சென்செக்ஸ் மேலும் 673 புள்ளிகள் முன்னேற்றம்

புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது
பங்குச் சந்தை எழுச்சி: 17,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி
பங்குச் சந்தை எழுச்சி: 17,000 புள்ளிகளைக் கடந்த நிஃப்டி

புத்தாண்டின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச் சந்தையில் எழுச்சி காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 673 புள்ளிகள் உயர்ந்து 59,855-இல் நிலைபெற்றது.
 புத்தாண்டின் முதல் வர்த்தக நாளில் அமெரிக்க சந்தைகள் சாதனை உச்சத்தை எட்டியது உலகளவில் பங்குச் சந்தைகளுக்கு சாதகமாக அமைந்தது. கடந்த பல நாள்களாகத் தொடர்ந்து முதலீடுகளை வாபஸ் பெற்று வந்த அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த திங்கள்கிழமை பங்குகளை வாங்குவதில் கவனம் செலுத்தினர்.
 இது, அவர்களின் புதுப்பிக்கப்பட்ட ஆர்வத்தின் அறிகுறியாக இருக்கும்பட்சத்தில், நிதித் துறை பங்குகள் குறிப்பாக வங்கிப் பங்குகளுக்கு தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும், கரோனா தொற்றின் மூன்றாவது அலையானது பொருளாதார நடவடிக்கைகளை பாதிக்க வாய்ப்பில்லை என்று சந்தை வட்டாரத்தில் பேசப்பட்டாலும், முதலீட்டாளர்களைப் பொருத்தவரையில் கவலைக்குரியதாகவே உள்ளது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக, மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்ததும் சந்தை ஏற்றம் பெறக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.1.84 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,489 நிறுவனப் பங்குகளில் 1,489 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 1,892 பங்குகள் ஆதாயம் பெற்றன.108 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன.551 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 9 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
 மேலும், 575 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 226 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.84 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.271.36 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 9.23 கோடியாக உயர்ந்துள்ளது.
 தொடர் எழுச்சி: காலையில் சென்செக்ஸ் 160.57 புள்ளிகள் கூடுதலுடன் 59,343.79-இல் தொடங்கி, 58,084.40 வரை கீழே சென்றது. அதன் பிறகு தொடர்ந்து எழுச்சி பெற்று அதிகபட்சமாக 59,937.33 வரை உயர்ந்த
 சென்செக்ஸ், இறுதியில் 672.71 புள்ளிகள் (1.14 சதவீதம்) கூடுதலுடன் 59,855.93-இல் நிலைபெற்றது. காலையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து இருந்தாலும், பிற்பகலுக்கு பிறகு சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. சென்செக்ஸ் தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக எழுச்சி பெற்றுள்ளது.
 என்டிபிசி அபாரம்: பிரபல மின் துறை நிறுவனமான என்டிபிசி 5.48 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவர் கிரிட், எஸ்பிஐ, டைட்டன், ரிலையன்ஸ், ஆக்ஸிஸ் பேங்க், டிசிஎஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ், கோட்டக் பேங்க், மாருதி, எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 1.50 முதல் 2.50 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபின் சர்வ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 சன்பார்மா சரிவு: அதே சமயம், பிரபல மருந்து நிறுவனமான சன்பார்மா 1.21 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், இன்டஸ்இண்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ் லேப், இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

 நிஃப்டி 180 புள்ளிகள்
 முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 979 நிறுவனப் பங்குகள் ஆதாயம் பெற்றன. 900 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 179.55 புள்ளிகள் (1.02 சதவீதம்) உயர்ந்து 17,805.25-இல் நிலைபெற்றது. காலையில் உற்சாகத்துடன் 17,681.40-இல் தொடங்கி 17,593.55 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 17,827.60 வரை உயர்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 35 பங்குகள் ஆதாயம் பெற்றன. 15 பங்குகள் மட்டுமே வீழ்ச்சி அடைந்த பட்டியலில் வந்தன.
 மெட்டல், பார்மா, குறியீடுகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர், மெட்டல், ரியால்ட்டி குறியீடுகள் 0.40 முதல் 0.85 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
 மற்ற அனைத்துத் துறைக் குறியீடுகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், பிஎஸ்யு பேங்க், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.35 சதவீதம் வரை உயர்ந்தன.
 புத்தாண்டின் இரு வர்த்தக நாள்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.5.36 லட்சம் கோடி லாபம்
 2022-ஆம் புத்தாண்டின் தொடக்கம் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியை தருவதாக அமைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு புதிய ஆண்டின் முதல் இரண்டு வர்த்தக நாள்களில் மட்டும் ரூ.5,36,139.91 கோடி அதிகரித்து ரூ.2,71,36,351.46 கோடியை எட்டியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com