பருத்தி பற்றாக்குறையை எதிர்நோக்கும் ஜவுளித் துறை: 40 லட்சம் பேல் பருத்தியை இறக்குமதி செய்ய பஞ்சாலைகள் கோரிக்கை

இந்தியாவில் பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டு தொழில்கள் முடங்கும் நிலை உருவாகும் வாய்ப்பிருப்பதால், வெளிநாடுகளில் இருந்து 40 லட்சம் பேல் நீண்ட இழை பருத்தியை, வரிகள் இல்லாமல் இறக்குமதி
 கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி சாம். உடன், கே.செல்வராஜு.
 கோவையில் செய்தியாளர்களை சந்தித்த ரவி சாம். உடன், கே.செல்வராஜு.

இந்தியாவில் பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டு தொழில்கள் முடங்கும் நிலை உருவாகும் வாய்ப்பிருப்பதால், வெளிநாடுகளில் இருந்து 40 லட்சம் பேல் நீண்ட இழை பருத்தியை, வரிகள் இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) வலியுறுத்தியுள்ளது.
 இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் ரவி சாம் கோவையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
 மத்திய அரசு அளித்துள்ள பல்வேறு சலுகைகள் காரணமாக, கடந்த சில ஆண்டுளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆலைகள் கூட தற்போது இயங்கத் தொடங்கியுள்ளன. ஆனால் அந்த பஞ்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருளான பருத்திக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, உபரியான பருத்தியை வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. நடப்பு பருத்தி சீசனில் சுமார் 50 லட்சம் பேல் வரை அவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
 இந்த சீசனில் உற்பத்தி 360 லட்சம் பேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட நிலையில் அதைக் காட்டிலும் 10 லட்சம் பேல்கள் குறைவாகவே உற்பத்தியாகி இருக்கிறது. தீவிரமான மழை உள்ளிட்ட காரணங்களால் 10 லட்சம் பேல் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருப்பதால் உள்நாட்டில், குறிப்பாக நாட்டின் மொத்த பருத்தி உற்பத்தியில் 70 சதவீதம் வரை நுகர்வு செய்யக் கூடிய கோவையைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
 அடுத்த மூன்று மாதங்களில் பருத்தி பற்றாக்குறை ஏற்பட்டு அதனால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் நிலை இருப்பதால் மத்திய அரசு உடனடியாக 40 லட்சம் பேல் நீண்ட இழை பருத்தியை ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரியில்லாமல் இறக்குமதி செய்து கொள்ள உத்தரவிட வேண்டும். ஒரு முறை வாய்ப்பாக இதை வழங்க வேண்டும்.
 இதைத் தவிர மிக நீண்ட இழை பருத்திக்கு விதிக்கப்பட்டுள்ள 11 சதவீத இறக்குமதி வரியையும் நீக்க வேண்டும். அத்துடன் உள்நாட்டில் பருத்தி விலை கிலோ ரூ.135 இல் (பிப்ரவரி 2021) இருந்து ரூ.219 ஆக (பிப்ரவரி 2022) உயர்ந்துள்ளது. இந்த மிக அதிக விலை உயர்வினால் ஏற்றுமதியாளர்கள் ஏற்கெனவே பெற்றிருக்கும் ஆர்டர்களை நிறைவேற்றுவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.
 மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 70 சதவீதம் வரை விலை உயர்ந்திருப்பதால், விவசாயிகள், ஜின்னர்கள், வியாபாரிகள் மேலும் விலை உயரும் என்ற நோக்கத்தில் சுமார் 75 லட்சம் பேல்களை பதுக்கி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, உள்நாட்டில் விலையைக் குறைக்கும் விதமாகவும், தொழில்கள் முடங்கும் நிலையைத் தவிர்க்கும் விதமாகவும் வரியில்லாமல் பருத்தி இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
 சங்கத்தின் பொதுச் செயலர் கே.செல்வராஜு உடனிருந்தார்.
 "ரஷியா - உக்ரைன் போர் தொடர்ந்தால் ஜவுளித் தொழில் பாதிக்கப்படும்'
 ரஷியா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் தொடர்ந்தால் இந்தியாவில் ஜவுளித் தொழில் மிகவும் பாதிக்கப்படும் என்று சைமா தெரிவித்துள்ளது.
 இது தொடர்பாக சைமா தலைவர் ரவி சாம், பொதுச் செயலர் கே.செல்வராஜு ஆகியோர் கூறும்போது, இந்தியாவில் இருந்து ரஷியாவுக்கு மாதம்தோறும் சுமார் ரூ.2,260 கோடி மதிப்புள்ள தொழில்நுட்பம், வீட்டு உபயோக, ஆயத்த ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல, உக்ரைனுக்கு ரூ.190 கோடி மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன.
 இரு நாடுகளுக்கும் இடையிலான போர் மேலும் தீவிரமடைந்தால் மேலும் சில ஐரோப்பிய நாடுகளில் இது எதிரொலிக்கும். எரிபொருள், வர்த்தக கட்டுப்பாடுகள் தீவிரமடையும்பட்சத்தில் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய ஜவுளிகள் ஏற்றுமதியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ஜவுளித் துறையில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். ஐரோப்பிய நாடுகளுக்கு சுமார் 40 சதவீதம் ஆடைகள் ஏற்றுமதி நடைபெறுவதால், இந்தப் போர் அடுத்த சில நாள்களில் முடிவுக்கு வர வேண்டும் என்று ஜவுளித் தொழில்முனைவோர் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com