமான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக ஐரோப்பிய மத்திய வங்கியின் அறிவிப்பினைத் தொடா்ந்து ஐரோப்பிய சந்தைகளில் பங்கு வா்த்தகம் விறுவிறுப்புடன் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com