ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: 2 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மீட்சி பெற்றிருந்த பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: 2 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்தது

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மீட்சி பெற்றிருந்த பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபத்தைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்தியதால் மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 14 புள்ளிகள் குறைந்து 50,637-இல் நிலைபெற்றது. இதைத் தொடர்ந்து, இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பெரும்பாலான வங்கி, நிதி நிறுவனப் பங்குகளில் செவ்வாய்க்கிழமை லாபப் பதிவு இருந்தது. அதேசமயம், ஆட்டோ, மெட்டல் மற்றும் ஐடி பங்குகளை வாங்குவதற்கு ஆர்வம் காணப்பட்டது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்தாலும், வர்த்தகத்தின் இறுதியில் சந்தை ஓரளவு மீண்டது. இதற்கிடையே, கரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதும், தடுப்பூசி வழங்கல் வேகமெடுத்துள்ளதாலும் அடுத்த வாரத்தில் இருந்து கட்டுப்பாடுகளை மாநிலங்கள் திரும்பப் பெறுவது, சந்தையில் உற்சாகத்தை அதிகரிக்கும் என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 சந்தை மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,281 பங்குகளில் 1,786 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,342 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 357 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 29 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 458 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 207 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.12 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.219.06 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 6.91 கோடியைக் கடந்துள்ளது.
 எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் காலையில் 270.42 புள்ளிகள் கூடுதலுடன் 50,922.32-இல் தொடங்கி 50,961.35 வரை உயர்ந்தது. பின்னர், 50,457.34 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 14.37 புள்ளிகளை (0.03 சதவீதம்) மட்டும் இழந்து 50,637.53-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் அதிகபட்ச நிலையிலிருந்து 487.01 புள்ளிகளை இழந்த நிலையில் இருந்தது. ஆனால், வர்த்தகம் முடியும் தறுவாயில் ஓரளவு மீண்டது .
 ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 21 பங்குகள் ஆதாயம் பெற்றன. 9 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட்ஸ் 3. 38 சதவீதம், டைட்டன் 3.22 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சர்வ், ஓஎன்ஜிசி, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், பவர் கிரிட், டெக் மஹிந்திரா ஆகியவை 1-1.87 சதவீதம் வரை உயர்ந்தன. எல் அண்ட் டி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சிறிதளவு உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

எச்டிஎஃப்சி பேங்க் சரிவு: அதேசமயம், எச்டிஎஃப்சி பேங்க் 2.02 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி, ஐடிசி, கோட்டக் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.
 நிஃப்டி 11 புள்ளிகள் ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடந்த வர்த்தகத்தில் 900 பங்குகள் ஆதாயம் பெற்றன. 861 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி, 10.75 புள்ளிகள் (0.07 சதவீதம்) உயர்ந்து 15,208.45-இல் நிலைபெற்றது. காலையில் 15,291.75-இல் தொடங்கி, அதிகபட்சமாக 15,293.85 வரை உயர்ந்தது. பின்னர், 15,163.40 வரை கீழே சென்றது. ஒரு கட்டத்தில் அதிகபட்ச நிலையிலிருந்து 130.45 புள்ளிகளை இழந்திருந்தது.
 தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், பிஎஸ்யு பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் வீழ்ச்சியை சந்தித்தன. அதேசமயம் நிஃப்டி மீடியா குறியீடு 3.17 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஐடி, மெட்டல், பார்மா, ரியால்ட்டி, எஃப்எம்சிஜி குறியீடுகளும் 0.40 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன.
 மீடியா பங்குகள் உற்சாகம்


 பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடந்த வர்த்தகத்தில் மீடியா பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி மீடியா குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 10 முன்னணி பங்குகளில் சன்டிவி (0.55 சதவீதம்), நெட்வொர்க்-18 (0.75 சதவீதம்) ஆகிய இரண்டு மட்டுமே சிறிதளவு வீழ்ச்சி கண்டன. மற்ற அனைத்துப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com