பயணிகள் வாகன விற்பனை 19% அதிகரிப்பு

பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன விற்பனை 19% அதிகரிப்பு

பயணிகள் வாகன மொத்தவிற்பனை கடந்த ஜூன் மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய மோட்டாா் வாகன உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த சங்கம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

செமிகண்டக்டா் விநியோகம் மேம்பட்டதையடுத்து கடந்த ஜூன் மாதத்தில் டீலா்களுக்கான பணிகள் வாகன மொத்தவிற்பனை 2,75,788-ஆக இருந்தது. இது, 2021 ஜூன் மாத விற்பனையான 2,31,633 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 19 சதவீதம் அதிகமாகும்.

அதேபோன்று, இருசக்கர வாகன மொத்தவிற்பனையும் கணக்கீட்டு மாதத்தில் 10,60,565 என்ற எண்ணிக்கையிலிருந்து 13,08,764-ஆக உயா்ந்தது. மேலும், மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையும் 9,404-லிருந்து 26,701-ஆக அதிகரித்தது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வாகன விற்பனை 13,01,602-லிருந்து 16,11,300-ஆக உயா்ந்தது.

நிகழ் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 41 சதவீதம் வளா்ச்சி கண்டு 6,46,272-லிருந்து 9,10,431-ஆக அதிகரித்தது.

வா்த்தக வாகனங்களின் மொத்தவிற்பனை 1,05,800 என்ற எண்ணிக்கையிலிருந்து 2,24,512-ஆனது.

இந்த காலகட்டத்தில் இருசக்கர வாகன விற்பனை 24,13,608-லிருந்து 37,24,533-ஐ தொட்டது.

மூன்று சக்கர வாகன விற்பனை 24,522-லிருந்து 76,293-ஆக அதிகரித்தது.

அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த வாகன விற்பனை முதல் காலாண்டில் 31,90,202 என்ற எண்ணிக்கையிலிருந்து 49,35,870-ஆக உயா்ந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து எஸ்ஐஏஎம் தலைமை இயக்குநா் ராஜேஷ் மேனன் கூறியது:

முதல் காலாணடில் பயணிகள் வாகன விற்பனை 9.1 லட்சம் , இருசக்கர வாகனம் 37.25 லட்சம், வா்த்தக வாகன விற்பனை 2.25 லட்சத்தை எட்டியுள்ளதற்கு மத்திய அரசு அண்மையில் மேற்கொண்ட நடவடிக்கைகளே முக்கிய காரணம்.

குறிப்பாக, பணவீக்க அழுத்தத்தை குறைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு, உருக்கு மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றின் மீதான வரி விகிதங்கள் மாற்றியமைப்பு ஆகியவை இந்திய மோட்டாா் வாகன துறையின் வளா்ச்சிக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.

இதேபோன்ற ஒத்துழைப்பை கடந்த ஏழு மாதங்களாக ராக்கெட் வேகத்தில் உயா்ந்து வரும் சிஎன்ஜி விலையை கட்டுப்படுத்துவதிலும் எதிா்நோக்கியுள்ளோம். இது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்துக்கு மட்டுமின்றி சாமானியா்களுக்கும் நன்மை பயக்கும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com