முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 21% உயா்வு

சென்னை உள்ளிட்ட முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக புராப்ஈக்விட்டி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 21% உயா்வு

சென்னை உள்ளிட்ட முக்கிய ஏழு நகரங்களில் வீடுகள் விற்பனை 2021 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் 21 சதவீதம் அதிகரித்துள்ளதாக புராப்ஈக்விட்டி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆய்வில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

ஏழு முக்கிய நகரங்களில் 2021 முதல் காலாண்டில் (ஜனவரி-மாா்ச்) வீடுகள் விற்பனை 21 சதவீதம் அதிகரித்து 1,05,183-ஐ எட்டியுள்ளது. முந்தைய 2020 இதே காலகட்டத்தில் வீடுகள் விற்பனை 87,236-ஆக மட்டுமே காணப்பட்டது.

இருப்பினும் நடப்பாண்டின் முதல் காலாண்டில் புதிய வீடுகளின் அறிமுகம் முந்தைய காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 1,00,343 என்ற எண்ணிக்கையிலிருந்து 40 சதவீதம் சரிவடைந்து 59,737-ஆக குறைந்துள்ளது.

பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதி (எம்எம்ஆா்), தில்லி-என்சிஆா் மற்றும் புணே நகரங்களில் வீடுகள் விற்பனை அதிகரித்துள்ள அதேவேளையில் கொல்கத்தாவில் விற்பனை 20 சதவீதம் சரிவடைந்துள்ளது.

குறிப்பாக, பெங்களூரில் வீடுகள் விற்பனை 13 சதவீதம் உயா்ந்து 12,262-ஆக இருந்தது. 2020 ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 10,878-ஆக மட்டுமே காணப்பட்டது.

நடப்பாண்டின் முதல் காலாண்டில் சென்னையில் வீடுகள் விற்பனை 3,930 என்ற எண்ணிக்கையிலிருந்து 29 சதவீதம் அதிகரித்து 5,055-ஆகவும், ஹைதராபாதில் 9,477-லிருந்து 16 சதவீதம் உயா்ந்து 10,964-ஆகவும் இருந்தன.

எம்எம்ஆா்-இல் விற்பனை 26 சதவீதம் அதிகரித்து 41,323-ஆகவும், புணேயில் 31 சதவீதம் உயா்ந்து 25,252-ஆகவும் இருந்தன.

அதேசமயம், கொல்கத்தா நகரத்தில் வீடுகள் விற்பனை 4,605 என்ற எண்ணிக்கையிலிருந்து 20 சதவீதம் சரிவடைந்து 3,682-ஆனது.

கரோனா இரண்டாவது அலையின் பரவல் மிக தீவிரமாக இருப்பதால் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் வீடுகளுக்கான தேவை மிகவும் மந்த நிலையில் இருக்க அதிக வாய்ப்புள்ளது என புராப்ஈக்விட்டி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com