எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவில் முடிந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மேலும் 0.12 சதவீதம் சரிவடைந்தது
எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிந்த பங்குச் சந்தை

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை எழுச்சியுடன் தொடங்கி இறுதியில் சரிவில் முடிந்தது. இதையடுத்து, சென்செக்ஸ் மேலும் 0.12 சதவீதம் சரிவடைந்தது. இருப்பினும், சந்தை மூலதன மதிப்பு ரூ.90 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.255.68 லட்சம் கோடியாக இருந்தது.
 முன்பேர வர்த்தகத்தில் பிப்ரவரி மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க வியாழக்கிழமை கடைசி நாளாக உள்ளதால், சந்தையில் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.
 உக்ரைன் - ரஷியா பதற்றம் தொடர்ந்து வருவது உலகளாவிய சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஆசிய சந்தைகள் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் முடிவில் நேர்மறையாக முடிந்திருந்தது. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்ததால், சந்தை எழுச்சியுடன் தொடங்கியது. ஆனால், உக்ரைன் பிரச்னையில் இன்னும் தெளிவு ஏற்படாதது, முதலீட்டாளர்களின் உணர்வுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. இதன் காரணமாக சந்தை ஏற்றம் பெரும்போதெல்லாம் லாபத்தைப் பதிவு செய்வதில் அவர்கள் கவனம் செலுத்தத் தொடங்குகின்றனர். இதைத் தொடர்ந்து, சந்தை 6-ஆவது நாளாக சரிவை சந்தித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 மேலும், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்று வருவதும் சந்தைக்கு பாதகமாக அமைந்துள்ளது. அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்றும் நிகர அளவில் ரூ.3,245.52 கோடி அளவுக்கு பங்குகளை விற்றுள்ளதாக சந்தை பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.
 2,197 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,460 பங்குகளில் 2,197 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,167 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 96 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 76 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 56 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
 பதிவு செய்துள்ள முதலீட்டாளர்கள் எண்ணிக்கை 9.79 கோடியாக உயர்ந்துள்ளது.
 6-ஆவது நாளாக சரிவு: சென்செக்ஸ் காலையில் 332.26 புள்ளிகள் கூடுதலுடன் 57,632.94-இல் தொடங்கி அதிகபட்சமாக 57,733.37 வரை உயர்ந்தது. பின்னர், 57,109.24 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் மேலும் 68.62 புள்ளிகளை (0.12 சதவீதம்) இழந்து 57,232.06-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 16 பங்குகள் ஆதாயம் பெற்றன. 14 பங்குகள் சரிவைச் சந்தித்தன. சென்செக்ஸ் 6-ஆவது நாளாக தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
 என்டிபிசி வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி 1.55 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, எல் அண்ட் டி, நெஸ்லே, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், டிசிஎஸ், சன்பார்மா உள்ளிட்டவை 0.50 முதல் 1.20 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 கோட்டக் பேங்க் முன்னேற்றம்: அதே சமயம், முன்னணி தனியார் வங்கியான கோட்டக் பேங்க் 2.49 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸýகி, பார்தி ஏர்டெல், விப்ரோ, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட் உள்ளிட்டவை 0.50 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன.
 நிஃப்டி 29 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 1,346 பங்குகள் ஆதாயம் பெற்றன. 556 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் சுமார் 100 புள்ளிகள் கூடுதலுடன் 17,194.50 -இல் தொடங்கி, அதிகபட்சமாக 17,220.70 வரை உயர்ந்தது. பின்னர், 17,027.85 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில், மேலும் 28.95 புள்ளிகளை (0.17 சதவீதம்) இழந்து 17,063.25-இல் நிலைபெற்றது. நிஃப்டி பட்டியலில் 23 பங்குகள் ஆதாயம் பெற்றன. 27 பங்குகள் சரிவைச் சந்தித்தன.
 ரியால்ட்டி குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை 3 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்திருந்த ரியால்ட்டி குறியீடு, புதன்கிழமை 3.15 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ் குறியீடுகள் 1 சதவீதம் உயர்ந்தன. அதே சமயம், நிஃப்டி ஆட்டோ, ஐடி, ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் சிறிதளவு வீழ்ச்சி கண்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com