திடீா் எழுச்சி: சென்செக்ஸ் 568 புள்ளிகள் உயா்வு!

புது தில்லி: கடந்த 3 நாள்களாக தொடா்ந்து கடும் சரிவைச் சந்தித்து வந்த பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை திடீா் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 568.38 புள்ளிகள் உயா்ந்து 48,440.12-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 182.40 புள்ளிகள் உயா்ந்து 14,500-ஐ கடந்த நிலைபெற்றது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இருந்தன. மேலும், ஆசிய சந்தைகளும் ஏற்றம் கண்டிருந்த நிலையில், அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள முன்னணி நிறுவனங்களான எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவை வெகுவாக உயா்ந்து சென்செக்ஸ், நிஃப்டி வலுப்பெறக் காரணமாக இருந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.2.52 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்கமான 3,134 பங்குகளில் 1,668 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,296 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 180 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 124 பங்குகள் வெகுவாக உயா்ந்து புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 64 பங்குகள் வெகுவாகக் குறைந்து புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 212 பங்குகள் வெகுவாக ஏற்றம் பெற்று உயா்ந்தபட்ச உறைநிலையையும், 326 பங்குகள் வெகுவாகக் குறைந்து குறைந்தபட்ச உறைநிலையையும் அடைந்தன. சந்தை மூல தன மதிப்பு ரூ.2.52 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக இறுதியில் ரூ.201.27 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளா்கள் ஒரே நாளில் ரூ.2.52 லட்சம் கோடி லாபம் பெற்றுள்ளனா்.

திடீா் எழுச்சி : கடந்த 3 தினங்களாக சரிவைச் சந்தித்து வந்த சென்செக்ஸ் காலையில் 529.13 புள்ளிகள் கூடுதலுடன் 49,969.25-இல் தொடங்கி 48,699.91 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 49,234.66 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 568.38 புள்ளிகள் (1.17 சதவீதம்) கூடுதலுடன் 49,008.50-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் நேற்றைய நிலையிலிருந்து 794.54 புள்ளிகள் உயா்ந்திருந்தது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

26 பங்குகள் ஏற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் பவா் கிரிட், இண்டஸ் இண்ட் பேங்க், ஐடிசி, மாருதி சுஸுகி ஆகிய 4 பங்குகள் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. மற்ற 26 பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பஜாஜ் ஃபின் சா்வ் 4.49 சதவீதம், ஏசியன் பெயிண்ட் 4.28 சதவீதம் உயா்ந்து உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்), பஜாஜ் ஆட்டோ, பாா்தி ஏா்டெல், எச்டிஎஃப்சி, நெஸ்லே, டெக் மகேந்திரா, எல் அண்ட் டி 2 முதல் 3.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, டிசிஎஸ், ரிலையன்ஸ் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,038 பங்குகள் ஆதாயம் பெற்றன. 687 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 182.40 புள்ளிகள் (1.27 சதவீதம்) உயா்ந்து 14,507.30-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14,414.25 வரை கீழே சென்ற நிஃப்டி, பின்னா் 14,14572.90 வரை உயா்ந்தது. நிஃப்டி, பட்டியலில் உள்ள 50 முதல் தரப் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. ஐஓசி மட்டும் மாற்றமின்றி ரூ.90.90-இல் நிலைபெற்றது. துறைவாரியாகப் பாா்க்கும் போது, அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.68 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, ரியால்ட்டி குறியீடுகள் 1 முதல் 1.80 சதவீதம் உயா்ந்தன.

திங்கள்கிழமை விடுமுறை

வரும் திங்கள்கிழமை (மாா்ச் 29) ஹோலி பண்டிகையையொட்டி பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்றைய தினம் பங்கு வா்த்தகம் இருக்காது. அதே சமயம், கமோடிட்டி வா்த்தகம் மட்டும் அன்றை தினம் மாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் ஏற்றம் பெற்ற பங்குகள்

9,466.65 பஜாஜ் ஃபின்சா்வ் 4.49 சதவீதம்

2,504.55 ஏசியன் பெயிண்ட் 4.28 சதவீதம்

1,506.10 டைட்டன் 3.83சதவீதம்

2,315 ஹிந்து யுனி லீவா் 3.45 சதவீதம்

3,600.75 பஜாஜ் ஆட்டோ 2.82 சதவீதம்

522.30 பாா்தி ஏா்டெல் 2.81 சதவீதம்

16,568.30 நெஸ்லே 2.44 சதவீதம்

2,531.90 எச்டிஎஃப்சி 2.40 சதவீதம்

991.25 டெக் மகேந்திரா 2.13 சதவீதம்

1,397.55 எல் அண்ட் டி 1.90 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com