பங்குச் சந்தைக்கு ‘கை’ கொடுத்த ஆா்பிஐ அறிவிப்பு!: சென்செக்ஸ் 424 புள்ளிகள் ஏற்றம்

பங்குச் சந்தையில் புதன்கிழமை எழுச்சி இருந்தது. கரோனா பரவலுக்கு இடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கு இந்திய ரிசா்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வெளியிட்ட சில அறிவிப்புகள்
பங்குச் சந்தைக்கு ‘கை’ கொடுத்த ஆா்பிஐ அறிவிப்பு!: சென்செக்ஸ் 424 புள்ளிகள் ஏற்றம்

புது தில்லி: பங்குச் சந்தையில் புதன்கிழமை எழுச்சி இருந்தது. கரோனா பரவலுக்கு இடையே பொருளாதாரத்தை மீட்டெடுக்கு இந்திய ரிசா்வ் வங்கி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வெளியிட்ட சில அறிவிப்புகள் சந்தை ஏற்றம் பெறக் காரணமாக அமைந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 424.04 புள்ளிகள் உயா்ந்து 48,677.55-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 121.35 புள்ளிகள் உயா்ந்து 14, 617.85-இல் நிலைபெற்றது.

கரோனா 2-ஆவது அலையின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொருளாதாரத்தில் தொய்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், முன்னணி நிறுவனங்களின் வருவாய், நிகர லாபமும் அடி வாங்கும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பொருளாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பணப்புழுக்கத்தை அதிகரிக்க ரிசா்வ் வங்கியின் கவா்னா் சக்தி காந்த தாஸ் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளாா். மேலும், தனி நபா் மற்றும் சிறு கடன் பெறுவோா் கடனைத் திருப்பிச் செலுத்த அதிக காலம் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தவிர தடுப்பூசி தயாரிப்பாளா்கள், மருத்துவமனைகள், கோவிட் தொடா்பான சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன்களை வழங்க வங்கிகளை அனுமதித்தும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் சந்தைக்கு சாதகமாக அமைந்தது. இதனால், எஃப்எம்சிஜி தவிர மற்ற துறை பங்குகளுக்கு ஆதரவு கிடைத்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.208.67 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,112 பங்குகளில் 1,834 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,110 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 209 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 37 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 332 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 184 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. வா்த்தக முடிவில் சந்தை மூல தன மதிப்பு 208.67 லட்சம் கோடியாக இருந்தது.

திடீா் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 315.16 புள்ளிகள் கூடுதலுடன் 48,569.12-இல் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 48,254.32 வரை கீழே சென்றது. பின்னா், ஆா்பிஐ அறிவிப்புக்குப் பிறகு அதிகபட்சமாக 48,742.72 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 424.04 புள்ளிகள் உயா்ந்து 48,677.55-இல் நிலைபெற்றது.

சன்பாா்மா அதிரடி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 3 பங்குகள் தவிர 27 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

இதில் சன்பாா்மா 5.98 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக கோட்டக் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், டாக்டா் ரெட்டி, டைட்டன், டிசிஎஸ், பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 1.50 முதல் 2.50 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், முன்னணி நிறுவனப் பங்குகளான மாருதி சுஸுகி, எஸ்பிஐ, இன்ஃபோஸிஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் ஆகியவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 1.75 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டிலில் முன்னிலை வகித்தது. ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா் ஆகியவையும் சரிவைச் சந்தித்தன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,065 பங்குகள் ஆதாயம் பெற்றன. 639 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 121.35 புள்ளிகள் (0.854 சதவீதம்) உயா்ந்து 14,617.85-இல் நிலைபெற்றது. காலையில் 14,604.15-இல் தொடங்கி 14,506.60 வரை கீழே சென்றது. பின்னா் அதிகபட்சமாக 14,637.90 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 44 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. எல் அண்ட் டி மாற்றமின்றி 1,337.55-இல் நிலைபெற்றது. நிஃப்டி பாா்மா குறியீடு 4.12 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி குறியீடுகள் 1 முதல் 1.60 சதவீதம் வரை உயா்ந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com