வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை, பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. கரடியின் பிடி இறுகியதால், இறுதியில் சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது.
வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு: சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான செவ்வாய்க்கிழமை, பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. கரடியின் பிடி இறுகியதால், இறுதியில் சந்தை எதிர்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 435 புள்ளிகளை இழந்தது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து ஏறுமுகம் கண்டிருந்த உள்நாட்டுச் சந்தையில், வங்கி, நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளில் லாபப் பதிவு இருந்ததால், சந்தை எதிர்மறையாக முடிவடைந்துள்ளது. குறிப்பாக, எச்டிஎஃப்சி மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் ஆகிய இரண்டும் இணைக்கப்படுவதாக வெளியான தகவலால், திங்கள்கிழமை இரண்டு நிறுவனப்பங்குகளும் தலா 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன. ஆனால், செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து இந்த இரண்டு நிறுவனப் பங்குகளிலும் லாபப் பதிவு அதிகமாக இருந்தது.
 இதனால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 ரஷியா - உக்ரைன் போர், வங்கி வட்டி விகித உயர்வு மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் மீது முதலீட்டாளர்களின் கவனம் திரும்பியுள்ளது. மேலும், கடந்த 5-6 மாதங்களாக ஸ்திரநிலை அடைந்து வந்த நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளுக்கும் சந்தையில் அதிக தேவை காணப்பட்டது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 மூலதனச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நிகர அளவில் ரூ.374.89 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
 2,306 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,507 நிறுவனப் பங்குகளில் 1,102 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 2,306 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 99 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 173 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 10 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.28 லட்சம் கோடி உயர்ந்து, வர்த்தக முடிவில் ரூ.273.74 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 10.18 கோடியாக உயர்ந்துள்ளது.
 2 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 174.33 புள்ளிகள் கூடுதலுடன் 60,786.07-இல் தொடங்கி, அதற்கு மேல் உயரவில்லை. பின்னர், வர்த்தகம் முடியும் தறுவாயில் பங்குகள் விற்பனை அதிகரித்ததால், சென்செக்ஸ்
 60,067.18 வரை கீழே சென்றது. இறுதியில் 435.24 புள்ளிகள் (0.72 சதவீதம்) குறைந்து 60,176.50-இல் நிலைபெற்றது. தொடக்கத்தில் காளையின் ஆதிக்கம் இருந்தாலும், நேரம் செல்லச் செல்ல கரடியின் பிடி இறுகியது. இதனால், இரண்டு நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.


 எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் விலை சரிவு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 14 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. இதில், திங்கள்கிழமை வர்த்தகத்தில் 10 சதவீதம் வரை ஏற்றம் பெற்றிருந்த எச்டிஎஃப்சி பேங்க் பங்கின் விலை செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 2.98 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. மேலும், பஜாஜ் ஃபின்சர்வ் 2.14 சதவீதம், எச்டிஎஃப்சி 2.12 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, கோட்டக் பேங்க், ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், மாருதி சுஸýகி, ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
 என்டிபிசி முன்னேற்றம்:
 அதே சமயம், பொதுத் துறை மின் நிறுவனமான என்டிபிசி 3.40 சதவீதம், பவர் கிரிட் 2.48 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்தபடியாக, ஐடிசி, நெஸ்லே, டைட்டன், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஏஷியன் பெயிண்ட், ஹெச்சிஎல் டெக் உள்ளிட்டவை 0.70 முதல் 1.65 சதவீதம் வரை உயர்ந்தன.
 நிஃப்டி 96 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,350 பங்குகள் ஆதாயம் பெற்றன. 578 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 24 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 96 புள்ளிகளை (0.53 சதவீதம்) இழந்து 17,957.40-இல் நிறைவடைந்தது. காலையில் 27.20 புள்ளிகள் கூடுதலுடன்18,080.60-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 18,095.45 வரை உயர்ந்தது. பின்னர்,17,921.55 வரை கீழே சென்றது.
 பேங்க் குறியீடு முன்னேற்றம்:
 தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடு 2.40 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எஃப்எம்சிஜி, ஆட்டோ குறியீடுகள் 1.25 சதவீதம் வரை உயர்ந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 1.60 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com