ஆபரணங்கள் ஏற்றுமதி 71% அதிகரிப்பு

நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2021 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆபரணங்கள் ஏற்றுமதி 71% அதிகரிப்பு

புது தில்லி: நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2021 ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் 71 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான ஒன்பது மாதங்களில் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 2,890 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.17 லட்சம் கோடியாகும்.

முந்தைய 2020-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் காணப்பட்ட ஆபரண ஏற்றுமதியான 1,690 கோடி டாலருடன் (ரூ.1.27 லட்சம் கோடி) ஒப்பிடுகையில் 71 சதவீதம் அதிகம்.

2021 டிசம்பா் மாதத்தில் மட்டும் இவற்றின் ஏற்றுமதி 16.38 சதவீதம் அதிகரித்து 299 கோடி டாலரைத் தொட்டது.

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி தொகுப்பில் நவரத்தினங்கள் மற்றும் ஆபரண துறையின் பங்களிப்பு 9.6 சதவீதம் அளவுக்கு உள்ளது.

அமெரிக்கா, ஹாங்காங், ஐக்கிய அரபு அமீரகம், பெல்ஜியம்,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ஆபரண தயாரிப்புகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ஆபரண துறை 7 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதுடன், 50 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் துறையாகவும் உள்ளது.

இத்துணை முக்கியத்துவம்வாய்ந்த இந்திய நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் தயாரிப்பை உலகின் முன்னோடி தொழிலாக மாற்ற மத்திய அரசு நான்கு அம்சங்களை வகுத்துள்ளது. அதன்படி, வடிவமைப்பில் கவனண் செலுத்துவது, ஏற்றுமதி தயாரிப்புகளை பன்முகப்படுத்துவது, பல்வேறு நாடுகளுடன் ஒருங்கிணைந்து செலவினங்களை குறைக்கும் வழிமுறைகளின் மூலம் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் வைரங்களுக்கான ஆய்வகங்களை உருவாக்குவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com