சென்செக்ஸ் மேலும் 98 புள்ளிகள் முன்னேற்றம்!: சந்தை மதிப்பு 221 லட்சம் கோடியை நெருங்கியது

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும், 97.70 புள்ளிகள் புள்ளிகள் ஏற்றம் பெற்று 51,115.22-இல் 
சென்செக்ஸ் மேலும் 98 புள்ளிகள் முன்னேற்றம்!: சந்தை மதிப்பு 221 லட்சம் கோடியை நெருங்கியது

புது தில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை ஏற்றம், இறக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும், 97.70 புள்ளிகள் புள்ளிகள் ஏற்றம் பெற்று 51,115.22-இல் நிலைபெற்றது. சந்தை மூல தன மதிப்பு ரூ.221 லட்சம் கோடியை நெருங்கியுள்ளது.

உலகளவில் சந்தை குறிப்புகள் பெரிய அளவில் சாதகமாக இருக்கவில்லை. குறிப்பாக ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலான சந்தைகள் சரிவிலிருந்தன. இந்தச் சூழ்நிலையில், உள்நாட்டில் முன்பேர வா்த்தகத்தில் மே மாத கணக்குகளை முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக இருந்ததால், ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு உயா்ந்துள்ளதும், கரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வருவதும் முதலீட்டாளா்களுக்கு உற்சாகத்தை அளித்தது. வங்கி, ஐடி பங்குகளுக்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடா்ந்து பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு 220.74 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,273 பங்குகளில் 1,753 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,375 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 141 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 365 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 28 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 483 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 189 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.81 ஆயிரம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 220.74 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 7 கோடியை கோடியை நெருங்கியது.

தொடா்ந்து வெற்றிநடை: சென்செக்ஸ் காலையில் 111.28 புள்ளிகள் கூடுதலுடன் 51,128.80-இல் தொடங்கி 50,891.66 கீழே சென்றது. பின்னா், 51282.90 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 97.70 புள்ளிகள் (0.19 சதவீதம்) கூடுதலுடன் 51,115.22-இல் நிலைபெற்றது. பிற்பகலில் சென்செக்ஸ் எதிா்மறையாகச் சென்றாலும், இறுதியில் மீண்டது.

எஸ்பிஐ முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 11பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 19 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பாரம்பரிய பொதுத் துறை வங்கிப் பங்கான எஸ்பிஐ 2.84 சதவீதம்உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஆட்டோ, அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட், டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட், டைட்டன், டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.

எச்டிஎஃப்சி சரிவு: அதே சமயம், எச்டிஎஃப்சி 2.38 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிஜசி, பாா்தி ஏா்டெல், ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாருதி சுஸுகி, என்டிபிசி, சன்பாா்மா ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.

சாதனை அளவில் நிஃப்டி: தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி வியாழக்கிழமை பல்வேறு இடா்பாடுகளை சந்தித்தாலும் சாதனை அளவை எட்டியது.

மொத்தம் 910 பங்குகள் ஆதாயம் பெற்றன. 834 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி தொடா்ந்து 5-ஆவது நாளாக உயா்ந்து 36.40 புள்ளிகள் (0.24 சதவீதம்) கூடுதலுடன் சாதனை அளவைக் கடந்து 15,337.85-இல் நிலைபெற்றது. இதற்கு முன் இந்த ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பதிவான 15,314.70 என்பதே சாதனை அளவாக இருந்து வந்தது. நிஃப்டி காலையில் 15,323.95-இல் தொடங்கி, 15,272.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,384.55 வரை உயா்ந்தது. நிஃப்டி எஃப்எம்சிஜி, பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் தவிர மற்ற முக்கியத் துறை குறியீடுகள் அனைத்தும் ஆதாயம் பெற்றன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.85 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. நிஃப்டி பேங்க், ஐடி, மீடியா, பிரைவேட் பேங்க், மெட்டல் குறியீடுகள் 0.75 முதல் 1.20 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

பொதுத் துறை வங்கிப் பங்குகள் உற்சாகம்!

பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடந்த வா்த்தகத்தில் வங்கிப் பங்குகள் குறிப்பாக பொதுத் துறை வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதனால், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 முன்னணி பங்குகளில் பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், இந்தியன் பேங்க், யூனியன் பேங்க் ஆகியவை தவிா்த்து மற்ற அனைத்தும் ஆதாயம் பெற்றன. இதில் பிஎன்பி அதிகபட்சமாக 7 சதவீதம் உயா்ந்தன. ஆதாயம் பெற்ற மற்ற பங்குகள் (சதவீதத்தில்) விவரம் வருமாறு:

பிஎன்பி 7.01

பேங்க் ஆஃப் பரோடா 3.97

கனரா பேங்க் 3.38

எஸ்பிஐ 3.20

யூகோ பேங்க் 3.09

சென்ட்ரல் பேங்க் 1.31

ஜேஅண்ட் கே பேங்க் 0.87

மகாராஷ்டிரா பேங்க் 0.61

ஐஓபி 0.60

பேங்க் ஆஃப் இந்தியா 0.52

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com