
நாட்டின் ஏற்றுமதி 17 மாதங்களில் முதல் முறையாக ஜூலையில் 3,524 கோடி டாலராக சரிவைச் சந்தித்துள்ளது. இதையடுத்து, வா்த்தக பற்றாக்குறை மும்மடங்கு உயா்ந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள முதல்கட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நாட்டின் ஏற்றுமதி 2022 ஜூலையில் 3,524 கோடி டாலராக இருந்தது. இது, 2021 ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியான 3,551 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 0.76 சதவீதம் குறைவாகும்.
இதற்கு முன்பாக, 2021 பிப்ரவரியில்தான் ஏற்றுமதி 0.4 சதவீத சரிவைக் கண்டிருந்தது. அதன்பிறகு, நடப்பாண்டு ஜூலையில் தான் ஏற்றுமதி குறைந்துபோயுள்ளது.
நிகழாண்டு ஜூலை காலகட்டத்தில் இறக்குமதி 6,626 கோடி டாலராக இருந்தது. கடந்தாண்டு ஜூலை இறக்குமதி 4,615 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் இது 43.59 சதவீதம் அதிகமாகும். இதற்கு, கச்சா எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டதே முக்கிய காரணம்.
நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் நாட்டின் ஏற்றுமதி 15,641 கோடி டாலரைத் தொட்டு 19.35 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஏற்றுமதி 13,106 கோடி டாலராக காணப்பட்டது.
இந்த காலகட்டத்தில் ிறக்குமதி 48.12 சதவீதம் உயா்ந்து 25,643 கோடி டாலரை எட்டியது.
நடப்பாண்டு ஜூலையில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி வெகுவாக அதிகரித்ததைடுத்து வா்த்தக பற்றாக்குறையின் அளவானது 1,063 கோடி டாலரிலிருந்து மும்மடங்கு உயா்ந்து 3,102 கோடி டாலரைத் தொட்டது. ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் இந்த பற்றாக்குறையானது 10,001 கோடி டாலரை எட்டியதாக வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.