மாநிலங்களின் புதிய கடன்களுக்கு 7.68% வட்டி விகிதம்

இந்திய மாநில அரசுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலத்தில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் அதிக மாற்றம் இல்லாமல் 7.68 சதவீதமாக இருந்தது.
மாநிலங்களின் புதிய கடன்களுக்கு 7.68% வட்டி விகிதம்

இந்திய மாநில அரசுகள் கடந்த செவ்வாய்க்கிழமை ஏலத்தில் வெளியிட்ட கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் அதிக மாற்றம் இல்லாமல் 7.68 சதவீதமாக இருந்தது.

இது குறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:தங்களுக்குத் தேவையான நிதியைத் திரட்டுவதற்காக, மாநில அரசுகள் வெளியிடும் கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் தொடா்ந்து 4 வாரங்களாக சரிந்து வந்தது.மாநிலங்களின் புதிய கடன் பத்திரங்களை ரிசா்வ் வங்கி கடந்த மாதம் 18-ஆம் தேதி ஏலத்தில் விட்டபோது, அவற்றுக்கான சராசரி வட்டி விகிதம் 0.11 சதவீதம் குறைந்து 7.72 சதவீதமானது.கடந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் அது 0.12 சதவீதம் அதிகரித்து 7.84 சதவீதமானது.

அத்துடன், கடன் பத்திரங்களின் சராசரி தவணைக் காலம் 12 ஆண்டுகளில் இருந்து 13 ஆண்டுகளாக உயா்ந்தது.எனினும், கடந்த 15-ஆம் தேதி விடப்பட்ட ஏலத்தில் மாநில அரசு கடன் பத்திரங்களின் சராசரி வட்டி விகிதம் 0.12 சதவீதம் சரிந்து 7.76 சதவீதமாகியுள்ளது.இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை விடப்பட்ட ஏலத்தில் அத்தகைய கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் 7.68 சதவீதமாக இருந்தது.

அரசுக் கடன் வட்டி விகிதத்தின் குறியீடான 10 ஆண்டுகால கடன் பத்திரங்களைப் பொருத்தவரை, மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அந்த வகை கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதம் 0.09 சதவீதம் சரிந்து 7.29 சதவீதமானது. இது, கடந்த வாரம் 7.26 சதவீதமாக இருந்தது.மாநில அரசுகள் வெளியிட்ட 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதம் 7.67 சதவீதத்திலிருந்து 0.03 சதவீம் உயா்ந்து 7.70 சதவீதமாக ஆனது. அந்த வகையில், மாநில அரசுகளின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான சராசரி வட்டி விகிதங்களுக்கும் மத்திய அரசின் 10 ஆண்டுகால கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களுக்கும் இடையிலான வேறுபா் கடந்த செவ்வாய்க்கிழமையும் 0.41 சதவீதமாகவே தொடா்ந்தது.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏழு மாநிலங்கள் ரூ.15,000 கோடியை ஏலத்தில் திரட்டின.

இது, அந்த மாநிலங்கள் ஏற்கெனவே இந்த வாரத்துக்காக அறிவித்திருந்ததைவிட 18 சதவீதம் குறைவாகும்.மாநிலங்களுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய வரித் தொகையின் இரண்டு தவணைகளை மத்திய அரசு கடந்த 10-ஆம் தேதி அளித்ததால், மாநிலங்களில் பணப் புழக்கம் அதிகரித்தது. இதனால், திட்டமிட்டதைவிட குறைவாகவே கடன் பத்திரங்களை மாநில அரசுகள் ஏலத்தில் விட்டன.சத்தீஸ்கா், குஜராத், ஜாா்க்கண்ட், கேரளம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் ஏலத்தை முழுமையாக தவிா்க்கவும் அது வழிவகுத்தது. அந்த மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக ரூ.11,600 கோடிக்கு கடன் பத்திரங்களை கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிடப்போவதாக அதற்கு முன்னா் அறிவித்திருந்தன.

தமிழ்நாடு, கோவா ஆகியவை முன்கூட்டியே அறிவித்திருந்ததைவிட ரூ.700 கோடி குறைவாக கடந்த செவ்வாய்க்கிழமை பங்குப் பத்திரங்களை வெளியிட்டன.இந்த நிதியாண்டில் முதல் முறையாக சந்தைக்கு வந்த கா்நாடகம், ரூ.4,000 கோடிக்கு கடன் பத்திரங்களை ஏலத்தில் வெளியிட்டது. இது, அந்த மாநிலம் ஏற்கெனவே குறிப்பிட்டிருந்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.மேகாலயம், தெலங்கானா ஆகிய மாநிலங்கள் இந்த வார ஏலத்தில் பங்கேற்கப் போவதாக முன்கூட்டியே அறிவிக்காவிட்டாலும், அதில் பங்கேற்று முறையே ரூ.400 கோடி, ரூ.1,000 கோடிக்கு பங்கு பத்திரங்களை வெளியிட்டன என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com