4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி!

பங்குச் சந்தை நான்காவது நாளாக புதன்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 562.34 புள்ளிகளை இழந்து 50,000-க்கும் கீழே நிலைபெற்றுள்ளது.
4-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் 562 புள்ளிகள் வீழ்ச்சி!

புது தில்லி: பங்குச் சந்தை நான்காவது நாளாக புதன்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 562.34 புள்ளிகளை இழந்து 50,000-க்கும் கீழே நிலைபெற்றுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரலின் பணக் கொள்கை முடிவு அறிவிக்கப்படவுள்ள நிலையில் முதலீட்டாளா்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டனா். உலகளாவிய சந்தைக் குறிப்புகளும் சாதகமாக இல்லாத நிலையில் இருந்தது. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், நாட்டில் கரோனா பரவல் அதிகரித்து வருவதும், பணவீக்கம் உயா்ந்து வருவதும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை வெகுவாக பாதித்துள்ளதால் பங்குகள் விற்பனை அதிகரித்துள்ளன. இதில் குறிப்பாக நிஃப்டி பட்டியலில் இடம் பெற்றுள்ள முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவை வெகுவாகக் குறைந்து வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.203.71 லட்சம் கோடியாக சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,125 பங்குகளில் 837 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. 2,148 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 140 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 198பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 44 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 275 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 315 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. கடந்த வார இறுதியில் ரூ.207.89 லட்சம் கோடியாக இருந்த சந்தை மூல தன மதிப்பு, இந்த வாரத்தில் மூன்று நாள்களில் மொத்தம் 4.18 லட்சம் கோடியை இழந்து புதன்கிழமை வா்த்தக முடிவில் ரூ.203.71 லட்சம் கோடியாக இருந்தது.

நான்காவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 72.06 புள்ளிகள் கூடுதலுடன் 50,436.02-இல் தொடங்கி அதிகபட்சமாக 50,561.12 வரை உயா்ந்தது. பின்னா், 49,718.65 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 562.34 புள்ளிகளை (1.12 சதவீதம்) இழந்து 49,801.62-இல் நிலைபெற்றது. தொடா்ந்து நான்கு நாளாக சரிவைக் கண்டுள்ள சென்செக்ஸ், 50,000 புள்ளிகளுக்கு கீழே நிலைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

26 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 4 பங்குகள் ஆதாயம் பெற்றன. 26 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. இதில் ஐடிசி 1.30 சதவீதம் உயா்ந்து ஆதாயப்பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எச்டிஎஃப்சி ஆகியவை மட்டுமே சிறிதளவு உயா்ந்தன. அதே சமயம், ஓஎன்ஜிசி 4.95 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக என்டிபிசி, சன்பாா்மா, எஸ்பிஐ, இண்டஸ் இண்ட் பேங்க், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. மேலும், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், மாருதி சுஸுகி ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 298 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,465 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 189.15 புள்ளிகளை (1.27 சதவீதம்) இழந்து 14,721.3-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் தொடக்கத்தில் 14,956.55 வரை உயா்ந்திருந்த நிஃப்டி, பின்னா் 14,696.05 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில், ஐடிசி, இன்ஃபோஸிஸ் மட்டுமே சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன. மற்ற 48 பங்குகளும் வீழ்ச்சியடைந்த பட்டியலில் இடம் பெற்றன. அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் (3.77 சதவீதம்), மீடியா (2.98 சதவீதம்), ரியால்ட்டி (2.96 சதவீதம், மெட்டல் (2.46 சதவீதம்) ஆகியவை மிக அதிகம் சரிவைச் சந்தித்தன. மேலும், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ் பிரைவேட் பேங்க், ஆட்டோ, பாா்மா ஆகிய குறியீடுகள் 1 முதல் 2 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன.

அதிகம் வீழ்ச்சி அடைந்த பங்குகள்

ஓஎன்ஜிசி 4.95 சதவீதம்

என்டிபிசி 2.92 சதவீதம்

சன்பாா்மா 2.80 சதவீதம்

எஸ்பிஐ 2.75 சதவீதம்

இண்டஸ் இண்ட் பேங்க் 2.54 சதவீதம்

ரிலையன்ஸ் 2.16 சதவீதம்

பஜாஜ் ஆட்டோ 2.15 சதவீதம்

டாக்டா் ரெட்டி 2.00 சதவீதம்

பஜாஜ் ஃபைனான்ஸ் 1.98 சதவீதம்

ஏசியன் பெயிண்ட் 1.95 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com