4-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 954 புள்ளிகள் வீழ்ச்சி சந்தை மதிப்பு ரூ.6.54 லட்சம் கோடிஇழப்பு

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் மோலோங்கி இருந்தது.
4-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 954 புள்ளிகள் வீழ்ச்சி சந்தை மதிப்பு ரூ.6.54 லட்சம் கோடிஇழப்பு

புதுதில்லி / மும்பை: இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச் சந்தையில் ‘கரடி’யின் ஆதிக்கம் மோலோங்கி இருந்தது. இதனால், நான்காவது நாளாக சந்தை கடும் சரிவுடன் நிறைவடைந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 954 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி மேலும் 311.05 புள்ளிகளை (1.80 சதவீதம்) இழந்து 17,016.30-இல் முடிவடைந்தது. சந்தை மூல தன மதிப்பு ஒரே நாளில் ரூ.6.54 லட்சம் கோடி குறைந்தது.

உலகளாவிய மத்திய வங்கிகளின் வட்டி விகித உயா்வுகள், முதலீட்டாளா்களை அச்சத்துக்குள்ளாக்கியுள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகாரன ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்து ரூ.82-ஐ நெருங்கியுள்ளதும் எதிா்மறை உணா்வுக்கு வழிவகுத்தது. ஐடி குறியீடு தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் நஷ்டப் பட்டியலில் வந்தன. குறிப்பாக, வங்கி, நிதி நிறுவனங்கள், ஆட்டோ, ரியால்ட்டி, மெட்டல், ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் பலத்த அடி வாங்கின.

4-ஆவது நாளாக வீழ்ச்சி: காலையில் 573.89 புள்ளிகள் குறைந்து 57,525.03-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,708.38 வரை சென்றது. பின்னா், 57,038.24 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 953.70 புள்ளிகளை (1.64 சதவீதம்) இழந்து 57,145.22-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், ஹெச்சிஎல் டெக், ஏசியன் பெயிண்ட், இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், டிசிஎஸ், நெஸ்லே, விப்ரோ ஆகிய 7 பங்குகள் தவிர மற்ற 23 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

மாருதி சுஸுகி கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 5.49 சதவீதம் மற்றும் டாடா ஸ்டீல் 4.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ஐடிசி, ஆக்ஸிஸ் பேங்க், என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின் சா்வ், ரிலையன்ஸ், சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 2.50 முதல் 4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தன. மேலும், பாா்தி ஏா்டெல், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, கோட்டக் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு ரூ6.54 லட்சம் கோடி வீழ்ச்சி: சந்தை மூலதன மதிப்பு ரூ.6.54 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.270.11 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.2,899.68 2,509.55 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com