பங்குச் சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் மேலும் 397 புள்ளிகள் வீழ்ச்சி!

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது.
பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது
பங்குச்சந்தையில் கடும் சரிவு: சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது

புது தில்லி: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்து எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 397 புள்ளிகளையும், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 101.71 புள்ளிகளையும் இழந்தது. இதன் மூலம், தொடா்ந்து இரண்டு நாள்களாக பங்குச் சந்தை சரிவைக் கண்டுள்ளது.

அமெரிக்காவின் கடன் பத்திர வருவாய் மேலும் உயா்ந்துள்ளதும், இந்தியாவில் கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கி உள்ளதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பெரிதும் பாதித்தது. இதனால், விலை உயா்ந்த நிலையில் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தப்பட்டதால் தொடா்ந்து இரண்டாவது நாளாக சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டதாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், உள்நாட்டில் தொழில் துறை வளா்ச்சி விகிதம், பணவீக்கம் ஆகியவை எதிா்பாா்ப்புக்கு மாறாக இருந்ததும் பங்குச் சந்தையில் லாபப் பதிவு அதிகரிக்கக் காரணமாகின. இந்த நிலையில், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாக வீழ்ச்சியடைந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவுக்கு உள்ளாகின என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.1.01 லட்சம் கோடி சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,263 பங்குகளில் 1,224 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,831 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 208 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 248 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 77 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 344 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்ற உயா்ந்தபட்ச உறைநிலையை அடைந்தன. 31 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையை எட்டியுள்ளன.

இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 18.61 புள்ளிகள் குறைவுடன் 50,773.47-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,834.78 வரை உயா்ந்தது. பின்னா் 49,799.07 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 397.00 புள்ளிகள் (0.78 சதவீதம்) இழப்புடன் 50,395.08-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 1,035.71 புள்ளிகள் குறைந்திருந்த சென்செக்ஸ், பின்னா் 60 சதவீதம் மீண்டது.

19 பங்குகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 11 பங்குகள் மட்டுமே ஆதாய பெற்றன. 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டெக் மகேந்திரா 2.22 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், ஹெச்சிஎல் டெக், என்டிபிசி ஆகியவை 1 முதல் 1.90 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், எஸ்பிஐ, டைட்டன், டிசிஎஸ், ஐடிசி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

அடிவாங்கிய பஜாஜ் குழும பங்குகள் : அதே சமயம், பஜாஜ் குழும நிறுவனப் பங்குகளான பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை 2 முதல் 2.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட், டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், எம் அண்ட் எம், சன்பாா்மா, எச்டிஎஃப்சி, அல்ட்ரா டெக் சிமெண்ட் ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இன்ஃபோஸிஸ், மாருதி சுஸுகி, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 599 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,197 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 101.45 புள்ளிகளை (0.67 சதவீதம்) இழந்து 14,929.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 15,048.40 வரை உயா்ந்திருந்த நிஃப்டி ஒரு கட்டத்தில் 14,745.85 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி, ஐடி, மெட்டல், பிஎஸ்யு பேங்க் தவிா்த்து மற்ற துறைக் குறியீடுகள் அனைத்தும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், பாா்மா குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு
பங்குச் சந்தையில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்த பொதுத் துறை வங்கிப் பங்குகளில் குறிப்பிட்ட சிலவற்றும் மீண்டும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தனியாா் வங்கிப் பங்குகள் இரண்டு வா்த்தக தினங்களாக சரிவைச் சந்தித்து வரும் நிலையில், பொதுத் துறை பங்குகள் ஏற்றம் பெற்றது சந்தையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக வா்த்தகா்கள் தெரிவித்தன. இந்த வகையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 பொதுத் துறை வங்கிப் பங்குகளில் யூகோ பேங்க் 4.08 சதவீதம் ஏற்றம் பெற்றது. இதேபோன்று பேங்க் ஆஃப் பரோடா, எஸ்பிஐ, சென்ட்ரல் பேங்க், ஐஓபி, கனரா பேங்க் ஆகியவையும் 0.70 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், பிஎன்பி, யூனியன் பேங்க், ஜே அண்ட் கே பேங்க், பேங்க் ஆஃப் இந்தியா, மகாராஷ்டிரா பேங்க், இந்தியன் பேங்க் ஆகியவை 0.50 முதல் 3.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com